Thursday, October 23, 2014

ஆர்க்கிடைப்புகள்...!

நேற்றைய தினம் மாணவர் அரங்கத்தில் தொடக்க உரையாற்றிய என் பேராசிரியர் ஒருவர் தான் அண்மையில் வாசித்த ஒரு புத்தகத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பியர்சன் மனித வாழ்வில் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் 12 ஆர்க்கிடைப்ஸ் பற்றிப் பேசுகின்றார். அதில் முதல் இரண்டு ஆர்க்கிடைப்புகள் பற்றிப் பேராசிரியர் சொன்னதை இன்று பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

முதலில் ஆர்க்கிடைப்புகள் என்றால் என்ன? இந்த வார்த்தைக்குச் சொந்தக்காரர் கார்ல் யுங் என்ற உளவியல் நிபுணர். நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆர்க்கிடைப்பை வாழ்கிறோம் என்று சொன்னவர் இவர். ஆர்க்கிடைப் என்றால் ஒரு 'மாடல்'. உதாரணத்திற்கு, கடவுள் உணர்வு என்பது ஒரு ஆர்க்கிடைப். கடவுள் இருந்தாலும், இல்லையென்றாலும் கடவுளைப் பற்றிய உணர்வு நம்முள் இருப்பதற்குக் காரணம் பிரபஞ்சத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் இந்த 'கடவுள்' என்ற ஆர்க்கிடைப்.

யுங்கைப் பின்பற்றி எழுதும் பியர்சன் மனித வாழ்வில் 12 ஆர்க்கிடைப்புகளை வகைப்படுத்துகின்றார்.

மாசற்றவர், அநாதை, போராளி, அக்கறைகாட்டுபவர், தேடுபவர், அன்பு செய்பவர், அழிப்பவர், படைப்பவர், ஆள்பவர், மந்திரவாதி, ஞானி, முட்டாள் என பன்னிரண்டு நபர்கள் ஒளிந்திருக்கிறார்கள். இதில் நம்மை அதிகம் பாதிப்பவர் 'அநாதை'. எப்படி?

'அநாதை உணர்வு' என்பது எல்லாருக்கும் பொதுவானது என்று தொடங்கும் பியர்சன் இதுதான் நாம் பிறரின் அன்பைத் தேடுவதற்குக் காரணமாக இருக்கிறது என்றும் எழுதுகின்றார். நம் அனைவரிடமும் ஏதோ ஒருவகையான அநாதை உணர்வு ஒளிந்திருக்கிறதாம். 'எனக்கென்று யாருமில்லை! அவனுக்கு எல்லாம் இருக்கிறது! எனக்கு ஒன்றும் இல்லை! நான் அன்பு செய்வது நிலைத்திருக்காது! என்னை எல்லாரும் கைவிட்டுவிடுவார்கள்! எனக்கு சிறிய வயதில் எதுவும் கிடைக்கவில்லை! இனியும் எனக்குக் கிடைக்காது! எனக்கு அதிர்ஷ்டம் இல்லை! என்னால் யாருக்கும் பயனில்லை! என்னை யாரும் தேடமாட்டார்கள்! அங்கே இருந்தா நல்லா இருந்துருக்குமே! இங்கே எனக்கு யாரும் இல்லை!' என்று புலம்பும் மனநிலைNயு நம் அநாதை ஆர்க்கிடைப். இதில் ஒரு நல்லது என்னவென்றால் இந்த ஆர்க்கிடைப் அதிகம் இருப்பவர்கள் அடுத்தவர்களைப் புரிந்து கொள்பவர்களாக, அதிகம் இரக்கம் காட்டுபவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் கையில் எடுக்க வேண்டியது இதுதான்: 'நான் ஒரு விக்டிம் ஆக மாட்டேன்!' என்று நமக்குள் உறுதியாகச் சொல்லிக் கொள்ளவேண்டும்.

இதைச் சமநிலைப்படுத்தும் மற்றொரு ஆர்க்கிடைப் தான் 'போராளி உணர்வு'. இந்தப் போராளி உணர்வு வந்தால் மட்டுமே அநாதை உணர்வை சரிநிலைப்படுத்த முடியும்.

இந்த மனநிலையை வளர்த்துக்கொள்ள ஆசிரியர் இரண்டு கருத்துக்களைச் சொல்கின்றார்:

அ. வலி இன்றி ஆழம் இல்லை. வாழ்வின் எந்த நிலையிலும் நாம் ஆழமாகக் காலூன்றி நிற்க வேண்டும் என்றால் வலியை ஏற்றுக்கொள்வது அவசியம். வலிகள் குறைந்து இருப்பின் அங்கே ஆழம் அதிகம் இல்லை என்றே அர்த்தம்.

ஆ. நாம் வலியைத் தாங்கிக் கொள்ள நமக்குத் துணை நிற்பது நாம் கொள்ளும் எதிர்நோக்கு. எதிர்நோக்கு இல்லாமல் நாம் தாங்கும் வலிகள் நமக்குக் கசப்புணர்வையே தரும். ஆனால் எதிர்நோக்கு இருப்பின் வலிகள் கசப்பாகத் தெரிவதில்லை.

இன்று நாம் பார்க்கும் எல்லா நபருக்குள்ளும் இந்த 'அநாதை - போராளி' போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது!



1 comment:

  1. 'ஆர்க்கிடைப்' முற்றிலும் புதிய வார்த்தை.ஆம்..பசியோ, வலியோ எந்த உணர்வுமே நமக்கு வந்திருந்தால்தான் அடுத்தவர்களைப்புரிந்து கொள்ள முடியும்.அதுவும் இந்த 'அஅநாதை' உண்ர்வு என்பது ..வளரவிட்டால் ஒருவனை அழித்து விடக்கூடியது. இன்று நம்மைச் சுற்றிப் பார்ப்போம்.இது போன்று 'எதிர்மறை' உண்ர்வு உள்ளவர்களை இனம் கண்டு அவர்களுக்குத் தோள் கொடுப்போம்..அவர்களின் வலிக்கு மருந்தாவோம்.அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

    ReplyDelete