Thursday, August 16, 2018

திருமணம் செய்துகொள்ளாதிருப்பது

நாளைய (17 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:3-12)

திருமணம் செய்துகொள்ளாதிருப்பது

திருமணம், மணமுறிவு, மணத்துறவு என்ற மூன்று வார்த்தைகளில் சுழல்கிறது நாளைய நற்செய்தி.

இந்த மூன்று சொற்களையும் இணைக்கும் வார்த்தை 'தனிமை.' எப்படி?

'தாய் தந்தையை விட்டு' பிரியும் கணவன் 'தனிமையாக' இருக்கிறான்.

இந்தத் தனிமையை போக்க அவன் 'மனைவியோடு' இணைகிறான்.

மனைவியை விலக்கிவிடும் கணவன் மீண்டும் 'தனிமை' ஆகிறான். மனைவியும் 'தனிமை' ஆகிறாள். இந்தத் தனிமையைத் தீர்த்துக்கொள்ள சிறிது நேரம் உடல் அளவில் இணைந்து களைந்துபோவது விபச்சாரம் என்றும், அது தவிர்க்கப்படவேண்டும் எனவும் சொல்கிறார் இயேசு.

மேலும், 'திருமணம் செய்துகொள்ளாதிருப்பதன் தனிமையே நலம்' என்று சொல்வதை அருள்கொடை பெற்றவரே அன்றி வேறு எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் இயேசு. அருள்கொடை பெற்றவர் தானே தனிமையை ஏற்கப் பழகிக்கொள்கின்றார்.

நமக்கு ஏன் தனிமை உணர்வு வருகிறது என்று தெரியுமா?

இயல்பாகவே நமக்குத் தனிமை உணர்வு என்பது கிடையாது. ஏனெனில் தொடக்கநூலின்படி 'ஆண் முதன் முதலாக படைக்கப்பட்டபோது அங்கே பெண் இல்லை. பெண் இடையில் வந்தவள். ஆணுடன் முதன்முதலாக உறவு கொண்டு தனிமை போக்கியவர் ஆண்டவராகிய கடவுள். அதே போல பெண் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டபோது முதன்முதலாக பெண்ணோடு உறவு கொண்டவர் ஆண்டவராகிய கடவுள். ஏனெனில் ஆதாம் அங்கே 'தூக்கத்தில்' ('பாதி இறப்பு') இருந்தார்.'

இவ்வாறாக, ஆணுக்கும், பெண்ணுக்கும் தனிமை போக்கியவர் கடவுள்.

காலப்போக்கில் இந்தக் கடவுள் ஓரங்கட்டப்பட்டுவிட்டு ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் தனிமை போக்கத் தேடியதால்தான் தனிமையே வருகிறது. ஏனெனில் பாதியில் வரும் எதுவும் நிறைவைத் தராது. என்னதான் ஒட்டி, உறவாடி, கொஞ்சி, அக மகிழ்ந்தாலும், 'உவப்பன வெறுக்கும், வெறுத்தன உவக்கும்,' 'இணைந்தன பிரியும், பிரிவன இணையும்' என்று வாழ்வு சட்டென்று மாறிவிடுகிறது. ஆனால், இறைவனோடுள்ள இணைதல் அப்படி அல்ல. நானும், நீங்களும் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் அவரோடு இணைந்துகொள்ள முடியும். இதுவும் அவருடைய அருள்கொடையே.

ஆனால், இது எழுதுவதற்கு மிக எளிது. இதை உள்வாங்கி வாழ்வது மிகக் கடினம். ஏனெனில் கடவுளும் காணாமல் போகும் நேரங்கள் நம் வாழ்வில் வரும். அந்த உச்சகட்ட தனிமையை வெல்வது மிகவும் கடினம். நிறைய எண்ணங்கள் எழுந்து மறையும். நம்மையே வெறுமையாக்கி அழித்துக்கொள்ளும் எண்ணங்களும் சில நேரங்களில் எழும். ஆனால், அது எல்லாமே மூளையின் செயல். மூளை நம்மை ஏமாற்ற வல்லது. மூளையின் ஏமாற்று வேலைக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

நிற்க.

தொடர்ந்து இயேசு மணவுறவு என்பதை உடல் அளவில் உள்ள செயல்பாடாக முன்வைக்கின்றார்.

சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர்.
சிலர் மனிதரால் (மருத்துவரால் அல்லது வேறு ஒரு காரணத்திற்காக) அப்படி ஆக்கப்படுகின்றனர்.
சிலர் அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

இந்த மூன்றாம் நிலை முழுக்க முழுக்க ஒருவரின் தன்னுரிமை மற்றும் கட்டின்மையைப் பொறுத்தது. கத்தோலிக்க அருள்பணி நிலையில் இந்த முன்வருதல் திருத்தொண்டர் நிலைக்கு வரும்போது நடைபெறுகிறது. மணத்துறவு அங்கே வாக்குறுதியாக பெற்றுக்கொள்ளப்படுகிறது. 'நான் விரும்புகிறேன்' என்று திருத்தொண்டர் நிலைக்குள் நுழையும்போது குருமாணவர் ஏற்கின்றார்.

'நான் விரும்புகிறேன் தனிமையை' - என்பதுகூட அதன் பொருளாக இருக்கலாம்.

1 comment:

  1. இந்தத் " தனிமை" எனும் தலைப்பில் தனது எண்ணங்களைப் பதிவு செய்வது தந்தைக்குப் ' பொங்கல்' சாப்பிடுவது போல.பல நேரங்களில் இவரைப்போன்றவர்களின் தனிமைத்துயரம் நமக்கு இவர்கள் மேல் சில பரிதாப அலைகளை வரவழைத்திடினும் இன்றைய குடும்ப உறவு நிலைகளைப் பார்க்கையில் இவர்கள் எல்லாம் ' கொடுத்து வைத்தவர்கள்' என்றே எண்ணத்தோன்றுகிறது.மேலும் "திருமணத்துக்கு அருள் கொடை பெற்றவர்கள் அன்றி வேறு எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் இயேசு" எனும் தந்தையின் வரிகள் இவர்கள் மீது போறாமையைக் கூடத்தூண்டுகிறது.இத்தனை பெரிய விஷயம் செயல்படுத்துவதற்கு அத்தனை எளிதான விஷயமில்லை என்ற எண்ணம் தான் இந்த திருமணத்துறவு கொண்டவர்கள் மீது ஒரு நேச உணர்வைத்தூண்டுகிறது.ஆனால் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் இதை " வாக்குறுதியாக" ஏற்றுக்கொள்கிறார்கள் எனும் விஷயம் இன்னொரு விஷயத்தையும் முன் வைக்கிறது.நினைத்த நேரத்தில்,நினைத்த இடத்தில் 'அவரோடு' உறவு கொள்ள உரிமை பெற்ற நீங்கள் தனிமைத்துயரின் உச்ச கட்ட நேரங்களில் "இது நான் விரும்பி ஏற்ற தனிமை" எனும் உணர்வே உங்களுக்கு அவரோடு உள்ள நெருக்கத்தை இன்னும் இறுக்கப்படுத்தும்.ஒன்றை மறந்து விடாதீர்கள் .....உங்களுக்காக,உங்களின் ஆன்ம,சரீர நலன்களுக்காக இறைவனை மன்றாட எத்தனையோ சகோதர,சகோதரிகள் உங்களுக்கு கைகொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஆறுதலான,உங்களை ஊக்கப்படுத்தும் விஷயமாக இருக்கட்டும்.அவருக்காக தங்களைப்போன்றவர்கள் இழக்கும் ஒவ்வொரு விஷயமும் அதன் பலனை அனேக மடங்காய் உங்களுக்குக் கொண்டு வரவல்லவை என்பது உங்களுக்கே தெரிந்த விஷயம்.எங்கள் அனைவரின் செபங்களும்,வாழ்த்துக்களும் அவரின் அன்பர்களை என்றென்றும் தாங்கி நிற்கும்!!!
    தந்தையின் ஆரம்ப வரிகளில் ஒன்று..." தாய்- தந்தையை விட்டுப்பிரியும் கணவன் 'தனிமையாக' இருக்கிறான்..... என்று. தாய்க்குலங்கள் சிலர் உங்களைத்தேடிக் கொண்டிருப்பதாக அண்மைச்செய்தி. பாதுகாப்புடன் இருங்கள்.சரியா!?

    ReplyDelete