Friday, August 31, 2018

பாரும் உம்முடையது

நாளைய (1 செப்டம்பர் 2018) நற்செய்தி (மத் 25:14-30)

பாரும் உம்முடையது

விவிலிய மாதம், மாதாவின் பிறப்பு விழா மாதம் எனப்படும் செப்டம்பர் மாதத்தை நாம் தாலந்து எடுத்துக்காட்டுடன் தொடங்குகிறோம்.

தாலந்து எடுத்துக்காட்டு பல நேரங்களில் 'நம் தாலந்தைப் பெருக்குவது,' அல்லது 'நம் கொடைகளை பெருக்குவது' என்ற பொருளில்தான் விளக்கப்படுகிறது. ஆனால், இது தனிமனிதரின் கொடைகளையோ, அல்லது திறமைகளையோ பற்றியது அல்ல. மாறாக, இது விண்ணரசு பற்றியது. இந்த எடுத்துக்காட்டின் வழியாக விண்ணரசின் மறைபொருள்தான் விளக்கப்படுகிறது.

நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் பணியாளர்களை அழைத்து அவரவர் திறமைக்கு ஏற்ப ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகளைக் கொடுத்துவிட்டு பயணம் செய்கிறார். இவர்கள் யாரிடமும் தாலந்தை வைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லப்படவில்லை.  இருந்தாலும், ஐந்து பெற்றவர் வாணிகம் செய்து ஐந்தும், இரண்டு பெற்றவர் இரண்டும் பெருக்குகின்றனர். அனால், ஒன்று பெற்றவர் நேரே போய் நிலத்தைத் தோண்டி தலைவரின் பணத்தைப் புதைத்து வைக்கிறார். திரும்ப வந்த தலைவர் கணக்கு கேட்கிறார். ஐந்தை ஐந்தாக, இரண்டை இரண்டாகப் பெருக்கியவர்களுக்கு தலைவர் தன் மகிழ்ச்சியில் பங்கு தருகிறார். நம் கதாநாயகர் தண்டிக்கப்படுகிறார்.

மூன்றாம் பணியாளர் எதற்காக தன் பணத்தைப் பெருக்கவில்லை.

தன் தலைவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுவிட்டார் என்ற கோபமா? அல்லது

'நான் உழைத்து இவருக்குக் கொடுக்க, இவர் கொஞ்சம் பிச்சை போடுவார், நான் வாங்கிக்கொள்ள வேண்டுமா?' என்ற ஆதங்கமா?

மூன்றாம் பணியாளர் தலைவருக்குக் கெடுதல் ஒன்றும் செய்யவில்லையே? தாலந்தை செலவழிக்கவோ, அல்லது அழித்துவிடவோ இல்லையே? தான் பெற்றதை அப்படியே கொடுத்துவிட்டாரே!

'வட்டிக்கடைக்காரரிடம் கொடுக்கச் சொல்லி தலைவர் சொல்வது' - அவரை ஒரு முதலாளித்துவ நபராகவே நமக்கு முன்வைக்கிறது. ஏன் எல்லாரும் தாலந்தைப் பெருக்கியே ஆகணுமா? அப்படி என்ன கட்டாயம்? 'இன்னும் வேணும், இன்னும் வேணும்' என்று சொல்வது முதலாளித்துவ மனநிலை இல்லையா?

மேலும், 'விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர், தூவாத இடத்தில் சேகரிப்பவர்' என்ற வார்த்தைகளில் தலைவரின் இயல்பு நமக்குச் சொல்லப்படுகிறது. அதாவது, தான் நினைப்பதை செய்பவர் தலைவர். இப்படிப்பட்ட தலைவருக்குரியதை அப்படியே கொடுத்து விடுகிறார் மூன்றாம் பணியாளர்.

மூன்றாம் நபரின் மனதைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் தன் தலைவரைத் திருப்திப்படுத்த விரும்பாமல், தன் நலன், தன் குடும்பம் என்பதில் அக்கறை கொள்கிறார். 'அடுத்தவரை நான் ஏன் திருப்திப்படுத்த வேண்டும்?' என்ற அவருடைய வாழ்வியல் பாடம் எனக்குப் பிடித்திருக்கிறது. பல நேரங்களில் நம் வாழ்வு அடுத்தவரைத் திருப்திப்படுத்துவதிலும், அடுத்தவர் நமக்குக் கொடுத்த தாலந்தை இன்னும் பெருக்கி, கொடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், அந்த மகிழ்ச்சியில் அவர் கொஞ்சம் நமக்கு பிய்த்துப் போட அந்த மகிழ்ச்சியில் நாம் திருப்திப்படுத்தவும் நினைப்பது சால்பன்று. 'என் வாழ்க்கை, என் மகிழ்ச்சி, பணியாளனாய் இருந்தாலும் நானும் தலைவனே' என்ற நிலையில் இருப்பதும் நல்லதுதானே.

கலைஞர் கருணாநிதி அவர்கள் இறந்தபோது அவருக்கு செய்யப்பட்ட இறுதிச் சடங்கைப் பார்த்துவிட்டு, என் நண்பர், 'என்ன ஒரு மகிமையான இறப்பு' என்றார். அடுத்த இரண்டு நாள்களில் நான் திருச்சியில் ஒரு இறப்புக்குச் செல்ல நேரிட்டது. 'யாரும் இல்லாத பிணம். கழுத்தில் சிலுவை இருந்ததால் கிறிஸ்தவர் என்று நினைத்து உங்களை அழைத்தோம்' என்று காவல்துறை ஆய்வாளர் அடக்கச் சடங்கை நடத்தச் சொன்னார். இன்று என்னவோ, எனக்கு இறந்த இரண்டு பேரும் கண்முன் வருகின்றனர். கலைஞர் தன் தாலந்தை ஐந்தை, ஐந்து லட்ச கோடியாக பெருக்கியிருக்கலாம். ஆனால், இவர் எதுவும் இல்லாமல், யாரும் இல்லாமல், இங்கே இறந்துகிடக்கிறார். இவர் ஒரு தாலந்தும் ஈட்டாததால் இவர் மகிமையாக இறக்கவில்லை என்ற பொருளா? சில நேரங்களில் நம் கார்பரேட் மூளை வெற்றி என்பதை அதிகம் ஈட்டுதல் என்ற பொருளில் வைத்திருப்பது ஆபத்தானது.

நிற்க.

எங்கேயோ தொடங்கி, எங்கேயோ போய்விட்டோம்.

விண்ணரசு பற்றி அப்படி என்னதான் தாலந்து எடுத்துக்காட்டில் சொல்லப்படுகிறது?

'நம்பிக்கைக்குரியவராய் இருத்தல்'

'பணியாளர் என்றால் பணியாளர் போல இருத்தல்'

'தலைவனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என எண்ணுதல்'

1 comment:

  1. " தாலந்தின்" உவமை. என்றுமே ஒரு நெருடலை ஏற்படுத்தும் உவமை.மூன்றாவது பணியாளரைப்பற்றிக் குறிப்பிடும் தந்தை என் வாழ்க்கை, என் மகிழ்ச்சி,நானும் தலைவனே என்று நினைப்பதில் தப்பில்லை என்கிறார்.ஆனால் நம்மில் பத்துக்கு ஒன்பது பேரை எடுத்துக்கொண்டால் யாரோ ஒருவருக்கு சம்பாரித்துக்கொடுக்கும் ஒரு பங்கில் தானே வாழ்க்கை நடத்துகிறோம்!...அது அரசாங்க வேலையாக இருப்பினும் கூட.அப்புறம் ஏன் நம் உழைப்பிற்காக்க் கிடைக்கும் ஊதியத்தை " தலைவர" பிய்த்துப்போட்டதென்று இகழ்ச்சியாகப் பார்க்க வேண்டும்?.தலைவர்" விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர்; தூவாத இடத்தில் சேகரிப்பவர்" எனும் காரணத்திற்காக அவர் ஒன்றை இரண்டாக்க வில்லை என்பதை ஒத்துக்கொள்ளும் என்னால் முந்தைய காரணத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.இன்னொரு விஷயமும் விளங்க வில்லை." நம்பிக்கைக்குரியவராய் இருத்தலும்,பணியாளர் என்றால் பணியாளர் போல இருத்தலும்,தலவனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என எண்ணுதலுமே ஒரு பணியாளனின் இலக்கணமெனில் அந்த மூன்றாவது பணியாளன் அதைச் செய்யாததும் அவன் தவறுதானே!
    மற்றபடி கலைஞரின் இறப்பு மகிமையானதாக இருந்திருக்கலாம்; அவர் தாலந்துகளையும் பெருக்கியிருக்கலாம். தந்தை குறிப்பிடுபவர் தாலந்துகள் ஈட்டாமல் போயிருக்கலாம்.ஆனால் நாம் இறக்கும் வித்த்திற்கும் ,ஈட்டிய தாலந்திற்கும் முடிச்சுப்போட முடியுமா...தெரியவில்லை.எத்தனையோ தாலந்துகளுக்கு சொந்தக்கார செல்வந்தர்களின் முடிவு படு பயங்கரமாக இருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? எல்லாமே ...எல்லோருமே ஒன்றுபோல் இருப்பதில்லை.விஷயங்களைப் பார்ப்பது ஒருவரின் மன முதிர்ச்சியையும்,அவரின் பின்புலத்தையும் பொறுத்ததே! நமக்குக் கிடைத்த தாலந்துகளுக்காக நன்றி சொல்வோம்; அவற்றால் யாருக்கேனும் நன்மை செய்ய முடியுமாவெனப் பார்ப்போம்.
    சரியா,தவறா,ஏன்,எதற்கு எனப்பல விதமாக்க் குட்டையைக் குழப்பி நம்மை ஒரு மீனைப் பிடிக்க வழி வகுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete