Wednesday, August 7, 2019

அவசரம்

இன்றைய (8 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (எண் 20:1-13)

அவசரம்

'ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு' என்று நம் மொழியில் பழமொழி உண்டு. ஆங்கிலத்தில், 'haste makes waste' என்கின்றனர். ஆத்திரமும் அவசரமும் இணைந்தே செல்கிறது. ஏனெனில் நம்முடைய ஆத்திரத்தில் நாம் அவசரமும் படுகிறோம். ஆத்திரத்திலும் அவசரத்திலும் நம்முடைய புத்தி வேலை செய்ய மறுக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் ஆத்திரமும் அவசரமும் அவர்களின் தலைவர்களான மோசே மற்றும் ஆரோனின் புத்தியையும் தடுமாறச் செய்யும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கும் நிகழ்வு பெரும்பாலும் உணவை மையமாக வைத்தே இருக்கிறது. 'இறைச்சி இல்லை,' 'மீன் இல்லை' என்று புலம்பியவர்கள் இன்று, தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையும் இங்கு இல்லை என்று சொல்லி, இறுதியாக, 'குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே' என்று புலம்புகின்றனர். கடவுள் மற்றும் மோசே மேல் உள்ள ஆத்திரத்தில் அவர்களுக்கு புத்தி மழுங்கிவிடுகிறது. ஆகையால்தான், பாலைநிலத்தில் நீர்ச்சத்துள்ள தாவரங்கள் சாத்தியமில்லை என்று அவர்களுடைய புத்தி யோசிக்க மறுத்துவிடுகிறது. இந்த ஆத்திரமும் அவசரமும் மோசேயையும் பாதிக்கிறது. ஆகையால்தான், 'கோலை எடுத்துக்கொள் ... பாறை தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்' என ஆண்டவர் சொல்ல, மோசே அவசரத்தில் பாறையிடம் பேசுவதற்குப் பதிலாக இரண்டு முறை அதனைக் கோலால் அடித்துவிடுகின்றார்.

மக்களின் ஆத்திரம், மோசேயின் ஆத்திரமாய் மாற, அது இப்போது கடவுளின் ஆத்திரமாக மாறுகிறது.

'நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டில் கொண்டுபோய்ச் சேர்க்க மாட்டீர்கள்' என்று மோசேயும் ஆரோனும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையமுடியாதபடி செய்துவிடுகின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆனால், ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மோசேயும் எலியாவும் இயேசுவுக்குத் தோன்றும் நிகழ்வில்தான் மோசே முதன் முதலாகவும், இறுதியாகவும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் கால் பதிக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கின்றார். 'நீர் கடவுளின் மெசியா' என்று நம்பிக்கை அறிக்கை செய்த பேதுரு, அவசரத்தில், 'ஆண்டவரே இது உமக்கு நேராது' என்று இயேசுவைக் கடிந்துகொள்ள, இயேசு அவரை, 'அப்பாலே போ சாத்தானே' என்று கடிந்துகொள்கின்றார்.

இவ்வாறாக, அவசரத்தில் இஸ்ரயேல் மக்கள், மோசே, கடவுள், பேதுரு என எல்லாருமே தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆத்திரமும் அவசரமும் நம்முடைய வாழ்வை நாம் இனிமையாகவும் முழுமையாகவும் வாழ்வதற்குத் தடையாக இருக்கின்றன.

ஆத்திரத்திலும் அவசரத்திலும் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் திரும்பவும் செய்ய வேண்டிய நிலை வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய நேரம் இரண்டாவது முறை செலவழிவதோடு, நம்முடைய ஆற்றலும் நிறையவே செலவழிகிறது. இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?

ஆத்திரமும் அவசரமும் களைவது.

ஆத்திரம் களைய வேண்டுமெனில் எதிர்பார்ப்புக்களைக் களைய வேண்டும்.

அவசரம் களைய வேண்டுமெனில் பரபரப்பைக் களைய வேண்டும்.

அத்திப்பழம், திராட்சை, மாதுளை இல்லை என்றால் என்ன? இன்று இல்லை என்றால் பரவாயில்லை, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இஸ்ரயேல் மக்கள் கொஞ்சம் கோபம் குறைத்து பொறுமை காத்திருந்தால் மோசேயின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்திருப்பார்கள்.

ஆண்டவரின் மெசியா நிலை அவரின் பாடுகள் வழியாகவே வரும் என்று பேதுரு ஒரு நொடி நினைத்திருந்தால் இயேசுவின் கடிந்துரைக்கு ஆளாயிருக்க மாட்டார்.

குறைவான எதிர்பார்ப்பு, நிறைவான பொறுமை - வாழ்வில் வெற்றி தரும்.


1 comment:

  1. இனறைய வாழ்க்கை நிலைக்கு மிக,மிகத் தேவையானதொரு பதிவு. அன்று பாண்டிய மன்ன்னிடம் இருந்த அவசரம் மதுரையையே எரிய வைத்தது என்பதும் இன்று பல இளசுகளின் அவசரம் அவர்களின் வாழ்க்கைக்கே உலை வைக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்த உண்மைகள். மக்களின் ஆத்திரம் மோசேயின் ஆத்திரமாகவும்,மோசேயின் ஆத்திரம் கடவுளின் ஆத்திரமாகவும் மாறுமெனில் எத்தனை வீரியம் கொண்டது இந்த ஆத்திரமும்,அவசரமும்? தன் திருஅவையைத் தனக்குப்பின் பாதுகாக்கப்போகும் ஒருவரைப் பார்த்து “ அப்பாலே போ சாத்தானே” என்று இயேசு கூறினாரெனில் பேதுருவின் ஆத்திர- அவசர புத்தி எத்தனை தூரம் இயேசுவை எரிச்சல் படுத்தியிருக்க வேண்டும்!நம் ஆற்றலையும்,நேரத்தையும் விரயமாக்கும் இந்த ஆத்திர- அவசரத்தைக் நம்மிலிருந்து அறவே களைய வேண்டுமென்கிறார் தந்தை. எட்டாக்கனிகளுக்காக ஏங்குவதை விடுத்து நம் வாழ்வின் இன்றைய ஆசீர்வாதங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறப்பழகுவோம்.குறைவான எதிர்பார்ப்பும்,நிறைவான பொறுமையும் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வழி சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete