Sunday, August 12, 2018

வரி செலுத்துவதில்லையா?

நாளைய (13 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 17:22-27)

வரி செலுத்துவதில்லையா?

தன் பாடுகளை இரண்டாம் முறை தன் சீடர்களுக்கு அறிவிக்கின்றார் இயேசு. இரண்டாம் முறை பாடுகளின் முன்னறிவைப்பைக் கேட்கின்ற சீடர்கள் மிகவும் துயரம் அடைகின்றார்கள்.

தொடர்ந்து ஒரு விநோதமான நிகழ்வை நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இந்த இறைவாக்குப் பகுதி மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது.

இயேசு கப்பர்நகூமுக்கு வந்தபோது, கோயில் வரி வாங்குபவர் பேதுருவிடம் வந்து, 'உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?' என்று கேட்கின்றார். அவர், 'ஆம், செலுத்துகிறார்' என்கிறார்.

ஆனால், இயேசு வீட்டிற்குள் வந்தவுடன் பேதுருவை, 'சீமோனே' என அழைத்து கேள்வி ஒன்று கேட்கின்றார்: 'யாரிடமிருந்து வரி பெறப்படுகிறது?' 'தங்களிடமிருந்தா?' 'மற்றவர்களிடமிருந்தா?' 'மற்றவர்களிடமிருந்து' என பேதுரு விடை தருகின்றார். 'குடிமக்கள் கட்டுப்பட்டவரல்லர்' என்று சொல்லிவிட்டு, 'இருந்தாலும் போய்க் கட்டு' என்று பேதுருவை மீன் தூண்டிலோடு அனுப்புகின்றார். மீனின் வாயில் உள்ள நாணயத்தால் வரி கட்டப்படுகிறது.

இந்த நிகழ்வின் பின்புலம் என்ன?

இயேசுவின் காலத்தில் இஸ்ரயேல் மற்றும் யூதா உரோமையர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆக, கோயிலும் உரோமையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் மட்டுமே கோவில் வரியிலிருந்து விலக்கு பெற்றிருந்தனர். மேலும், யூதர்களின் ஆலயமாகவே அது இருந்தாலும் அவர்கள் அந்த ஆலயத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால், இயேசு இங்கே ஒரு மௌனப் புரட்சி செய்கின்றார். 'குடிமக்கள் வரிக்குக் கட்டுப்பட்டவரல்லர்' என்று சொல்வதன் வழியாக அவர் தன்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்றும், ஆலயத்தின் தலைமகன் தானே என்றும் மறைமுகமாகச் சொல்கின்றார்.

இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்திற்குப் பின் யூதர்களாயிருந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனபோது அவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினர்:

அ. கிறிஸ்தவத்திற்கு மாறிய பின்பும் ஒருவர் யூத ஆலயத்திற்கு வரி கொடுக்க வேண்டுமா?
ஆ. கிறிஸ்துவே நம் அரசராக இருக்க நாம் ஏன் அகஸ்து சீசருக்கும் உரோமைக்கும் வரி கொடுக்க வேண்டும்?

சில ஆண்டுகளில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆக, அந்த வரிப் பிரச்சினை தீர்ந்தது. ஆனால், இரண்டாவது பிரச்சினை அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்த இடத்தில்தான், 'சீசருக்கு உரியது சீசருக்கும், கடவுளுக்கு உரியது கடவுளுக்கும்' என்ற போதனை வருகிறது. இருந்தாலும் தாங்கள் கொடுக்கின்ற வரி மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்கும், தீமையான செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டபோது அவர்கள் வரி செலுத்தாமல் புரட்சியும் செய்தனர்.

நிற்க.

ஜூலை மாதம் இறுதியில் நம் நாட்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குடிமக்களாகிய நம் கடமை. இந்த ஆண்டு அதை ஆகஸ்ட் இறுதி வரை தளர்த்தியிருக்கிறார்கள். வரிதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. ஆனால், மக்களுக்கு தேவையற்ற சுமைகளைச் சுமத்தி அவர்கள் படும் துன்பத்தில் பங்கேற்காத அரசு அவர்களின் வருமானத்தில் பங்குகேட்டு அவர்களுக்குப் புதிய திட்டங்களால் இன்னும் சுமையை அதிகமாக்குவது நடங்கேறுவது வருத்தமாக இருக்கிறது.

கோஹ்லி என்ற கிரிக்கெட் வீரர் ஃபிட்னெஸ் சவால் விட்டார் என்பதற்காக, நம்ம பிரதமர் ஒரு குச்சியைக் கையில் பிடித்துக்கொண்டு இங்குமங்கும் நடந்து, கல்லில் மல்லாக்கப் படுத்து ஒரு காணொளி வெளியிட்டார். 3 நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளி உருவாக்கத்திற்கான செலவு 31 இலட்சங்களாம். வறுமை ஒழிப்பு சேலன்ஜ், குழந்தைகள்-பெண்கள் பாதுகாப்பு சேலன்ஜ் என இவர் சேலன்ஜ் ஏற்றால் பரவாயில்லை. ஒன்றுக்கும் உதவாத சவால்களுக்கும், வீண் பயணங்களுக்கும் வரிப்பணம் செலவழிக்கப்படுவது வேதனைக்குரியது.
இந்த இடத்தில் எம்.ஆர். ராதா அவர்களின் ரத்தக்கண்ணீர் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது: 'நீங்கள் இந்தியாவிலே பிறந்தவர்கள். உங்கள் தலைவிதி இப்படி!'

1 comment:

  1. ஒரு நாட்டுக்குடிமகன் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரியை செலுத்துவது அவன் அந்த நாட்டுப் பிரஜை என்பதைப் பெருமையோடு நிலை நிறுத்தும் விஷயம்.ஆனால் நமது அரசாங்கங்கள் அதை கழுதைமேல் சுமத்திய பொதியாக மாற்றிவிடுகின்றன..காரணம்...நாம் வியர்வை சிந்திக் கட்டும் நம் வரிப்பணம் பதவியில் உள்ளவர்களின் வெட்டி சவால்களுக்கும்,வீண் பயணங்களுக்கும் செலவழிக்கப்படுகிறது என்ற வருத்தமும் கூடவே வருவதால்.ஆனால் அதற்காக ஒருவர் வரிப்பணம் செலுத்த முடியாது என கொடி பிடிக்க முடியுமா என்ன? கண்டிப்பாக முடியாது. ஏனெனில் ஏற்கனவே ஒருவர் நெத்தியடியாகச் சொல்லி விட்டுப்போய் விட்டாரே " சீசருக்கு உரியது சீசருக்கும், கடவுளுக்கு உரியது கடவுளுக்கும் என்று!". பின் இதில் இரண்டாவது சிந்தனை இருக்க முடியுமா என்ன? தந்தைக்கு ஒரு விஷயம்...கண்டிப்பாக நாம் சார்ந்துள்ள அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய விஷயம் தான்.அது பெருமைக்குரிய விஷயமா இல்லை தலைவிதியா என நிர்ணயிப்பது நம் அரசாங்கங்களே! ஒரு Necessary Evil...

    ReplyDelete