Tuesday, August 6, 2019

உளவு பார்த்தல்

இன்றைய (7 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (எண் 13:1-2,25-33, 14:1,26-30,34-35)

உளவு பார்த்தல்

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி ஏறக்குறைய கானான் நாட்டிற்கு அருகில் வந்துவிட்டனர். வுhக்களிக்கப்பட்ட நாடு என்பது இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் ஒரு தட்டில் வைத்து வழங்கிய ஒரு கொடை அல்ல. மாறாக, அதை அவர்களே வென்று உரிமையாக்கிக் கொள்ளும் கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. இப்பின்புலத்தில் குலத்திற்கு ஒன்று என ஆள்களைத் தெரிவு செய்து 12 பேரை உளவுபார்க்க அனுப்புகின்றார் மோசே.

அவர்கள் நாற்பது நாள்கள் உளவு பார்க்கின்றனர்.

உளவு பார்த்தல் ஒரு முக்கியமான வேலை. வேற்று நாட்டில் வேற்று உருவில் தங்கி சொந்த நாட்டிற்குத் தரவுகளை அனுப்ப வேண்டும். ஆள்மாறாட்டம், வேடம், நம்பிக்கைத் துரோகம் என பல விடயங்கள் இதில் அடங்கியிருந்தாலும், போர் தந்திரத்தில் ஒன்றாக இது கருதப்படுவதால் இப்படிச் செய்வது தர்மம் என்றும் கருதப்பட்டது. இன்றும் ஒரு நாடு மற்றொரு நாட்டை உளவு பார்க்க ஆள் அனுப்புகிறது. மேலும், இன்று நம்முடைய கணிணியை வேறொங்கோ இருந்து ஒருவர் உளவு பார்க்க முடியும். நாம் கைகளில் தூக்கித் திரியும் அலைபேசிகளைக் கொண்டும் மற்றவர்கள் நம்முடைய இருப்பு, இருத்தல், இயக்கம் ஆகியவற்றையும் உளவுபார்க்க முடியும்.

மோசே அனுப்பிய 12 பேரில் 2 பேர் நேர்முகப் பார்வையோடும், 10 பேர் எதிர்மறைப் பார்வையோடும் வீடு திரும்புகின்றனர்.

'நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக்கொள்வோம். ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிட முடியும்' என்று சொல்கின்றனர் 2 பேர் (யோசுவா, காலேபு).

'நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது ... அவர்கள் நம்மைவிட வலிமை மிக்கவர்கள் ... தன் குடிமக்களையே அது விழுங்குகிறது ... மனிதர்கள் நெடிய உருவத்தினர் ... அரக்கர்கள் ... அவர்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள்' என்று சொல்கின்றனர் 10 பேர்.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தப் பத்துப் பேரின் சொற்களைக் கேட்டவுடன் மக்கள் அழுது புலம்ப ஆரம்பிக்கின்றனர். இரவு முழுவதும் அழுகின்றனர்.

அதிகம் பேர் சொல்வதையே உண்மை என எண்ணும் பக்குவம் அன்றும் இருந்திருக்கிறது. 'எல்லாரும் சரி' என்று சொல்லிவிட்டால் அது சரி ஆகிவிடுமா?

கடவுள் மக்களைக் கடிந்துகொள்கின்றார். மேலும் எதிர்மறையாக எண்ணிய யாரும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் வரமுடியாது என்று சபிக்கின்றார்.

ஏன்?

இவர்கள் கடவுள் தங்களோடு இருப்பதை மறந்துவிட்டு, தங்களின் வலிமையை மட்டுமே முன் நிறுத்தினர். இதுதான் இவர்களுடைய பிரச்சினை. ஆனால், யோசுவாவும், காலேபும் இறைவன் தங்களோடு இருப்பதால் எளிதில் வென்றுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இந்த நாள்களில் எனக்குத் தோன்றுவதும் இதுதான்.

இறைவன் இல்லாத எதுவும் வெறுமையாக அல்லது சுமக்க முடியாத பளுவாக மாறிவிடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிற பெண்ணும், எல்லாமே எதிர்மறையாகத் தோன்றினாலும், நேர்முகமாக இயேசுவை மட்டும் பற்றிக்கொள்கின்றார்.

இன்று என்னுடைய பார்வை நேர்முகமாக இருக்கிறதா? அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

என்னால் இறைவனின் கரத்தை எல்லாவற்றிலும் பார்க்க முடிகிறதா?

எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நான் இறைவனைப் பிடித்துக்கொள்கிறேனா?


1 comment:

  1. இன்றையக் கூட்டு வாழ்க்கையில்...குழு வாழ்க்கையில்...குடும்ப வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுக்கு சாதகமாக இருவர் இருப்பின், பாதகமாக வேறு இருவர் இருப்பது நம் அனுபவமே.”என்னால் எல்லாமே முடியும்” என நினைக்க ஒருவரெனில்,” அவரால்” மட்டுமே முடியுமென நினைக்க வேறொருவர்.யார் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்...என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது? இறைவனை மையப்படுத்தியதா? இல்லை என்னை மையப்படுத்தியதா?....நம்மையே கேள்வி கேட்க அழைக்கப்படுகிறோம்.தன்னைச் சுற்றிய எதிர்மறை விஷயங்கள் அத்தனைக்கும் மத்தியிலும் நேர்முகமாக இயேசுவைப்பற்றிக்கொண்ட இன்றைய நற்செய்திப் பெண் நம் கண்களைத் திறக்கட்டும்.நாம் தொடும் அனைத்திலும் இறைவனின் கரத்தைப் பார்ப்பதையும் தாண்டி, அவரின் கரங்களைப் பற்றிக்கொள்ள வழி சொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete