Sunday, August 5, 2018

விடிவெள்ளி

நாளைய (6 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மாற் 9:2-9)

விடிவெள்ளி

நாளை நம் ஆண்டவரின் தோற்றமாற்றப் (உருமாற்றம்) பெருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். தாபோர் மலையில் தன் நெருங்கிய சீடர்கள் பேதுரு, யோவான், யாக்கோபு முன் உருமாறுகின்றார் இயேசு. எலியாவும், மோசேயும் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். மேகத்திலிருந்து தந்தையின் குரல் கேட்கிறது.

இந்த நிகழ்வைப் பற்றி தன் திருஅவைக்கு எழுதுகின்ற பேதுரு (நாளைய இரண்டாம் வாசகம்) மிக அழகான வரியோடு நிகழ்வை நிறைவுசெய்கின்றார்:

'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை
அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது' (2 பேதுரு 1:19)

கடந்த வாரம் சந்திர கிரகணம் தோன்றியது. அந்த நிகழ்வில் நிலவு செந்நிறமாய் ஒளிவீச அதன் அருகில் குட்டியாய் வெள்ளையாய் செவ்வாய் கிரகம் மின்னியது. ஒவ்வொரு நாள் காலையிலும் நிலவிற்கு அருகில் தெரியும் விடிவெள்ளி புதன் கிரகம் என்பதை நாம் அறிவோம். பொழுது புலரும்போதுதான் அந்த விடிவெள்ளி தோன்றும். அந்த விடிவெள்ளி அந்நேரம் தோன்றுவதால் அது அதுவரைக்கும் மறைந்திருந்தது என்பது பொருள் அல்ல. மாறாக, அது ஒட்டுமொத்த இருளில் எங்கோ ஒளிர்ந்துகொண்டிருந்தது.

ஆக, விடிவெள்ளி என் உள்ளத்தில் எழும்வரை அது எங்கோ ஒளிரும் விளக்குத்தான்.

இன்று தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' நூலில் அவரின் மனமாற்றப் பகுதியினை (நூல் 8) மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். தன் நண்பன் ஆல்பியுஸ் கிளாடியேட்டர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகப் பாவிப்பதைப் பார்த்து அகுஸ்தினார், 'நீ வெற்றி பெறும் வரை மற்றவர்கள் பெறும் வெற்றி வெறும் வேடிக்கையே. ஆக, நீ உன் வாழ்வை அதிலிருந்து திருப்பி அவசியமானவற்றில் அக்கறை கொள்' என்கிறார். நாம் என்னதான் கிரிக்கெட் பார்த்து கோஹ்லி அவர்களின் அல்லது கால்பந்து பார்த்து பிரான்சின் வெற்றியைக் கொண்டாடினாலும், அந்த வெற்றி நமதாகிவிடப்போவதில்லை. அது எங்கோ ஒளிரும் விளக்காக இருக்கின்றது. ஆனால், என் வாழ்வில் நானே வெற்றிபெறும்போது அது என் வாழ்வின் விடிவிளக்காக மாறுகிறது.

இயேசுவின் உருமாற்றத்தின்போது எழுந்த ஒளியை எல்லாரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்காததால் அது எங்கோ மின்னும் ஒளிதான். ஆனால் உடனிருந்த திருத்தூதர்களுக்கு அது விடிவெள்ளியாக மாறி அவர்களின் வாழ்வின் விடியலை முன்னுரைக்கின்றது.

எங்கோ ஒளிரும் விளக்கு என் வாழ்வின் விடிவெள்ளியாக மாற நான் இயேசுவோடு மலைமேல் ஏற வேண்டும். மலையின் தனிமையை அனுபவிக்க வேண்டும். காட்சிகள் மாறி மறைந்தாலும், மீண்டும் தனிமை பிறந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையின் குரல் கேட்க வேண்டும்.

என் வாழ்வின் வெற்றி எது என்பதை எனக்கு வெளியில் இருப்பவர் முடிவுசெய்யக்கூடாது. எனக்கு உள்ளிருக்கும் நபர்தான் முடிவுசெய்ய வேண்டும். என் வாழ்வின் விடிவெள்ளியை நான் காண, அதுவே என் வாழ்வின் உருவை மாற்ற உருமாற்றத்தின் ஆண்டவர் அருள்கூர்வாராக!


1 comment:

  1. இன்றையப்பதிவின் ஒவ்வொரு எழுத்தும் பசுமரத்தாணியாய் செதுக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.சில சொற்கள் தன்னிலேயே அழகானவை.." விடிவெள்ளி" எனும் சொல்போல." பொழுது புலர்ந்து உங்கள் இதயங்களில் விடிவெள்ளி தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப்போன்றது." உண்மைதான் " எது என்னுடையதோ"அது மட்டுமே எனக்கு அர்த்தம் தர முடியும். அப்படியானால் எங்கோ ஒளிரும் விளக்கை நான் என் இதயத்தில் ஒளிரச்செய்ய வேண்டும்.... இதைச் சாத்தியமாக்க " நானும் இயேசுவோடு மலை மீது ஏற வேண்டும்; மலையின் தனிமையை அனுபவிக்க வேண்டும்; காட்சிகள் மாறி மறைந்தாலும்,மீண்டும் தனிமை பிறந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; தந்தையின் குரல் கேட்க வேண்டும்" ....நற்செய்தி வரிகள் என்னவோ பழசுதான்; நாம் திரும்பத்திரும்பக் கேட்டவைதான்.ஆனால் இந்த வரிகளுக்குப் புனித அகுஸ்தினாரைத் துணைக்கழைத்துத் தந்தை தரும் விளக்கமும்,அருவியாய் விழும் அவரின் சொற்களும் (" நீ வெற்றி பெறும் வரை மற்றவர்கள் பெறும் வெற்றி வெறும் வேடிக்கையே") இப்பதிவுக்குக் கூடுதல் அழகையும்,அழுத்தத்தையும் சேர்க்கின்றன. உரு மாறிய ஆண்டவர் நானும் உருமாற அருள்கூறுவாராக! எப்பொழுதுமே கருத்துக்களைப் பொதிந்து வரும் தந்தையின் எழுத்துக்கள் சமீபகாலமாக இன்னும் அழகான,ஆழமான கருத்துக்களின் குவியலாக வருவதை உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete