Thursday, August 30, 2018

அடிக்கவும் குடிக்கவும்

நாளைய (30 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 24:42)

அடிக்கவும் குடிக்கவும்

'விழிப்பாயிருங்கள்' என்று தன் சீடர்களை அறிவுறுத்தும் இயேசு 'திருடனைத் திருட விடாமல் விழித்திருக்கும் வீட்டு உரிமையாளர்,' மற்றும் 'நம்பிக்கைக்கு உரிய அறிவாளியான பணியாளர்' என இரண்டு எடுத்துக்காட்டுக்களைத் தருகின்றார்.

இவற்றில் இரண்டாம் எடுத்துக்காட்டை மட்டும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளைக்கு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான பணியாளர் யார்' என்ற கேள்வியோடு தன் இரண்டாம் எடுத்துக்காட்டைத் தொடங்குகிறார் இயேசு.

ஒரு வீடு.

அந்த வீட்டில் (அ) உரிமையாளர், (ஆ) பொறுப்பாளர், (இ) வேலையாள்கள் என மூன்று நிலைகளில் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 'உரிமையாளர்,' 'பொறுப்பாளரின்' பொறுப்பில் வீட்டையும், வேலையாள்களையும் விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிடுகிறார். அவரின் இல்லாமையில் பொறுப்பாளர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே பாடம்.

இன்று எங்கள் குருமடத்தில் பேராசிரியர்களுக்கான மாத ஒடுக்கம் (அக இணைவு) (Monthly Recollection) நடந்தது. இதை வழிநடத்திய அருள்தந்தை குமார்ராஜா அவர்கள் நம் ஒவ்வொருவரிலும், (அ) மதிப்பீடு (value), (ஆ) அறிவு (knowledge), (இ) செயல்திறன் (skill) என மூன்று இயங்குவதாகவும், மதிப்பீடு மற்றும் அறிவு ஆகியவற்றைக் கடந்து நாம் 'செயல்திறனுக்கு' கடந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நம் எடுத்துக்காட்டில் வரும் பொறுப்பாளர் 'நம்பிக்கைக்கு உரியவர்' என்ற 'மதிப்பீட்டைக்' கொண்டிருக்கிறார். அவர் 'அறிவாளியுமாக' இருக்கிறார். அதே வேளையில் அவர் 'வேளா வேளைக்கு உணவளிக்கிறார்.'

ஆனால், அவர் இப்படி இல்லாமல், 'நம்பிக்கைக்கு உரியவராக,' 'அறிவாளியாக' இருந்துகொண்டு, சிலரோடு சேர்ந்து குடிக்கவும், வேறு சிலரை அடிக்கவும் செய்தால் அவர் தலைவரால் கண்டிக்கப்படுகிறார். மேலும், அவர் கண்டந்துண்டமாய் வெட்டப்படுவார் என்று பெரிய எச்சரிக்கையை விடுக்கின்றார் இயேசு. ஆக, 'மதிப்பீடு,' 'அறிவு' இருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் செயல்படுத்தும் 'செயல்திறன்' அவசியம்.

நம் வாழ்வில் விழிப்பு நிலை என்பது இந்த 'மதிப்பீடு,' 'அறிவு,' மற்றும் 'செயல்திறன்' இணைந்து செயல்படுதலே.

எப்படி?

என் பணி ஆசிரியப்பணி என வைத்துக்கொள்வோம்.

ஆசிரியப் பணிக்குத் தேவையான 'பொறுமை,' 'தாழ்ச்சி,' 'எளிமை' போன்றவை என் 'மதிப்பீடு.' என் பாடம் பற்றி நான் தெரிந்து வைத்திருப்பது என் 'அறிவு.' இவை இரண்டு மட்டும் என்னை ஆசிரியர் ஆக்கிவிடுமா? இல்லை. இவை இரண்டால் நான் 'ஆசிரியப்பணி' என்ற போதையில் எனக்குள் நானே மூழ்கி இருப்பேன். ஆனால், எப்போது 'செயல்திறன்' கொண்டு என் பணியைச் செய்கின்றேனோ அப்போதுதான் என் ஆசிரியப்பணி நிறைவடையும்.

ஆக, 'இறைவனால் நம்பிக்கைக்கு உரிய மற்றும் அறிவாளியுமான பணியாளர்கள் நாம்.' இதை உணர்ந்து 'வேளாவேளைக்கு நாம் உணவு பரிமாறுவோம்.'

வேளாவேளைக்கு உணவு பரிமாறும்போது நாம் கடவுளாகவே மாறிவிடுகிறோம். ஏனெனில், அவரிடம்தான் நாம் 'எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும்' எனக் கேட்கிறோம்.

அதுவே, உயர்த்தப்பட்ட நிலை.

1 comment:

  1. எத்தனையோ முறை கேட்ட நற்செய்திதான்;கேட்ட விஷயம் தான். இன்று தந்தை அதைத் தனக்குக் கொடுக்கப்பட்ட பல விஷயங்களோடு இணைத்து தனக்கே உரித்தான பல புதுச்சொற்களின் கூட்டணியோடு வாசகருக்குப் படைத்திருக்கிறார்.நாம் எப்பணியைச் சார்ந்தவராயிருப்பினும் அப்பணிக்குரிய 'தாழ்ச்சி', 'எளிமை'யுடன் கூடிய மதிப்பீட்டையும்,அப்பணியை செவ்வனே செய்யக்கூடிய செயல் திறனையும் பெற்றிருந்தால் மட்டுமே நாம் 'அவரின்' நம்பிக்கைக்குரிய பணியாளர்களாவோம் என்கிறார் தந்தை.பணி செய்பவனுக்கு....உணவு பரிமாறும் நிலையில் உள்ள ஒருவனுக்கு உணவு கேட்கும் உரிமையையும் தருகிறார் இறைவன்.ஆகவே 'அவரைப்' பார்த்து " எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும்" என்று கேட்போம்; உயர்த்தப்பட்ட நிலையை அடைவோம். பாசிட்டிவ் எனர்ஜி தரும் ஒரு பதிவைத்தந்த தந்தைக்கு வாழ்த்துக்களும்!! வணக்கங்களும்!!!

    ReplyDelete