Thursday, October 16, 2014

ஒரு பெரிய வீட்டில் ...

கடந்த மாதம் தனியாக தியானம் செய்தேன் என்று சொன்னேன் அல்லவா. அந்தத் தியானத்தின் இறுதியில் நான் இந்த ஆண்டு செயல்படுத்துவதற்காகத் தேர்ந்து கொண்ட இறைவாக்கு இதுதான்: 2 திமொத்தேயு 2:20-21.

சரி அதை திடீரென்று இன்று நினைவு கூறக் காரணம் என்ன?

நேற்றைய தினம் நாம் குறிப்பிட்டோம். நற்செய்தியாளர்களும், திருத்தூதர்களும் தங்களின் காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த இலக்கிய நடையையும், அந்தக் காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த சமகால இலக்கியச் செல்வத்தையும் மிகத் தாராளமாக தங்கள் நூல்களிலும் பயன்படுத்தினர். இது எதற்காக என்றால் 'தெரிந்த ஒன்றின் வழியாக தெரியாத ஒன்றை அறிவிப்பது'. 'தெரிந்த ஒரு நடையின் வழியாக தெரியாத இயேசுவை' அறிவிப்பது. இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் 'இன்கல்ச்சரேஷன்' என்று சொல்ல ஆரம்பித்தது.

2 திமொத்தேயு 2:20-21 எனக்குப் பல ஆண்டுகளாகப் பரிச்சயமான ஒன்று. ஆனால் இதன் அர்த்தம் என்னவோ எனக்கு கடந்த ஆண்டுதான் விளங்கியது. இந்த இறைவாக்கின் முதல் பகுதி அப்படியே 'பிளோட்டோவின் உரையாடல்கள்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிளோட்டோ தன்னிடமிருந்து படிப்பை முடித்துச் செல்லும் சீடன் ஒருவனுக்கு இந்த அறிவுரையைச் சொல்லி வழியனுப்புகிறார்.

'ஒரு பெரிய வீட்டில் ...
(அ) பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல,
(ஆ) மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன.
(அ) அவற்றுள் சில மதிப்புடையவை.
(ஆ) சில மதிப்பற்றவை.
(ஆ) ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால்
(அ) அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார்.
(ஆ) அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்.
(அ) தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.'

மேலேயுள்ள நடையைக் கவனியுங்களேன். மொத்தம் 8 சொற்றொடர்கள். 8 சொற்றொடர்களுக்கும் உள்ள தொடர்பு அ, ஆ என வளர்ந்து பின் ஆ, அ எனத் தேய்கிறது. இதுதான். இதை விவிலிய ஆய்வு மொழியில் 'படிக்கட்டு நடை' என்று சொல்வார்கள். மேலே ஏறி, பின் கீழே இறங்குவது.

தூய பவுலும், பிளேட்டோவும் ஒரு வீட்டில் உள்ள பாத்திரங்களை உருவகங்களாக வைத்து திமொத்தேயுவுக்கும், தன் சீடனுக்கும் என்ன அறிவுறுத்துகிறார்கள்.

பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் அந்தக் காலத்தில் உணவு அருந்துவதற்கும், சமய வழிபாட்டிற்கும், சாமிக்கு அர்ச்சணை செய்யவும், பணம் மற்றும் விலையுயர்ந்த முத்துக்களின் சேமிப்புப் பெட்டகமாகவும் இருந்தது. மண் மற்றும் மரத்தாலான கலன்கள் அடிமைகளின் உணவுப் பாத்திரங்களாகவும், மனிதக் கழிவுகளை அகற்றும் பாத்திரங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. இரண்டு வகைப் பாத்திரங்களுமே பயன்படுபவைதாம். ஆனால் பயன்பாட்டில் வித்தியாசம் இருக்கின்றது. பொன் பாத்திரத்தை நம் மடியிலும், மண் பாத்திரத்தை தரையிலும் வைக்கின்றோம்.

கடவுளின் அருட்பணியாளராக இருக்கக் கூடிய திமோத்தேயு என்றும் கடவுளின் மடியில் இருக்கும் பொன்னைப் போல இருக்க வேண்டும் எனவும், கீழானவற்றோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்ளக் கூடாது என்பதுமே பவுலின் அறிவுரை. 'கீழானவை எவை' என்பதை தூய பவுல் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் (காண். 2:22-26).

ஆக, விவிலியத்தை அறிய விவிலியம் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய உருவகங்களையும், இலக்கிய நடையையும் அறிதலும் அவசியமாகிறது. ஒரு சில உருவகங்கள் காலத்தையும் வென்று அர்த்தம் கொடுப்பவைகளாக இருக்கின்றன.


1 comment:

  1. பாலையும்,நீரையும், பிரித்தறியும் அன்னப்பறவை போல தீமையை விடுத்து நன்மையை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும் என் நமக்கு அழைப்பு விடுக்கும் பதிவு இன்றையது.ஆண்டவர் பெயரை அறிக்கையிடுவதுடன்,நீதி,நம்பிக்கை,அன்பு,அமைதி இவற்றைக் கடை பிடிப்பவராகவும்,மாற்றுக்கருத்துடையோரை மதிப்பவராகவும்,இளவயதின் இச்சைகளை விட்டு நாம் தூய்மையான உள்ளத்துடன் ஆண்டவரை வழிபட வேண்டும் எனவும் நமக்கு அழைப்பு விடுக்கிறார் திமொத்தேயு.அவர் இவற்றை முன் வைப்பது அருட்பணியாளருக்காய் இருக்கலாம்..ஏன் பொதுநிலையிலிருக்கும் நாமும் கூட இவற்றைக் கடைப்பிடித்து நம்மைத் தூய்மைப் படுத்துவதில் தவறில்லையே! அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

    ReplyDelete