Thursday, August 30, 2018

எங்கள் விளக்குகள்

நாளைய (31 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 25:1-13)

எங்கள் விளக்குகள்

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள்.
அவர் மறுமொழியாக, 'எனக்கு உங்களைத் தெரியாது' என்றார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் பத்துக் கன்னியர் அல்லது பத்து தோழியர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். விளக்குகள் எரிந்து கொண்டிருந்த ஐந்து தோழியருக்கு கதவுகள் திறக்கப்படுகின்றன. மற்ற ஐவருக்கும் கதவுகள் மூடப்படுகின்றன. இறுதியாக, 'விழிப்பாயிருங்கள்' என்ற செய்தி தரப்படுகிறது.

இந்த உவமையை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு மணமகன் மேல் தான் கோபம் வரும்.

'ஏன் தம்பி, நீ லேட்டா வந்துட்டு, இருக்குற ஆளையெல்லாம் விரட்டிக்கிட்டு இருக்கியே!' என்று மணமகனைக் கேட்கத் தோன்றுகிறது.

மேலும், தோழிகளை 'அறிவிலிகள்,' 'முன்மதியுடைவர்கள்' என்று லேபிள் பதிப்பதும் தவறே. லேபிள்கள் நாம் கடையில் பார்க்கும் பொருள்களுக்குத்தானே தவிர, நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு அல்ல. இல்லையா?

மேலும், 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்' என முன்மதியுடையவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட தன்னலம் கொண்டவர்களுக்குத்தான் மணமகன் தன்னுடன் இருக்க இடம் தருவார் என்றால், அப்படிப்பட்ட இடம் வேண்டாம் என்றே தோன்றுகிறது.

மேலும், 'நீங்கள் போய் வணிகரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்' என முன்மதியுடைவர்கள் அட்வைஸ் கொடுக்கிறார்கள். இவர்கள் இப்படி ஓஸியாக அட்வைஸ் கொடுப்பதற்குப் பதிலாக கொஞ்சம் எண்ணெய் கொடுத்திருக்கலாம். வணிகரிடம் போய் வாங்கலாம். ஆனால், வாங்குவதற்குப் பணம் இல்லை என்றால் என்ன செய்வது? சில நேரங்களில் நாம் பிறருக்கு கொடுக்கும் அறிவுரைகூட இப்படித்தான். யாருக்கும் பயன்தராமல் இருக்கும்!

இப்படி பல எண்ணங்களை உருவாக்கும் இந்த உவமை எனக்கு எப்போதும் நெருடலாகவே இருக்கின்றது. மணமகனின் தாமதத்தால் - ஒரு ஆணின் தாமதத்தால் - சில இளம் பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இது. அந்த இரவில் அந்தப் பெண்கள் எங்கே கடையைத் தேடி அலைந்திருப்பார்கள்? 'போடா, நீயும் உன் கல்யாணமும்' என்று தங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தால் மணமகன் என்ன செய்திருப்பார்?

மேலும், முன்மதியோடு இருக்க நிறைய பணம் வேண்டும். விளக்கு வாங்க, விளக்கிற்கு எண்ணெய் வாங்க, எண்ணெய்க்கு குடுவை வாங்க - எல்லாவற்றிற்கும் பணம் வேண்டும். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? முன்மதி என்ன அவ்வளவு பெரிய மதிப்பீடா? 'அன்றைய தொல்லை அன்றைக்கு போதும்' என்று சொன்ன ஆண்டவர், 'நாளைக்கு சேர்த்து வைக்கும் முன்மதி' பற்றி பேசுவது ஏன்?

நிற்க.

உவமையை நாம் ஆராய்வதை விடுத்து இருப்பதை போல எடுத்துக்கொள்வோம்.

அவர் மணமகன்.

அவர் அப்படித்தான் செய்வார்.

அவர் தாமதிக்கலாம்.

ஏனெனில் அவர் கடவுள்.

அவர் நினைத்தால் நாம் வெறுமையாக இருந்தாலும் நம்மைத் தழுவ முடியும் - அகுஸ்தினாரை தழுவிக்கொண்டதுபோல.


2 comments:

  1. Super Reflection Yesu

    ReplyDelete
  2. 10 கன்னியர் உவமை.... எல்லாவற்றையுமே கோணலாகப் பார்ப்பதற்கும் ஒரு மதி தேவை.அது முன்மதியா- பின்மதியா தெரியவில்லை. தந்தையிடம் நிறையவே இருக்கிறது. என்னிடம் இருப்பது எனக்கே பற்றாது எனத் தெரிந்தும் நான் எப்படி அடுத்தவருக்குத் தர முடியும்? எனக்குமின்றி உனக்குமின்றிப் போவதால் யாருக்கு என்ன இலாபம்? அதை நம்மிடம் எண்ணெய் வாங்கியவர் கூட ஒத்துக்கொள்ள்மாட்டார். ஆனாலும் தந்தையின் இறுதி வரிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. “அவர் நினைத்தால் நாம் வெறுமையாக இருந்தாலும் நம்மைத் தழுவ முடியும்- அகுத்தினாரைத் தழுவிக்கொண்டது போல”. அப்பீலே இல்லை. எதிராளியைக் குழப்பிவிட்டுப் பின் தனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வதில் தந்தை கில்லாடிதான்.. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete