Monday, August 13, 2018

இச்சிறியோருள்

நாளைய (14 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 18:1-5, 10-14)

இச்சிறியோருள்

வில்லியம் ப்ளேக் அவர்களின் புகழ்பெற்ற பாடல் வரிகள் உண்டு:

'ஒரு துளி மணலில் உலகைப் பார்க்க...
ஒரு துளி நீரில் கடலைப் பார்க்க...
ஒரு துளி நொடியில் முடிவில்லாக் காலத்தைப் பார்க்க...'

அதாவது, ஞானியர் சின்னஞ்சிறியவற்றில் அவற்றின் மொத்த வளர்ச்சியைக் காண்பர்.

கணியன் பூங்குன்றனார் இயற்றியதாகச் சொல்லப்படும் புறநானூறு 192ஆம் பாடலிலும் இதையொத்த கருத்து ஒன்று உண்டு:

'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
... ... ...
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.'

அதாவது, பூங்குன்றனாரின் பார்வை தெளிந்த பார்வையாக இருக்கிறதாம். ஆகையால்,

மாட்சியில் பெரியவரை அவர் வியந்து பார்ப்பதும் இல்லை.
மாட்சியில் சிறியவரை அவர் இகழ்வதும் இல்லை.

ஏனெனில், இன்று சிறியவராக இருப்பவருக்குள் பெரியவராக மாறும் ஆற்றல் உண்டு என்பதை அவர் அறிந்துகொள்கிறார்.

நாளைய நற்செய்தி வாசகம் முழுவதும், 'சிறியோர்,' 'காணாமல்போனவர்,' 'சிறுபிள்ளை' 'தவறி அலைபவர்' என யார் பார்வையிலும் படாதவர்கள் பற்றிய சொல்லாடல்கள் நிரம்பி இருக்கின்றன.

'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்' எனவும், 'வழிதவறிய ஆட்டை - 99வுடன் ஒப்பிடும் போது 1 மிகச் சிறியது - தேடிக் கண்டுபிடிப்பதில் மகிழுங்கள்' எனவும் சொல்கிறார் இயேசு.

சிறியவர்கள் பெரியவர்கள் ஆகும் ஆற்றல் நிலையில் இருக்கிறார்கள்.

ஆக, சிறியதின் ஆற்றலை அறிந்துகொள்ள நம்மை நாளைய நற்செய்தி வாசகம் அழைக்கின்றது.

நாளை நாம் கொண்டாடும் தூய மாக்ஸி மிலியன் கோல்பே அவர்களின் திருநாளும் இதே பொருளைத்தான் தருகின்றது. வதைமுகாமில் சித்ரவதைக்குள்ளான அவர் தன் உடன்கைதிக்குப் பதிலாக தான் இறக்க முன்வருகின்றார். அதாவது, 'நான் ஒரு அருள்பணியாளர். நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. நான் இல்லையென்றால் இந்த உலகில் எதுவும் நடக்காது. நான் எல்லாக் குடும்பங்களுக்கும் பொதுவானவன். நான் பெரியவன்' என்ற எந்த எண்ணமும் இல்லாமல், தன் உடன் கைதிக்கு உள்ள சிறிய குடும்பம் இவருக்குப் பெரிதாகத் தெரிந்ததால் தன்னையே கையளிக்க முன்வருகின்றார்.

அந்தச் சிறிய உடன் கைதியிலும் இவர் பெரிய உலகத்தைப் பார்த்ததால்தான் இவரால் தற்கையளிப்பு செய்ய முடிந்தது.

'சிலர் கடற்கரையில் நின்று, 'எவ்வளவு தண்ணீர்த்துளிகள்!' என்று வியப்பர்.
வெகுசிலரே கடற்கரையில் நின்று, 'எவ்ளோ பெரிய தண்ணீர்த்துளி!' என்று வியப்பர்' என்கிறார் கலீல் கிப்ரான்.

சிறிதினும் சிறிது கேட்க, சிறிது சிறிது பேண அழைக்கப்படுகிறோம் நாம்.


2 comments:

  1. ஒவ்வொரு நாளின் பதிவையும் சிறப்பு மிக்கதாக்கிட எத்தனை மேற்கோள்கள்; மேன் மக்களின் வார்த்தைகள்; வெற்றி- தோல்வியைத் தழுவியவர்களின் வாழ்க்கைப்பாடங்கள்...... என்று எத்தனை முயற்சியின் விளைவாக வருகிறது தந்தையின் ஒவ்வொரு நாள் பதிவும் என்று எண்ணுகையில் தந்தை தன் " சிறிதினும் சிறிது கேட்க,சிறிது சிறிது பேண அழைக்கப்படுகிறோம்" எனும் இறுதி வரிகளுக்கு நியாயம் செய்கிறார் என்றே தோன்றுகிறது.நாம் காணும் வாழ்க்கைச்சக்கரம் தன் சுழற்சியில் இன்று கீழிருப்போரை நாளை மேலேயும்,நாளை மேலிருப்போரை நாளை மறுநாள் கீழேயும் மாற்றிப்போடும் தன்மை கொண்டது என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை." மாட்சியில் பெரியவரை அவர் வியந்து பார்ப்பதும் இல்லை;மாட்சியில் சிறியவரை அவர் இகழ்வதும் இல்லை" எனும் வரிகளுக்கான காரணமும் இதுவே! தூய மாக்ஸி மிலியன் கோல்பே தன் உடன் கைதியின் சிறிய குடும்பத்தைக் பெரிதாகப் பார்த்ததற்கும், வழிதவறிய அந்த 100 ஆவது ஆட்டைக்கண்டதும் இடையன் மகிழ்ந்ததற்கும் ...ஏன் ஒரு சல்லிக்காசைத் தொலைத்த அந்த விதவைத்தாய் அதைக்கண்டதும் மத்தாப்பூவாய் மலர்ந்ததற்கும் கூடக் காரணம் இதுவேதான்.ஒரு பொருளோ ஆளோ நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைப்பதற்கு காரணம் அவர்களின்/ அவைகளின் பின்புலம் அல்ல....நம் மனம் தான்...மனமே தான்.ஆகவே " ஒரு துளி மணலில் உலகைப்பார்க்கவும், ஒரு துளி நீரில் கடலைப்பார்க்கவும், ஒரு துளி நொடியில் முடிவில்லா காலத்தைப்பார்க்கவும் கற்றுக்கொள்வோம்.அழகானதொரு கவிதை பாடிய தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. சமுத்திரம் பெரிதா .. தேன் துளி பெரிதா... தேன் தான் அது நான் தான்... ராஜா வசூல்ராஜா எம் பி பி எஸ்

    பாட்டு தான் ஞாபகம் வருது நம்ப டிசைன் அப்படி

    ReplyDelete