Wednesday, August 22, 2018

திருமண ஆடை

நாளைய (23 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 22:1-14)

திருமண ஆடை

மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் மீண்டும் சில விண்ணரசைப் பற்றிய உவமைகள் வருகின்றன. அவற்றில் முதலாவதையே நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம். 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்' என்று தொடங்கும் இந்த நிகழ்வில், ஒரு அரசன், அவனுடைய மகன், பணியாளர்கள் என்று அரண்மனையைச் சார்ந்தவர்களும், திருமணத்திற்கு அழைப்பு பெற்றவர்கள், வழிகளில் இருந்த நல்லவர், கெட்டவர் என நிறையப் பேர் இருக்கின்றனர். இறுதியில், திருமண ஆடை அணியாத ஒரு நபரும் இருக்கிறார்.

சரி. நிகழ்விற்கு வருவோம்.

திருமணம் நடக்கும் நிகழ்வு முதலில் ஊர் மக்களுக்கு திருமண வீட்டாரால் சொல்லப்படும். ஆனால், தேதி அறிவிக்கப்படாது. பாலைவனத்திலிருந்து ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எப்போ போவாங்க, அல்லது போவாங்களா என யாருக்கும் தெரியாது. ஆக, பொண்ணு வீடு, பையன் வீடு பயணம் இப்படி எல்லா பயணங்களும் இனிதாய் அமைந்தால்தான் திருமணம் நடக்கும். ஆக, 'எங்க வீட்டுல கல்யாணம், வந்துடுங்க' அப்படின்னு மட்டும்தான் முதலில் சொல்வாங்க. பின் கொஞ்ச மாதங்கள் அல்லது நாள்கள் கழித்து, 'நாளைக்கு அல்லது இன்னைக்கு கல்யாணம் வந்துடங்க' என்ற ஏற்கனவே சொன்னவர்களிடம் மீண்டும் சொல்வார்கள். அப்படிச் சொல்லப் போனவர்களைத்தான் அடித்துத் தள்ளியிருக்கிறார்கள் இந்த அழைப்பு பெற்றவர்கள்.

இங்கே, அரசனது முட்டாள்தனம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். தகுதியானவர்களை முதலிலேயே அழைக்க வேண்டியதுதானே! காட்டுமிராண்டிகளை அழைத்துவிட்டு, 'அவன் என்னை அடிக்கிறான்னு' சொன்னா, அவன் அடிக்கத்தான் செய்வான்!

விருந்து தயாராகிவிட்டது. யாரை அழைப்பது? எல்லாரையும் அழைக்கிறார் அரசன். நல்லவர், கெட்டவர், என தெருவில் செல்வோர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அப்படி அழைக்கும்போது ஒவ்வொருவருக்கும் திருமண வீட்டார் திருமண ஆடை ஒன்றைக் கொடுப்பர். அதை அணிந்துகொண்டுதான் விருந்தினர் செல்ல வேண்டும். ஒரே ஒரு இளவல் மட்டும் அணியவில்லை. அவர் அணியவில்லையா? அல்லது அணிய விரும்பவில்லையா? என்று தெரியவில்லை.

'வேற வழியில்லாம தான நீ என்னை அழைத்தாய்?' அல்லது 'முதலில் நீ எனக்கு அழைப்பு கொடுக்கவில்லையே?' அல்லது 'இந்த ஆடை அரசனான நீ என் வரிப்பணத்தில் வாங்கியதுதானே!' அல்லது 'எனக்கு இந்த ஆடையின் நிறம் பிடிக்கவில்லை!' - இப்படி ஏதோ ஒரு காரணங்களுக்காக அந்த இளவல் அணிய மறுக்கின்றார். விருந்தினர்களைப் பார்க்க வருகின்ற இடத்தில் இவன் அரசனுடைய கண்ணில் பட்டுவிடுகின்றான். முடிவு, அவனுடைய அழிவு.

இந்த இளவல் வெளியே அனுப்பப்பட்டது சரியா? - என்று நாம் கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்வோம்.

இவருடைய 'கல்மனம்' அல்லது 'மாற்றத்திற்கு உட்படுத்தாமை' - இதுதான் தவறு என நான் நினைக்கிறேன்.

வரலாற்றில் தூய அகுஸ்தினார் போன்றவர்கள் 'திருமண ஆடை' இல்லாமல் இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் மனமாற்றம் அடைந்து ஆடை அவருக்குத் தரப்பட்டபோது, மன் மனத்தை அப்படியே மாற்றி இறைவிருப்பத்திற்கு கையளித்துவிடுகிறார். 'நீ கட்டளையிடுவதை என் மனம் செயல்படுத்த எனக்கு அருள்தா!' என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எசே 36:23-28) இஸ்ரயேல் மக்களிடம் உரையாடும் யாவே இறைவன், 'உங்கள் கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, சதையால் ஆன இதயத்தைத் தருவேன்' என்கிறார். சதையால் ஆன இதயம்தான் அவர்கள் அணிய வேண்டிய திருமண ஆடை.

இந்தக் கடவுள் ரொம்ப மோசமானவர்.

'உன்னைக் கொல்வேன், குத்துவேன், வெட்டுவேன், அழிப்பேன், நாடு கடத்துவேன்' என்று மூசு;சுக்கு மூச்சுக்கு சொன்னவர், அப்படியே தலைகீழாக மாறி, 'உனக்கு புதிய இதயம் தருவேன், புதிய சட்டை தருவேன், புதிய பேண்ட் தருவேன்' என குழைகிறார்.

நற்செய்தியில் உள்ள உவமையிலும் அப்படியே நடக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் வந்ததே பெருசு! இதுல, நீ சட்டை போடல, பேண்ட் போடல, வெளிய போ! என்று சொல்றது எப்படி நியாயம்?

அவர் கடவுள்! அவன் அரசன்! அப்படித்தான் பேசுவார்கள்!


1 comment:

  1. பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தை சீருடையோடு செல்லாவிடில் நிர்வாகம் அக்குழந்தையை வீட்டிற்கு அனுப்பும் விஷயம் நாம் அறிந்ததே.இதையே தான் தந்தைத் திருமணத்திற்கு அதற்கேற்ற உடை அணியாத இளவலின் மனப்போக்காக 'கல்மனம்' மற்றும் ' மாற்றத்திற்கு உட்படுத்தாமை' எனும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறார். ஆக இந்த இளவலும் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவனே!ஆனால் அந்த இரண்டாவது நிகழ்வில் இறைவன் முழுக்க,முழுக்க மனித ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர் என்பதை நிரூபிக்கிறார்.தவறு செய்தபோது பிள்ளையை அடிப்பதும்,பின் தவறை உணர்ந்தபோது இரு கரம் கொண்டு அணைப்பதும் எந்த தந்தைக்கும் உரிய இயல்புதானே! நாமும் கூட தவறு செய்த பொழுதுகளை எண்ணி வருந்தி நம்மை மனமாற்றத்திற்கு உட்படுத்தும் போது அவர் நம்மைக் கடவுளாகவோ,அரசனாகவோ பார்ப்பதில்லை....ஒரு தந்தைக்குரிய நேசப்பார்வையைத்தான் நம்மீது வீசுகிறார்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் புனித அகுஸ்தினாரைப் போல நம் மனத்தை இறைவிருப்பத்திற்குக் கையளிப்பது மட்டுமின்றி " நீ கட்டளையிடுவதை என் மனம் செயல்படுத்த எனக்கு அருள் தா!" என்று இறைவனிடம் வேண்டுவது மட்டுமே!
    எதிர்மறையாகப் பேசுவது போல் பேசி வாசகரை நேர்மறையாக சிந்திக்க வைக்கும் தந்தைக்கு ஒரு 'சல்யூட்!'....

    ReplyDelete