Wednesday, August 14, 2019

மரியாளின் விண்ணேற்பு

இன்றைய (15 ஆகஸ்ட் 2019) திருநாள்

மரியாளின் விண்ணேற்பு

'தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையரானோரய்த் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்.' (உரோ 8:30)

குருக்களின் மாலைச் செபத்தில் மேற்காணும் இறைவார்த்தைகளே வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய கணவரை வாகன விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி, ஒரு வாரமாக வேலைக்குச் சென்று, கூலி வேலை செய்து, தன்னுடைய மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வழி தெரியாமல், தன் கணவனின் இழப்பையும் காணாமல் தன் கணவனின் கல்லறைக்குச் சென்று தன்னையே தீக்கு இரையாக்கினாள் என்ற செய்தியை இன்று காலை வாசித்தேன்.

இந்தப் பெண் செய்தது நியாயமா? நியாமில்லையா? என்று சமூக வலைதளங்களில் நிறையப் பேர் வாதாடிக்கொண்டிருந்தனர்.

என்னதான் நாம் வாதாடினாலும் இப்பெண் நமக்குத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

இன்று ஒரு பெண்ணின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

ஒரு பெண்ணால் அடைக்கப்பட்ட விண்ணகத்தின் வாயில்களை இன்னொரு பெண்ணால் திறக்கக் கடவுள் திருவுளம் கொண்டார் என்கிறது இன்றைய அழைப்புப் பல்லவி.

தீக்கிரையான அந்தப் பெண் அந்த முடிவை எடுக்க என்ன காரணம்?

தன்னையும் தாண்டித் தன் வாழ்க்கையை அவளால் ஏன் பார்க்க முடியவில்லை?

மரியாளின் விண்ணேற்பு தரும் புரிதல் இதுதான்: கொஞ்சம் விரிவாக அல்லது அகலமாகப் பார்ப்பது.

'எல்லாரும் இறக்கத்தானே போகிறோம். சும்மா இருந்தா என்ன?' என்று கேட்பதும் தவறு.

'சும்மாதான் இருக்கிறோம். இறந்தா என்ன?' என்று கேட்பதும் தவறு.

இப்போது இருக்கின்ற நிலையைவிட இன்னொரு நிலை நன்றாக இருக்கும் என்ற எதிர்நோக்கே நம்மை உந்தித் தள்ளுகிறது. விண்ணகம் பற்றிய எதிர்பார்ப்பே நம்மை மண்ணகத்தில் நன்றாக வாழச் செய்கிறது.

ஆக, நாளையைப் பற்றிய எதிர்நோக்கு உள்ளவரே வாழ முடியும். அந்த எதிர்நோக்கு நேர்முகமாக இருந்தால்தான் ஒருவர் வெற்றியாளராக முடியும்.

மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை நேர்முகமாகப் பார்த்தார்.

சத்திரத்தில் இடமில்லாத நிலையில் இந்த உலகமே தன் வீடு என்று பார்த்தார்.

திராட்சை இரசம் தீர்ந்து போன வெற்றுக் கற்சாடிகளை திராட்சை இரசம் ததும்பும் குடுவைகளாகப் பார்த்தார்.

கல்வாரியில் தன் மகனுடைய இறப்பில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மீட்பைப் பார்த்தார்.

நேர்முகமாகப் பார்த்தலும், எதிர்நோக்குதலும் வாழ்வை நீட்டிக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இல்லாத ஒரு நாட்டை நம் முன்னோர்கள் எதிர்நோக்கியதால்தான் விடுதலைக்காக  அவர்களால் போராட முடிந்தது.

கொஞ்சம் நேர்முகப்பார்வை. இன்னும் கொஞ்சம் எதிர்நோக்கு. நிறைய பொறுமை.

இதுவே விடுதலை. இதுவே விண்ணேற்பு.

1 comment:

  1. எத்தனை எத்தனை கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன இனறையப் பதிவில்! ‘எல்லாரும் இறக்கத்தானே போகிறோம்,சும்மா இருந்தா எனன? ‘ என்று நினைப்பதும்,’ சும்மாதானே இருக்கிறோம்.இறந்தா என்ன? என்று நினைப்பதும்,...இரண்டுமே தவறு.அருமை!வாழ்க்கையை அகலமாக,விரிவாகப் பார்த்த மரியாவால் விண்ணேற்பு அடைய முடிந்ததென்றால், தன்னையும் தாண்டிய தொலைநோக்குப்பார்வை இல்லாத அந்தப்பெண்ணால் தீக்கிரையாகத்தான் முடிந்தது. பார்வை எவ்விதமோ அவ்விதமே வாழ்க்கை என்று சொல்கிறது மரியாளின் விண்ணேற்பு.மரியாளின் நேர்முகப்பார்வையையும்,எதிர்நோக்குதலையும் நமக்கு மெய்ப்பிக்க தந்தை ஒரு ஆராய்ச்சியே செய்துள்ளார்! வாழ்த்துக்கள்! மரியாவுக்கு கொடையாக்க் கிடைத்த பொறுமையுடன் கூடிய எதிர்நோக்கு நமக்கும் கிடைக்க வேண்டுவோம். நம்மை முன்குறித்து அழைத்தவர் நம்மைத் தமக்கு ஏற்புடையவராக்கித் தம் மாட்சியில் பங்கு கொள்ளச்செய்வார் எனும் எதிர்நோக்கு நம் வாழ்க்கையை வாழும் வகையில் வாழ வழி செய்யட்டும்.தந்தைக்கும்,அனைவருக்கும் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete