Tuesday, August 7, 2018

மேசைமேல் நாய்க்குட்டி

நாளைய (8 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 15:21-28)

மேசைமேல் நாய்க்குட்டி

நாளைய நற்செய்தி வாசகத்தில் கானானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பற்றி வாசிக்கின்றோம்.

'வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்' என்பதும், 'வாய் நினைத்தால் பல்லக்கிலும் ஏறும், பல்உடையும் வாங்கும்' என்பதும் நாம் கேட்டறிந்த முதுமொழிகள்.

'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்கிறது இயேசுவின் வாய்.

'ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் திண்ணுமே' என்கிறது கானானியப் பெண்ணின் வாய்.

இது ஒரு உருவகம்.

நாய்க்குட்டிகள் நம் வீட்டில் வளர்த்திருப்போம். நாமாக எடுத்து வைத்தாலன்றி நாய்க்குட்டிகள் நம் தட்டுக்குள் தங்கள் தலையை விடுவதில்லை. மேசையிலிருந்து கீழே விழும் சிறு துண்டுகளைப் பற்றிப் பேசுகிறார் இயேசு. மேசையில் அமர்ந்து சாப்பிடும் வசதி அல்லது வழக்கம் இல்லாத வீடுகளில், பாய்களில் அமர்ந்து உண்ணும்போது பாய்க்கு வெளியே விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகளோ, பூனைக்குட்டிகளோ உண்பது வழக்கம்.

மேசை உருவகத்தையே எடுத்துக்கொள்வோம்.

மேசை. மேசையில் வீட்டு உரிமையாளர். மற்றும் பிள்ளைகள். இவர்கள் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மேசைக்குக் கீழே நாய்க்குட்டி இருப்பதை அவர்கள் பார்க்கவில்லை. குழந்தைகள் எடுத்துச் சாப்பிடும்போது சில துண்டுகள் கீழே சிதறி விழுகின்றன. அவற்றைக் கீழிருக்கும் நாய்க்குட்டி சாப்பிடுகிறது.

'நம்பிக்கை' என்பது 'கண்ணுக்குத் தெரியாதது நிகழும் என்ற ஐயமற்ற நிலை'

இயேசுவின் கண்களுக்கு மேசையும், உரிமையாளரும், பிள்ளைகளும்தான் தெரிந்தனர். ஆனால் கானானியப் பெண்ணின் கண்களுக்கு நாய்க்குட்டியும், அது பசியாறுவதும் தெரிகின்றது. இதுதான் நம்பிக்கை. காணாததைக் காணும் ஐயமற்ற நிலை. இந்த ஐயமற்ற நிலையை, உடனடியாக அறிக்கையிடுகின்றார் பெண். ஆக, நாம் காணும் மேசையையும் தாண்டி ஒரு உலகம் இருக்கின்றது என்றும், அந்த உலகத்திலும் உயிர்கள் உண்கின்றன என்றும் சொல்கின்றார் அப்பெண். மேலும், நாய்க்குட்டி கீழே தரையில் இருப்பதால் தாழ்ந்தது அல்ல என்றும், மேசையில் ஒருவர் அமர்ந்திருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்லர் என்றும், மேலிருப்பவரும், கீழிருப்பவரும் உண்பது ஒரே உணவும்தான் என ஓங்கி அறைகின்றார் பெண்.

பெண்ணின் இந்த வார்த்தைகள் அவரை மேசைக்கு உயர்த்துகின்றன.

நாய்க்குட்டிபோல இருந்தவர் தன் நம்பிக்கையால் வீட்டின் உரிமையாளர் ஆகின்றார்.

இந்தப் பெண்ணின் புத்திக்கூர்மையும், சமயோசித புத்தியும் பாராட்டுதற்குரியவை.

நம்பிக்கையையும் தாண்டி பெயரில்லா இந்தப் பெண் நாம் பேசும் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் காலத்தால் அழியாக கண்ணாடியாக முகம் காட்டுகிறாள்.

1 comment:

  1. வாசிப்பவர்களின் மனங்களில் "ஆ! அதெப்படி இயேசு அந்தப்பெணணைப்பார்த்து நாய்க்கு இணையாகப்பேச முடியும்?" என்ற கேள்வியை எழுப்பக்கூடிய விவிலியப்பகுதிதான் தந்தையின் இன்றையப்பதிவு. எதற்காக இயேசு அப்படிச்சொன்னார்? ஒரு வேளை தந்தையின் கூற்றுப்படி " நாய்க்குட்டி கீழே இருப்பதாலேயே தாழ்ந்ததும் அல்ல; மேசையில் ஒருவர் அமர்ந்திருப்பதாலேயே அவர் உயர்ந்தவரும் அல்ல" என்ற மாபெரும் உண்மையை இந்தப்பெண்ணின் வழியாக உலகிற்கு உரக்கச்சொல்வதற்காக இருக்குமோ! இருப்பினும் கூடத் தான் ஒருவரால் "நாய்"க்கிணையாக விளிக்கப்படுகையில் எத்தனை சிறுமைப்பட்டிருப்பார் இந்தப் பெண்மணி? இந்த நாயா? மேசையா?என்பதையெல்லாம் தாண்டி இங்கு நான் ஒரு விஷயத்தைப்பார்க்கிறேன். சொல்லிக்கொள்ளப் பெரிதாக ஒன்றுமே இல்லாத நம்மில் பலர் ' நான் அதுவாக்கும்!', 'நான் இதுவாக்கும்!' என்று சொல்லித்திரிகையில் நாய்க்கிணையாகப் பேசப்பட்ட ஒருத்தி தன் நம்பிக்கையால் மட்டுமே வீட்டின் உரிமையாளராகிறார் என்பதைக்காட்டவாக இருக்கலாம்.." கீழானோர் மேலானவராவர்" எனும் சொற்றொடருக்கு அர்த்தம் தருகிறார் இந்தப்பெண்மணி.இதனாலேயே பெயர் தெரியா இந்தக் கானானியப்பெண் இன்றும் விவிலியத்தில் ஒரு கதாபாத்திரமாக உயர்ந்து நிற்கிறார்." நம்பிக்கையையும் தாண்டி பெயரில்லாத இந்தப்பெண் நாம் பேசும் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக காலத்தால் அழியாத கண்ணாடியாக முகம் காட்டுகிறாள்" தந்தை இவளுக்குச் சூட்டும் இந்த மகுடம் மகத்தானதுமட்டுமல்ல; நிலையானதும்கூட.வாழ்த்துக்கள்!!!.

    ReplyDelete