Friday, August 16, 2019

தெளிவான தெரிவு

இன்றைய (17 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (யோசு 24:14-29)

தெளிவான தெரிவு

இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவின் இறப்பு பற்றி வாசிக்கின்றோம். யோசுவாவின் இறப்புச் செய்தி நீதித் தலைவர்கள் (1-2) நூலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. தன் வாழ்வின் இறுதியில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குத் தான் கூட்டிவந்த மக்களை செக்கேமில் ஒன்று சேர்க்கின்றார் யோசுவா.

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் வந்தபோது அங்கே ஏற்கனவே இருந்த மக்களோடு புரிந்த திருமணம், மற்றும் பழக்க வழக்கங்கள் வழியாக, மற்றவர்களின் கடவுளர்களையும் உள்வாங்கிக்கொள்கின்றனர். எல்லாக் கடவுளும் ஒன்றுதானே என்ற எண்ணம் கொண்டு, மற்ற கடவுளர்களைத் தங்கள் கடவுளுக்கு இணையாக்குகின்றனர். எப்போதெல்லாம் சிலைவழிபாடு அல்லது பிறதெய்வ வழிபாடு நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் அவர்களைக் கொடுiமாகத் தண்டிக்கிறார்.
இப்படி அவர்கள் தண்டனைக்கு உள்ளாகக்கூடாது என நினைக்கின்ற யோசுவா, அவர்கள் தங்களிடையே உள்ள தெய்வங்களை இன்றே விட்டுவிடுமாறு அழைப்பு விடுக்கின்றார். அவர்களுக்கு முன்மாதிரியாக, 'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்கிறார். மக்களும் யோசுவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர்.

இது இவர்களுக்கு பெரிய இழப்பாக இருந்திருக்கும். அல்லது அரை மனதாக இருந்திருக்கும். நம்முடைய சாதாரண மனித உறவுகளை விடவே மலைப்பாக இருக்கும்போது கடவுளர்களை விட்டுவிடுவது சுலபமா? ஆனால் சில நேரங்களில் நாம் கடவுளர்களை எளிதாகக் கைவிட்டுவிடுகிறோம்.

தாங்கள் பற்றிக்கொண்டிருந்த அனைத்துப் பொம்மைகளையும் ஆற்றில் தூக்கி எறிகின்றனர் மக்கள்.

இந்த மனநிலையைத்தான் சிறுகுழந்தைகளின் மனநிலை எனப் பாராட்டுகிறார் இயேசு.

இன்று நான் எடுக்க வேண்டிய தெரிவு என்ன?

அதைத் தெளிவாக எடுக்க என்னால் முடிகிறதா?


1 comment:

  1. பிற தெய்வங்களை வழிபட்டதால் இறைவனின் கோபத்திற்கு ஆளான தன் மக்களை, அத்தெய்வங்களை விட்டுவிடுமாறு கூறுவது மட்டுமின்றி “ நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் “ என்கிறார் யோசுவா. பெரியவர் செய்யும் எதையுமே தாங்களும் செய்யவேண்டுமென்று ஆவல்கொள்ளும் ஒரு குழந்தையின் மனநிலைக்கு உந்தப்பட்டவர்களாய், இஸ்ரேல் மக்களும் தங்களிடமிருந்த அனைத்து விஷயங்களையும் தூக்கி எறிவதாகச் சொல்கிறது இன்றைய வாசகம்.எனக்கு எது தேவை...எது தேவையில்லை எனும் தெளிவு என்னில் இருக்கிறதா? கேள்வி எழுப்புகிறார் தந்தை.தேவையானதைப் பற்றிக்கொள்ளவும்,தேவையற்றதை....அவை கடவுளராய் இருப்பினும் கூடப் புறந்தள்ளவும் வேண்டிய “ குழந்தை மனநிலை” க்கான வரம் கேட்போம்.வாசிக்கையில் எளிதான ஒன்றாகத் தோன்றிடினும் செயலில் இறங்கையில் நம்மைப் பின்னோக்கி இழுக்க கூடிய ஒரு விஷயம் தான்.இருப்பினும் இறைவனின் திருக்கரம் உடனிருப்பின் அனைத்தும் கைக்கெட்டும் விஷயங்களே! “என் கடவுள் யார்? நான் ஊழியம் புரிவது யாருக்கு?”.....போன்ற கேள்விகளுக்கு விடைதேட என்னைப் பணிக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete