Tuesday, August 20, 2019

முணுமுணுத்து

இன்றைய (21 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 20:1-18)

முணுமுணுத்து

எதிர்பார்ப்புக்கள் அதிகமானால் முணுமுணுப்புக்கள் அதிகமாகும். இல்லையா?

'ஆம்' என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

காலையிலிருந்து திராட்சைத் தோட்டத்தில் வெயிலையும், நாளின் சுமையையும் தாங்கிய அந்தச் சில நபர்கள் தங்களுக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் தவறில்லை. தாராளமான அந்தத் தோட்டக்காரர் நீதியானவர் என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.

ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டில் வரும் மூத்த மகன், இன்றைய எடுத்துக்காட்டில் வரும் இந்த நீண்ட நேர உழைப்பாளிகள் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பாவமாக இருக்கும். பல நேரங்களில் இவர்களை மிகவும் எதிர்மறையாகவே விமர்சிக்கிறோம். ஆனால், இவர்களின் வலி நியாயமானதே.

ஆனால், வாழ்க்கையில் எல்லாமே லாஜிக் படி நடப்பதில்லை என்பதற்கு இவர்கள் நல்ல எடுத்துக்காட்டுக்கள்.

வாழ்வின் ஆச்சர்யங்களுக்கு தயாராக இல்லாதவர்கள் வாழ்வைப் பற்றி முணுமுணுப்பார்கள்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பது திருமறைகளில் இருக்குமே தவிர வாழ்வில் நடப்பதில்லை. ஆகையால்தான், கடவுளும், 'நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' என்று காயினிடம் கேள்வியாகச் சொல்கிறாரே தவிர, 'நல்லது செய்தால் உயர்வடைவாய்' என்று உறுதியாகச் சொல்லவில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீத 9:6-15), மக்கள் கிதியோனின் மகன் அபிமெலேக்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டதை உருவகமாகச் சாடுகின்றார் யோத்தாம் என்னும் இளைய மகன். முள்செடியை மரங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிறார். சில நேரங்களில் பயத்தினால் நாம் முட்செடியைத் தேடித் தேர்ந்துகொள்கிறோம். பின் முட்செடியுடனேயே வாழப் பழகிவிடுகிறோம். முட்செடி நாம் எவ்வளவு தண்ணீர் ஊற்றி, உரமிட்டுப் பராமரித்தாலும் தன் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. ஆக, முட்செடியோடு வாழப் பழகுவதும் நல்லதே.

வாழ்க்கையின் ஆச்சர்யங்களை அதிர்ச்சியாகப் பார்க்காமல், ஆச்சர்யமாகப் பார்த்தால், வாழ்க்கையில் கருணையும் கிடைக்கும், நீதியும் கிடைக்கும் என்று ஏற்றுக்கொண்டால், நம் கைகளில் உள்ளதைப் பார்க்குமுன் அடுத்தவர் கைகளில் உள்ளதைப் பார்க்காமல் இருந்தால் முணுமுணுப்புக்கள் குறையும்.

'தோழா! நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்று கேட்கிறார் நிலக்கிழார்.

'நீ இருக்கிறவன்.நான் இல்லாதவன். நீ இடுகிறவன். நான் நீட்டுகிறவன்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே மௌனமாக வெளியேறுகின்றான் இவன்.

'ஒரு மணி நேரம் வேலை செஞ்ச எங்களுக்கும் அதே கூலிதான்!' என்று கேலி பேசுகிறான் உடன் ஊர்க்காரன்.

'கஷ்டப்படாம வந்த காசு கையில ஒட்டாது' என்று ஒப்புக்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான் இவன்.

இவன் இன்றும் நம்மிடைய இருக்கிறான். சில நேரங்களில் அவன் நீங்களாகவும் நானாகவும் இருக்கிறான்.

1 comment:

  1. இன்றையப்பதிவின் திராட்சைத்தோட்ட உவமை...எப்பொழுதுமே நெருடல்தான்.... ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும்போதும் யாருடையோ பதிலோ சமாதானம் செய்வதுபோல் இருப்பினும் அடுத்த முறை கேட்கும் போது அதே நெருடல்தான். தந்தை சொல்வது போல் “:கஷ்டப்படாம வந்த காசு கையில் ஒட்டாது” என்று முணுமுணுப்பவர்களில் நானும் கூட ஒருத்தியாக இருக்கலாம்.
    உண்மையே! வாழ்க்கையின் ஆச்சரியங்களை அதிர்ச்சியாகப்பார்க்காமல்.ஆச்சரியங்களாகப்பார்த்தால்; வாழ்க்கையில் கருணையும்,நீதியும் கிடைக்குமென்று ஏற்றுக்கொண்டால்; நம் கைகளில் உள்ளதைப்பார்க்குமுன் அடுத்தவர் கைகளில் உள்ளதைப் பார்க்காமல் இருந்தால் (எத்தனை எத்தனை ifs& buts) நம் முணுமுணுப்புகளும் குறையும். முயல்வோம்....காலில்லாதவர்களைப் பார்க்கும்போது என் காலில் செருப்பில்லையே என்று முமுணுப்பதை நிறுத்துவோம்.நம் கையில் இருப்பதை விட்டு விட்டு பறப்பதைப் பிடிக்க முயல்வதை நிறுத்துவோம். அன்றாட வாழ்வில் வெற்றிபெறும் ஒரு சூட்சுமத்தைக் கூறும் தந்தைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete