Wednesday, August 1, 2018

வலை

நாளைய (1 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 13:47-53)

வலை

விண்ணரசு பற்றிய இறுதி உவமையை நாளை நற்செய்தி வாசகத்தில் முன்மொழிகிறார் இயேசு.

விண்ணரசை கடலில் வீசப்படும் வலைக்கு ஒப்பிடுகின்றார் இயேசு. கடலில் வீசப்படும் வலையில் மீன்கள், பாசிகள், இறந்த மீன்கள், குப்பைகள் என அனைத்தும் சிக்கும். இப்படி சிக்குவதை வலையை வீசுபவர் கரைக்குக் கொண்டுவந்து தரம் பிரிக்கிறார்.

அவரின் தீர்ப்பே இறுதியானது.

ஒன்றை நல்லது என்றும், மற்றதை அல்லது என்றும் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு. மேலும், வலையில் சிக்கியவை, 'எங்களை மீண்டும் கடலிலேயே போட்டுவிடுங்கள்' என்று முறையிடவும் முடியாது.

அவரே வலையை விரிக்கின்றார். அவரே வலையை வாருகின்றார். அவரே அமர்கின்றார். அவரே பிரிக்கின்றார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் நம்மைத் தேர்ந்துகொள்ளும் வண்ணம் நம்மையே தகுதியாக்கிக்கொள்வதுதான்.

நாளைய முதல் வாசகத்தில் இதையொட்டியே கருத்தே பதிவுசெய்யப்படுகின்றது.

குயவனின் வீட்டிற்குள் செல்லுமாறு அழைக்கப்படுகின்றார் எரேமியா.

பானையைச் செய்யும் குயவன், களிமண்ணின் ஒத்துழைப்பை பொறுத்து அதன் வடிவத்தை மாற்றிவிடுகின்றார். 'என்னை ஏன் இப்படிச் செய்தாய்?' என பானை குயவனிடம் கேட்க முடியாது. பானை எந்த வடிவத்திற்குத் தன்னையே கையளிக்கிறதோ அந்த வடிவத்தையே அது பெறுகிறது.

ஆக, இறைவனின் கையில் நாம் நம்மை எப்படி ஒப்புவிக்கிறோமோ அப்படியே நாம் நம்மையே திரும்ப நம் வாழ்வில் பெற்றுக்கொள்கிறோம்.

1 comment:

  1. " அவரே வலையை விரிக்கிறார்; அவரே வலையை வாருகிறார்; அவரே அமர்கிறார்; அவரே பிரிக்கிறார்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் நம்மைத் தேர்ந்து கொள்ளும் வண்ணம் நம்மைத்தகுதியாக்கிக் கொள்வதுதான்" எனும் நற்செய்தி வாசகத்தின் வரிகளும்...." பானை எந்த வடிவத்திற்குத் தன்னைக்கையளிக்கிறதோ அந்த வடிவத்தையே அது பெறுகிறது" எனும் முதலாம் வாசகத்தின் வரிகளும் " இறைவன் கையில் நாம் நம்மை எப்படி ஒப்புவிக்கிறோமோஅப்படியே நாம் நம்மைத்திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்" எனும் தந்தையின் வரிகளும் "நான் ஒரு குயவன் கையில் களிமண்ணாய் ...இறைவனின் வலையில் மீனாய் இருந்தால் எத்துணை நலம்!" என யோசிக்க வைக்கின்றன.அர்ச்சனை மலராய் இறைவனிடம் என்னையே நான் அர்ப்பணமாக்கத்தூண்டும் வரிகளுக்காகத் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete