Wednesday, August 15, 2018

என்னைப் பொறுத்தருள்க!

நாளைய (16 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 18:21-19:1)

என்னைப் பொறுத்தருள்க!

'நான் எத்தனை முறை என் சகோதரர்களை மன்னிக்க வேண்டும்?' என்ற பேதுருவின் கேள்விக்கு, 'எழுபது தடவை ஏழுமுறை' - அதாவது, எண்ணிலடங்கா முறை என பதில் தருகின்றார் இயேசு. அத்தோடு, நமக்குக் கீழ் இருப்பவர்களை நாம் மன்னித்தால்தான் நமக்கு மேலிருப்பவரின் மன்னிப்பைப் பெற முடியும் அல்லது நமக்கு மேலிருப்பவரின் மன்னிப்பைப் பெற்ற நாம் நமக்குக் கீழிருப்பவரை மன்னிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்த உவமை ஒன்றைக் கையாளுகின்றார் இயேசு.

ஒரு அரசன். இரண்டு பணியாளர்கள்.

அரசனிடம் முதல் பணியாள் பத்தாயிரம் தாலந்து கடன் பெறுகின்றான்.ஒரு தாலந்து என்பது ஒருவரின் 6000ஆம் நாள் சம்பளமாகும். ஒரு நாளைக்கு 10 ரூபாய் சம்பளம் என வைத்தால், இந்தப் பணியாளன் அரசனிடம் 60 கோடி கடன் வாங்குகிறான். இந்தப் பணியாளன் தன் உடன் பணியாளனக்கு 100 தெனாரியம் கடன் கொடுத்திருக்கிறான். அதாவது, வெறும் 1000 ரூபாய். தான் பட்ட 60 கோடி ரூபாய் கடனைக் கட்ட முடியாததால் அரசனிடம் வேண்டிக்கொள்ள, அரசனும் மன்னித்து விடுகின்றார் 60 கோடியையும். ஆனால், மன்னிப்பு பெற்ற அடுத்த நாளே, தன்னிடம் 1000 ரூபாய் கடன் பட்ட உடன்பணியாளன் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து சிறையில் அடைக்கின்றான். இவனது செயல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட அரசன் இவன் பிறருக்கு இழைத்த கொடுமையை இவனுக்கே இழைக்கின்றான்.

60 கோடி மன்னிப்பு பெற்றவன் 1000 ரூபாய் பெற்றவனை மன்னிக்க முடியாதா? - என்று நமக்குச் சட்டென கோபம் வருகிறது.

அரசன் எத்தனை கோடி பணத்தை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஏனெனில் அது அவன் பணமில்லையே. ஊரான் பணம்தானே. ஊரான் பணத்தை யாருக்கும் கொடுக்கலாம். இந்தப் பணியாளனுக்கு 1000 ரூபாய் என்பது 4 மாத உழைப்பு. இது இவனுக்கு மிகவும் தேவைப்பட்டதாக இருந்திருக்கலாம். ஆக இவனது செயல் நியாயமானதே.

- என்று நாம் சொன்னாலும்,

அந்தப் பணியாளன் தன் சக பணியாளனிடம் நடந்துகொண்ட விதம்தான் சரியில்லை.

(அ) அவனைப் பிடித்து, (ஆ) கழுத்தை நெரித்து, (இ) சிறையில் அடைக்கின்றான்.

உடன் பணியாளர்கள் வேகமாக போய் அரசனிடம் சொல்லிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பொறாமையாகத் தான் இருந்திருக்க வேண்டும். அல்லது இவர்கள் அந்த அடிபட்ட பணியாளனுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.

பணியாளன் தன் உடன் பணியாளனுக்குக் கொடுத்த தண்டனை நியாயமற்றது.

அதைத்தான் அரசன் கடிந்துகொள்கின்றான். அரசனிடம் இல்லாத சிறைச்சாலையா? அவன் நினைத்தால் முதல் பணியாளனைக் கொன்று கூறுபோட்டிருப்பான். ஆனால், அரசன் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறான். அரசனின் பெருந்தன்மையை, பரிவை அனுபவித்த பணியாளன் தன் உடன் பணியாளனுக்கு அதே பெருந்தன்மையைக் காட்டியிருக்க வேண்டும். இதைக் காட்ட அவன் மறுக்கின்றான்.

பிறரை மன்னிக்க ஒருவருக்குத் தடையாக இருப்பது மேற்காணும் மூன்று காரணிகள்தாம்:

(அ) பிடித்து - ஒருவர் செய்த தவறைப் பிடித்துக்கொண்டு
(ஆ) கழுத்தை நெரித்து - அவரைப் பேச விடாமல் செய்து
(இ) சிறையில் அடைத்து - அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அறுத்து

ஆக,

மன்னிப்பதற்கு மேற்காணும் மூன்று தடைகளையும் ஒருவர் கடக்க வேண்டும். அப்படி கடக்கவில்லை என்றால் அவர் அந்த நிலைக்குக் கடத்தப்படுவார் என்பதே நற்செய்தியின் போதனை.

2 comments:

  1. இன்றையப் பதிவில் வரும் பணியாளன் தன் உடன் பணியாளனுக்குக் கொடுத்த தண்டனை நியாயமற்றதே! உண்மைதான்! நமக்கு மேல் உள்ளவர்களிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்கும் நாம்,நமக்குக் கீழே இருப்பவர்களுக்கு அதைத் திருப்பிக்கொடுக்கிறோமா எனில் " இல்லை" என்றே நம் மனசாட்சி நம்மை இடித்துக் காட்டும். இன்றையப் பணியாளன் அவன் உடன் பணியாளனுக்குக் கொடுத்த தண்டனை கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கலாம்; அல்லது நம்மளவில் இப்படி நிகழாமல் இருந்திருக்கலாம்.ஆனாலும் அதற்கு சமமாகத் தந்தை குறிப்பிடும் விஷயங்கள் நமக்குப்புதிதல்லவே! " ஒருவர் செய்ததவறைப்பிடித்துக்கொண்டு,அவரைப்பேச விடாமல் செய்து,அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அறுத்துக் கொள்வது" என்பது நமக்கும் நடந்திருக்கலாம்; நாம் நடத்தியும் இருக்கலாம்.இரக்கம்,மன்னிப்பு....இவை எல்லாம் ஒரு சராசரி மனிதனிடம் இருக்க வேண்டிய குணங்கள்.நம் மனத்தின் கடினம் போக்கி அதைப்பஞ்சு போன்று இலேசாக்கும் விஷயங்கள்.நாம் மன்னிக்கவில்லை எனில் நாமும் மன்னிக்கப்பட மாட்டோம் எனும் பயத்தினால் அல்ல...." மன்னிப்பதும்,மறப்பதும்" இறை குணம் எனும் காரணத்திற்காக இந்த நல்ல விஷயங்களை வாழ்வாக்குவோம்.அழகானதொரு பதிவிற்காகத் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  2. Dear Father...

    The three beautiful essentials for forgiveness is so well explained . You are always unique in you reflections and explanations. Félicitations

    ReplyDelete