Sunday, August 18, 2019

விட்டகலவில்லை

இன்றைய (19 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (நீத 2:11-19)

விட்டகலவில்லை

கடந்த சில நாள்களாக நாம் வாசித்து வந்த யோசுவா நூல் முடிந்து அதன் தொடர்ச்சியாக நீதித் தலைவர்கள் நூலுக்குள் நாம் நுழைகிறோம். நீதித் தலைவர்கள் என்பவர்கள் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளோ அல்லது நடுவர்களோ அல்ல. மாறாக, இவர்கள் அவரவர் குலங்களின் தலைவர்கள். போர்த்தளபதிகள் அல்லது போராளிகள்.

நீதித் தலைவர்கள் நூலில் உள்ள நிகழ்வுகள் எல்லாம் 'பாவ வட்டம்' என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. அது என்ன 'பாவ வட்டம்'?

இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாடு செய்து கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்கின்றனர் - பாவத்திற்குத் தண்டனையாக கடவுள் எதிரிகளை அனுப்புகின்றார் - எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு மக்கள் கடவுளிடம் குரல் எழுப்புகின்றனர் - கடவுள் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு நீதித் தலைவர்களை அனுப்புகின்றார் - எதிரிகள் அழிந்து நிலம் அமைதி பெறுகிறது - மீண்டும் அவர்கள் பாவம் செய்கின்றனர்.

இப்படியாக அவர்களுடைய பாவ வட்டம் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.

பாவம் என்பது நீரில் இருக்கும் பாசி போல. நீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற ஒருவர் அதைப் பிடிக்கிறார் என வைத்துக்கொள்வோம். சரியான நேரத்தில் அதை அவர் விடவில்லை என்றால் அது அவரைப் பிடித்துக்கொள்ளும்.

'அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் அவர்கள் விட்டகலவில்லை' என்று பதிவு செய்கிறார் ஆசிரியர். நீதித் தலைவர்கள் நூலில் சிலைவழிபாடுதான் மிகப்பெரிய தீமையாகப் பார்க்கப்படுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 19:16-22) நிறைவுள்ளவராக விரும்பி இயேசுவிடம் வருகின்ற செல்வரான இளவல், இயேசுவின் பதில் கேட்டு வருத்தத்தோடு செல்கின்றார். பாதி வழி வந்த அவரால் மீதி வழி வர இயலவில்லை. ஏனெனில், அவர் 'சொத்து' என்னும் சிலைவழிபாடு செய்துவந்தார்.

என்னை இறைவனிடமிருந்து திருப்பும் எல்லாமே சிலைதான். அப்படி நான் திரும்பும் ஒவ்வொரு பொழுதும் நான் சிலைவழிபாடு செய்கிறேன். நானாக மீண்டும் அவரிடம் திரும்பாத பட்சத்தில் அவர் வம்படியாக என் கழுத்தைப் பிடித்துத் திருப்புகிறார் - அவருடைய நேரத்தில், இடத்தில்.

இன்று நான் எவற்றை நோக்கித் திரும்பி நிற்கிறேன்?

சிலைகளை நோக்கித் திரும்பினால் முகவாட்டமும் வருத்தமும்தான் மிஞ்சும்.

அவருடைய இரக்கமே என்னை மீண்டும் அவரிடம் திருப்பும்.


1 comment:

  1. என்னை என் கடவுளிடமிருந்து பிரித்திழுக்கும் எந்தவொரு பழக்கமுமே ‘சிலை வழிபாடே’ என்று சொல்லும் ஒரு பதிவு.அவரை விட்டுத்தள்ளி நிற்கும் ஒவ்வொரு அடியும், என்னை பாவமெனும் பாசிக்கு நான் கையளிக்கிறேன் என்பதும் எனக்கு ஜாக்கிரதை உணர்வைத் தூண்டும் ஒரு விஷயம்.இயேசுவிடம் பாதிவழி வந்த இளவலை மீதி வழி வரவிடாமல் பின்னுக்குத் தள்ளுவதும் அவனிடமிருந்த செல்வம் எனும் பாசிதான்.இவ்வுலகின் ஆடம்பரங்கள்,பணம்,பட்டம்,பதவி,புகழ் போன்ற பாசிகள் நம்மைக்கீழ் நோக்கி மூழ்கடிக்கையில், நாம் மேல் நோக்கிப் பார்க்கும் ‘இறை இரக்கமே’ நம்மை மேல் நோக்கிக் கரை சேர்க்கட்டும். “ நீதித்தலைவர்கள்” மற்றும் “பாவ வட்டம்” போன்ற வார்த்தைகளுக்கு புரிதல் தந்த தந்தைக்கு நன்றிகள்! இந்த வாரம் இனிதே அமைந்திடத் தந்தைக்கும்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete