Wednesday, August 8, 2018

இது வேண்டாம்

நாளைய (9 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 16:13-23)

இது வேண்டாம்

நாளைய நற்செய்தி வாசகத்தில் பிலிப்பு செசரியா பகுதிக்கு வருகை தருகின்ற இயேசு, தம் சீடரிடம், 'மக்கள் - நீங்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்-சொல்கிறீர்கள்?' என்னும் கேள்விகளைக் கேட்கின்றார். பேதுரு மட்டும்தான் சரியான பதிலைச் சொல்லுகின்றார்.

சொன்னவுடன் இயேசு அவரைப் பாராட்டி, 'மண்ணுலகில் நீ தடை செய்வது அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்' என்கிறார்.

பேதுருவுக்கு ஒரு குட்டி ஆசை.

'நான் இங்கே தடை செய்தால் உண்மையிலேயே அங்கே தடை ஆகுமா?'

இதை எப்படி சோதனை செய்து பார்ப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, இயேசு மாட்டிக்கொள்கிறார். தொடர்ந்து இயேசு தன் பாடுகள் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

'இதுவே தகுந்த தருணம்' என நினைக்கின்ற பேதுரு, இயேசுவிடம், 'ஆண்டவரே, இது வேண்டாம். உமக்கு இப்படி நடக்காது' என்று தடை செய்கின்றார்.

இயேசுவின் வாக்குறுதியின்படி பேதுரு இங்கே தடை செய்வது அனைத்தும் அங்கேயும் தடை செய்யப்படும். இல்லையா?
'என்னடா இது நமக்கு வந்த சோதனை. சொல்லி முடிக்குமுன்பே நம்மைச் சோதித்துவிட்டானே' என எண்ணுகின்ற இயேசு, உடனே காச் மூச் என்று கத்தி, 'அப்பாலே, போ! சாத்தானே!' என்று சொல்லி பேதுருவின் வாயை மூடுகின்றார்.

பேதுரு சொன்னது சரிதானே?

இயேசுவுக்கு நல்லதுதானே அவர் நினைத்தார்.

அப்புறம் ஏன் இயேசு அவரைக் கடிந்துகொள்கிறார்.

இயேசு கடிந்துகொள்வதன் பொருள் இதுதான்:

முந்தைய நிகழ்வில் பேதுரு ஒரு படி மேலே நின்று பேசினார். அதாவது அவருடைய எண்ணம் மேல்நோக்கியதாக, கடவுளுக்கு இணையானதாக இருந்தது. தன் கண்ணுக்குத் தெரியாத ஒன்றை அங்கே நம்பிக்கைக் கண் கொண்டு பார்த்தார் பேதுரு.

ஆனால் இந்த நிகழ்வில் பேதுரு ஒரு படி கீழே இறங்கி விடுகின்றார். அவருடைய எண்ணம் கீழ்நோக்கியதாக, மனிதருக்கு இணையானதாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரிவதோடு தன் பார்வையை நிறுத்திக்கொள்கிறார்.

ஆக, பேதுரு எப்போது மேல்நிலையில் நிற்கிறாரோ அப்போதுதான் அவருடைய 'பவர்' வேலை செய்யும். கீழே இறங்கினால் அது அவருக்கே திரும்பிவிடும்.

இவ்வாறாக, 'ஆண்டவரே, வேண்டாம்' என்று சொல்வதற்கு ஒன்று, நாம் ஆண்டவருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது ஆண்டவரைப் போல இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், 'இது வேண்டாம். அது வேண்டாம். என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும். அப்படித்தான் இருக்கணும்' என்று சொன்னால் மிஞ்சுவது ஏமாற்றமே.


1 comment:

  1. இன்றையப் பதிவில் பேதுரு சந்திக்கும் நிகழ்வு நம் அன்றாட வாழ்வில் நாமும் சந்திப்பதுதான்.நாம் ஒருவர் மீது அதீத அன்பும்,அக்கறையும் கொண்டிருந்தால் " ஏன் இத்தனை தூரம் உழைக்க வேண்டும்?;கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே!" என்று சொல்லும் நேரங்கள் உண்டு. அதற்காக " நம் எண்ணம் கீழ் நோக்கியுள்ளது;நாம் கீழே இறங்கிவிட்டோம்" என்று சொல்ல முடியுமா என்ன?கண்டிப்பாக நாம் சொல்வது ஒரு பேச்சுக்காகத்தான் என்று அவருக்கும் தெரியும்.ஆனால் இன்றையப்பதிவுப்படிப்பார்த்தால் அப்படிச்சொல்வது கூட தவிர்க்கப்பட வேண்டியது என்று தெரிகிறது. என்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்றை நான் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதற்கு மாற்று ஒன்றை எதிர்பார்த்தால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே! புரிகிறது..."Beggars cannot be choosers" என்று கேட்டிருப்போம்."ஆண்டவரே, வேண்டாம்" என்று சொல்ல நாம் ஆண்டவரைப்போல அல்லது ஆண்டவருக்கு மேலே இருக்க வேண்டும்." இப்படித் தலையில் ஒரு குட்டு வைத்துச்சொன்னால் தான் நம்மில் பலருக்குப்பல விஷயங்கள் புரியும் போல! 'குட்டு' வைத்து விஷயங்களைப் பகிர்ந்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete