Thursday, August 9, 2018

தொண்டரும் இருப்பார்

நாளைய (10 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (யோவா 12:24-26)

தொண்டரும் இருப்பார்

தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் இம்மண்ணில் இல்லாத முதல் நாள் இந்நாள். வங்காள விரிகுடாக்கரையில் துயில்கொள்ளும் இவருக்கு நம் இதய அஞ்சலி.

நேற்றைய தினம் ராஜாஜி அரங்கில் புறப்பட்ட இவருடைய இறுதிப்பயணம் மெரினாவை வந்தடைந்தபோது ஏறக்குறைய எங்கும் மனிதத் தலைகளே தெரிந்தன. 'தலைவா, தலைவா' என்ற கோஷங்கள் வேறு. 'திரும்பி வா தலைவா!' என்று மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தவர்கள் சோகத்தோடு தலைவரை வழியனுப்பினார்கள்.

தலைவர் இருக்கும் இடத்தில் தொண்டரும் இருக்க வேண்டும் என்பது அரசியல் நியதி.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் இதையே சொல்கிறார்:

'எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்.
நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்' என்கிறார் இயேசு.

தங்கள் தூக்கம் மறந்து, தங்கள் குடும்பம் மறந்து, தங்கள் வேலை மறந்து தங்கள் தலைவருக்காகக் காத்திருந்த தொண்டர்கள் ஏறக்குறைய வீடு திரும்பியிருப்பார்கள். தலைவர் இருக்கும் இடத்தில் இனி அவர்களுக்கு வேலையில்லை. இனி இவர்கள் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலும் இருப்பார்கள். அரசியலில் தொண்டர் நிலை என்பது குறுகிய காலம் மட்டுமே இருக்கக் கூடியது. ஏனெனில், தொண்டர்கள் யாவரும் சீக்கிரம் தலைவர் ஆகவேண்டும் எனவே இங்கு விரும்புவார்கள்.

இயேசு சுட்டிக்காட்டும் தொண்டர்நிலை எப்படிப்பட்டது?

இயேசு காட்டும் தொண்டர்நிலை முடிவற்றது. அந்த நிலையை ஏற்க ஒருவர் நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவெடுத்தபின் திரும்பிச் சென்றுவிட முடியாது. மேலும், இயேசு இருக்கும் இடத்திலேயே அவர் என்றும் இருக்க வேண்டும். அவரின் மதிப்பீடுகள் இவரின் மதிப்பீடுகளாக, அவரின் செயல்கள் இவரின் செயல்களாக இருத்தல் வேண்டும்.

மேலும், இந்த நிலையில் ஒருவர் 'மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ' இருக்க முடியாது. மாறாக, 'முகமலர்ச்சியோடுதான்' இருக்க வேண்டும்.

நாளைய நாம் கொண்டாடும் தூய லாரன்ஸ் தன் தலைவரைப் போல இருக்க விரும்பினார். தன் தலைவர் என்னும் கோதுமை மணி இறந்ததுபோல தானும் இறக்க விரும்பினார். தன் தலைவரை இறப்பிலும் பின்பற்ற விரும்பினார்.

ஒரு சிறிய இடத்தில், சிறிய அளவு மக்களை ஆட்சி செய்த தலைவருக்கே தொண்டர்கள் இவ்வளவு என்றால், இயேசுவுக்கு எவ்வளவு தொண்டர்கள் என நாம் யோசிக்கலாம்!

அவருக்குத் தொண்டர்கள் குறைவே!

ஏனெனில் அவர் முன்வைக்கும் விதிமுறைகள் பல.

மேலும், அதன் வெகுமதியும் பல.


4 comments:

  1. " எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப்பின் பற்றட்டும்
    நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்"
    தந்தையின் அழகான பதிவுக்குக் கலைஞரின் இறப்பையும்,அவரது தொண்டர்களையும் துணைக்கழைத்திருப்பது அவரது சமயோசித புத்தியைக்காட்டுகிறது.இவ்வுலகத் தலைவர்களின் தொண்டர்கள் போலல்ல இயேசுவின் தொண்டர்கள்; அவர்களுக்கென்று " தனித்தன்மை" இருக்கிறது என்கிறார் தந்தை." முக மலர்ச்சி" தான் இவர்களுக்கு முதல் இலக்கணம் என்று புரிகிறது.இவ்வுலகத்தலைவர்களுக்கு போல்ல்லாது இயேசுவுக்குத் தொண்டர்கள் குறைவாக இருக்கலாம். இருக்கட்டுமே! விரல் விட்டு எண்ணக்கூடியவர்களேயானாலும் இவர்கள் புனித இலாரன்சின் பாணியில்,புதைத்தாலும் பொங்கி வரும் கோதுமை மணியாக, புடம் போட்டத் தங்கங்களாக மிளிர்வர் என்பதில் சந்தேகமில்லை.விதிமுறைகளைத் தாண்டி வரும்போது இவர்களுக்கு 'வெகுமதியும் பல' என்பது நிச்சயமே! இயேசுவின் தொண்டர்களின் பிரதிநிதியாக தந்தை தரும் அழகானதொரு பதிவு இன்னும் அநேகரைத் தலைவன் பக்கம் இழுக்கட்டும்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Good Reflection Yesu.

    ReplyDelete
  3. தலைவர் - தொண்டர் பற்றிய கருத்துக்கள் மிகவும் அருமை.

    ReplyDelete