Thursday, August 2, 2018

கேள்விக்குறி

நாளைய (3 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 13:54-58)

கேள்விக்குறி

தன் சொந்த ஊருக்கு வருகின்ற இயேசு அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்ட அவர்கள் ஆச்சர்யத்தில் தங்கள் புருவங்களை உயர்த்துகின்றனர். புருவங்கள் இறங்குவதற்குமுன் அவர்களின் ஆச்சர்யமும் வியப்பும் இறங்கி இடறலாக மாறிவிடுகிறது. தங்களுக்கு ஆச்சர்யக்குறியை இருந்தவரை நோக்கி நிறையக் கேள்விக்குறிகளை இடுகின்றனர்.

- எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?
- எப்படி இந்த வல்ல செயல்கள் செய்கிறார்?
- இவர் தச்சருடைய மகன் அல்லவா?
- இவருடைய தாய் மரியா என்பவர்தானே?
- யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா இவரின் சகோதரர்கள் அல்லவா?
- இவர் சகோதரிகள் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?
- பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று நாம கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஏழு பேரு ஏழு விதமாக பேசுறாங்க.

- இயேசுவே கடவுளின் ஞானம் - ஆனால் இந்த ஞானம் யாரிடமிருந்து வந்தது? எனக் கேட்கின்றனர்.
- இவரின் செயல்கள் இவரை அனுப்பியவரின் செயல்களே - ஆக, அனுப்பியவர் பற்றியும் அறியவில்லை இவர்கள்.
- தச்சருடைய மகன் - ஆக, படிப்பதற்கு வசதியற்றவர்.
- தாய் மரியா - ஆக, இவர் திருமணத்திற்கு புறம்பான கருத்தரிப்பில் பிறந்தவர்.
- யாக்கோபு போன்றோர் இவருடைய சகோதரர்கள் - சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் செய்யாதவர்கள் இவருடைய சகோதரிகள்
- சகோதரிகள் நம்மோடு இருக்கிறார்கள் - அவர்களும் திருமணம் முடித்து வெளியே செல்லும் வகையறாத நிற்கிறார்கள்

ஆக, பிறப்பு, வளர்ப்பு, பின்புலம், உடன்பிறந்தோர் என எந்த விதத்திலும் இயேசு தகுதியற்றவராக இருக்கிறார் ஊரார் பார்வையில்.

இன்றைய முதல் வாசகத்தில் ஏறக்குறைய இதே நிலைதான் இருக்கிறது. எருசலேம் ஆலயத்தின்முன் நின்று இறைவாக்குரைக்கும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்ட அவருடைய சொந்த மக்கள், 'நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்' எனக் கூச்சலிடுகின்றனர்.

இயேசுவின் சொந்த ஊர் மக்கள் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகின்றனர். கேள்விகள் கூடக்கூட நம்பிக்கை குறையும் என்பது நிதர்சனமான உண்மை. கேள்விகள் கேட்காத மனமே சரணடைகின்றது.

கேள்விகள் கேட்பதன் வழியாகவே நமக்கு அறிவு வருகின்றது என்றாலும், நாம் பெற்ற அறிவை வைத்துக்கொண்டு அடுத்தவரை மட்டம் தட்டுவதற்காக கேட்கப்படும் கேள்விகளாகவே இருக்கின்றனர் சொந்த ஊர்க்காரர்களின் கேள்விகள்.

இவர்கள் கண்டும் நம்பவில்லை. கேட்டும் நம்பவில்லை. உணர்ந்தும் நம்பவில்லை. காரணம், இவர்கள் இயேசுவை அறிந்திருந்தனர். இயேசுவை அறிதலே இவர்களை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றது. இவர்களின் அறிதலே இவர்களின் அறியாமையாக மாறிவிடுகின்றது.

இவர்கள் தங்கள் கேள்வியினால் இயேசுவை வாயடைத்துவிட்டதாக தங்கள் இல்லம் திரும்பியிருப்பர். ஆனால், இந்த உணர்வினால் என்ன பயன்?

நாம் யாரை ஜெயிக்க, யாரிடம் போட்டிபோட இந்த உலகில் பிறந்தோம்?

கேள்விகள் இல்லா நாளாக எந்நாளும் விளங்கட்டும்.

1 comment:

  1. ஒருவரின் சொந்த உறவுகளாலேயே அவர் புறக்கணிக்கப்படுவது வலியின் உச்சக்கட்டம். இங்கே இயேசுவுக்கும் சரி, இறைவாக்கினர் எரேமியாவுக்கும் சரி,அதுதான் நடந்துள்ளது.கேள்வி கேட்பதுவே ஒருவரின் ஞானத்தின் வெளிப்பாடு என்பது உலகத்தின் கோட்பாடாயிருக்க,கேள்விகள் கேட்காத மனமே சரண்டைகிறது என்கிறார் தந்தை.இருக்கலாம்; ஆனால் எல்லாநேரங்களிலும் இது நிதர்சனமான உண்மையாயிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.பல நேரங்களில் நாம் கேட்கும் பல கேள்விகள்தான் உண்மையை வெளிக்கொணரும் வித்தைகளாக செயல்படுகின்றன.இங்கு நாம் பார்க்க வேண்டியது கேள்விகளையல்ல; கேள்விகளின் தன்மையையே என்று நினைக்கிறேன். ஆனாலும் தந்தையின் கேள்வி..." நம் கேள்விகளால் அடுத்தவரை வாயடைப்பதால் யாருக்கு என்ன இலாபம்? நாம் யாரிடம் ஜெயிக்க,யாரிடம் போட்டிபோட இந்த உலகில் பிறந்தோம்?" ... கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது.ஆனாலும் கேள்விகள் இல்லாத நாளாக எந்நாளும் விளங்க முடியுமா? தந்தைக்கே வெளிச்சம்.சிறிது குழப்பத்தின் மத்தியில் பல விஷயங்களை சிலாகித்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete