Tuesday, October 14, 2014

முதல் படைப்பு வரலாறும், மனித வாழ்க்கை நிலைகளும்!

உலகம் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு காலங்காலமாக அறிவியலும், மதமும் தத்தம் முறைப்படி கற்றுக்கொடுத்துக் கொண்டே வருகின்றன. இரண்டு பதில்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது போலவே, இரண்டுமே நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியாதவைகளாகவே இருக்கின்றன. மேலும் முதல் ஏற்பாட்டு நூலின் தொடக்கத்தில் நாம் வாசிக்கும் உலகம் உருவான 'கதையை' வாசித்தால் அங்கே இரண்டு வகையான கதைகள் பின்னிக் கிடக்கின்றன (காண். 1:1-2:4அ மற்றும் 2:4அ-24). முதல் ஏற்பாட்டு உலகம் உருவான கதைகள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அக்காடிய, சுமேரிய கதைகளின் தொகுப்பே ஆகும் என்பது பலருடைய கருத்து. ஆகையால் இன்று விவிலிய ஆய்வாளர்கள் இந்தப் பகுதியைப் பற்றி எழுதும்போது, 'தொடக்கநூலின் முதல் பிரிவுகள் உலகம் எப்படி உருவானது என்று சொல்வதற்குப் பதிலாக, எதற்காக உருவானது என்று சொல்வதற்கே எழுதப்பட்டவை' என்று முடித்துவிடுகின்றனர்.

எனக்கு 11ஆம் வகுப்பில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த திரு. லூர்து சமுத்திரம் என்னும் ஆங்கில ஆசிரியர் நினைவிற்கு வந்தார். அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வரும்: ஒன்று, அவர் ஓட்டி வரும் 'லூனா' பைக். இந்த பைக்கை வைத்து அவருக்கு 'லூனா' சமுத்திரம் என்ற அடைமொழியும் உண்டு. பெயர் தான் சமுத்திரம். ஆனால் அவரிடம் ஒரு ஆழ்ந்த அமைதியை உணர முடியும். மிக மிக எளிய மனிதர். எளிமை என்றால் உடையிலும், தோரணையிலும் இருப்பதில்லை. எளியவர்க்கு இறங்கி வருதலில் தான் இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொன்னவர். இரண்டு, அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள். நான் ஷேக்ஸ்பியர் மேல் கொண்ட ஒருதலைக் காதலுக்குக் காரணமும் அவரே. முதல் வகுப்பில் ஷேக்ஸ்பியரின் 'ஆல் தெ வேர்ல்ட் இஸ் எ ஸ்டேஜ்' (அஸ் யூ லைக் இட்) என்ற பாடலை நாடகமாக நடத்திக் காட்டினார். அதில் எனக்குக் குழந்தை வேஷம் கிடைத்தது.

சரி! இந்த சிங்காரமெல்லாம் எதுக்குனு கேட்குறீங்களா?

முதல் ஏற்பாட்டு உலகம் உருவான கதையின் ஏழு நாட்களை ஷேக்ஸ்பியர் சொல்லும் மனித வாழ்க்கையின் ஏழு கட்டங்களாக உருவகித்திப் பார்த்தால் எப்படி இருக்கும்?

ஷேக்ஸ்பியர் சொல்லும் ஏழு மனித வாழ்க்கை நிலைகள்:
1. குழந்தை.
2. பள்ளி மாணவர்
3. காதலர்.
4. போர்வீரர்.
5. நீதி கேட்பவர்.
6. வயது முதிர்ந்தவர்.
7. அனைவரையும் சார்ந்தவர்.

ஷேக்ஸ்பியர் ஏழு நிலைகளுக்கும் இந்தப் பெயரைக் குறிக்கவில்லை. இருந்தாலும் அவரின் பாடலை நன்கு வாசித்தால் இந்த ஏழு பேரில் இருக்கும் மனநிலையையே எழுதுகிறார்.

முதல் ஏற்பாட்டு முதல் உலகம் உருவான வரலாற்றில் ஏழு நாள்களில் கடவுள் உலகைப் படைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு வேலை.

நாள் 1: ஒளியையும் இருளையும் வௌ;வேறாகப் பிரித்தார்.
நாள் 2: கீழுள்ள நீரையும் மேலுள்ள நீரையும் பிரித்தார்.
நாள் 3: நீரையும் உலர்ந்த தரையையும் பிரித்தார்.
நாள் 4: ஒளிப்பிழம்புகளால் வானை அலங்கரித்தார்.
நாள் 5: நீர்வாழ் உயிரினங்களால் நீரை அலங்கரித்தார்.
நாள் 6: மனிதன் மற்றும் உயிரினங்களால் நிலத்தை அலங்கரித்தார்.
நாள் 7: கடவுள் ஓய்வெடுத்தார்.

முதல் ஆறுநாள் வேலையை 'பிரித்தல்,' 'அலங்கரித்தல்' என்று இரண்டு வார்த்தைகளாகச் சுருக்கி விடலாம். இந்த வரலாற்றை எழுதிய ஆசிரியர் மிகவும் இலக்கியநயத்தோடு இரண்டு பிரிவுகளாக எழுதியுள்ளது வியப்பாக இருக்கிறது.

சரி! இதற்கும் ஷேக்ஸ்பியருக்கும் என்ன தொடர்பு?

மனித வாழ்க்கையில் நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் 'பிரித்தல்' என்றும், நாம் ஏற்படுத்தும் அனைத்து உறவுகளையும் 'அலங்கரித்தல்' எனவும் சுருக்கி விடலாம். இல்லையா? பள்ளிக்குச் செல்லும் குழந்தை 'அறியாமையிலிருந்து' 'அறிவைப்' 'பிரித்தெடுக்கிறது'. திருமணம் முடிக்கும் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை ஒரு இளவலைக் கொண்டு 'அலங்கரித்துக்' கொள்கிறான்.

1. குழந்தை.
ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் வரை அது தாயின் வயிற்றின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. தாயின் உணவு, சுவாசம் அனைத்திலும் பங்கெடுக்கிறது. முதன் முதலாக தொப்புள் கொடி உறவு அறும் போதுதான் தன் வாழ்வின் முதல் பிரித்தலை உணர்கிறது. நாள் ஒன்றில் கடவுள் இருளிலிருந்து, ஒளியைப் பிரித்தது போல, தாயின் கருவறை என்ற இருளிலிருந்து உலகம் என்ற ஒளியைப் பிரித்துப் பார்க்கிறது. அன்றிலிருந்து அதன் பிரிக்கும் பணி தொடர்கிறது: அம்மா வேறு, நான் வேறு. அப்பா வேறு, அம்மா வேறு. நான் வேறு, அக்கா வேறு.

2. மாணவர்.
நாள் இரண்டில் கடவுள் நீரை மேல்-கீழ் எனப் பிரிக்கின்றார். பள்ளிப்பருவத்தில் நாம் செய்வதும் இதுதான். அது வேறு - இது வேறு, நல்லது வேறு - கெட்டது வேறு, இந்தியா வேறு - அமெரிக்கா வேறு, மரம் வேறு - நட்சத்திரம் வேறு என்று மேன்மையானவற்றிற்கும், கீழானவற்றிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்து கொள்கின்றோம்.

3. காதலர்.
நாள் மூன்றில் கடவுள் தண்ணீரையும், உலர்ந்த தரையையும் பிரிக்கின்றார். தண்ணீர் என்பது நாம் காட்டும் அன்பு. உலர்ந்த தரை என்பது நாம் உணரும் வெறுமை. இந்தப் பருவத்தில் தான் நாம் உலகின் உறவுகளை அனுபவிக்கத் தொடங்குகின்றோம். நம் வறண்ட மனத்திற்கு நீர் பாய்ச்ச நட்பையும், காதலையும் தேடுகிறோம். சிலர் அதிகம் தண்ணீர் வந்து மூழ்கிவிடுவதும் இங்கே தான். உலர்ந்து காய்ந்து போவதும் இங்கே தான்.

4. போர்வீரர்.
நாள் நான்கில் ஒளிப்பிழம்பால் வானை அலங்கரிக்கிறார் கடவுள். இந்தப் பருவத்தில் தான் நாம் நமக்கென்று ஒரு ஒளிப்பிழம்பை நாம் வாழ்க்கை என்னும் வானில் உருவாக்கி அதையே நம் பாதைகாட்டும் நட்சத்திரமாக வைத்து நம் பயணத்தைத் தொடங்குகிறோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் போரிட ஆரம்பிக்கிறோம் - சிலர் பணத்திற்காக, சிலர் பதவிக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பெயருக்காக. இங்கேதான் மனிதன் தன் தனித்தன்மையை, தான் படைக்கப்பட்ட நோக்கத்தை உணர்கிறான். இந்தப் பருவத்தில் அவன் அமைத்துக் கொள்ளும் பயணமே அவனின் முழு வாழ்க்கை நிலையையும் நிர்மாணிக்கிறது.

5. நீதி கேட்பவர்.
ஐந்தாம் நாளில் கடவுள் வானத்துப் பறவைகளையும் வானிலும், மீன்களைத் தண்ணீரிலும் அலங்கரிக்கின்றார். அதாவது எது எங்கே இருக்க வேண்டுமோ, அதை அங்கே வைப்பது. பச்சைக் கிளியைத் தண்ணீரிலும், அயிரை மீனை காற்றிலும் பறக்க விட்டால் எப்படி இருக்கும்? இரண்டுமே இறந்து போகும். மனிதன் இந்த ஐந்தாம் பருவத்தில் தான் 'உலகம் ஏன் இப்படி இருக்கிறது?' 'கடவுள் என்ன செய்கிறார்?' 'ஏன் சிலர் துன்புறுகிறார்கள்?' 'ஏன் சிலர் இன்புறுகிறார்கள்?' 'ஏன் ஏற்றத்தாழ்வு?' என்று தன் உடன் வாழும் மக்களைக் குனிந்து பார்க்கத் தொடங்குகிறான். 'எது எது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையே' என வருத்தம் அடைகிறான். பிறரன்பு, நீதிக்கான வேட்கை இங்கே தான் தொடங்குகிறது.

6. வயது முதிர்ந்தவர்.
கடவுள் ஆறாம் நாளில் காட்டுவிலங்குகளைப் படைத்ததோடல்லாமல், படைப்பின் சிகரமாக மனிதனைத் தன் உருவிலும், சாயலிலும் படைக்கின்றார். இந்தப் பருவத்தில் தான் மனிதன் கடலுளைத் தன் உருவிலும், சாயலிலும் படைக்கின்றான். இதுதான் கடவுள், இதுதான் வாழ்க்கை என்று கடவுளின் புதிரும், வாழ்வின் அர்த்தமும் நமக்குத் தெளிவாவது நம் வாழ்க்கையின் மாலைநேரத்தில் தான்.

7. அனைவரையும் சார்ந்தவர்.
ஏழாம் நாளில் 'வேலைகள் முடித்து' ஓய்வெடுக்கும் கடவுள் போல மனிதன் இந்தப் பருவத்தில் தன் வேலைகளையெல்லாம் முடித்து நிரந்தர ஓய்விற்குள் நுழைகிறான். அல்லது பிறரை மட்டுமே சார்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறான். இது ஒரு இரண்டாம் குழந்தைப் பருவம். தாயின் கருவறை என்ற இருளிலிருந்து வந்தவன் பூமித்தாயின் கல்லறை என்ற இருளுக்குள் தன்னையே கரைத்துக் கொள்கிறான். 'கடவுளின் ஓய்வு எப்போது முடிந்தது? அவர் எட்டாம் நாளுக்கு எழுந்தாரா?' என்ற கேள்விகளுக்கு விடை தொடக்க நூலில் இல்லை. அதுபோலவே, நம் இறப்பு என்னும் ஓய்வு எப்போது முடியும்? எட்டாம் நாள் என்னும் உயிர்ப்பு உண்டா? என்ற கேள்விகளுக்கும் விடை நம்மிடம் இல்லை.

ஸாரி...கடைசியில் ரொம்ப சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டேன்!

சரி...இந்த ஏழு பருவ வாழ்க்கைiயும் எப்படி வாழ்வது? அதற்கும் விடை இந்த இறைவாக்குப் பகுதியிலேயே இருக்கின்றது. ஒவ்வொரு நாளின் செயலுக்குப் பின்னும் 'கடவுள் நல்லதெனக் கண்டார்' என எழுதுகிறார் ஆசிரியர். நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் எப்படி இருந்தாலும் அதை 'நல்லதெனக் காணும்' கடவுளின் கண்கள் நமக்கு இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆறாம் நாளில் 'கடவுள் மிகவும் நல்லதெனக் காண்கிறார்'. ஒவ்வொரு நாளின் விடியலும் நம் வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு பக்கம் கடந்து போவதை நினைவுபடுத்துகிறது. வாழ்வின் மாலைப்பொழுது நெருங்கும் போது நாமும், 'அனைத்தையும் மிகவும் நல்லதெனக் கண்டேன்!' எனச் சொல்லலாமே!

இந்த நாள் இனிய நாள்!


1 comment:

  1. ஆழ்கடலுக்குள் சென்று முத்தெடுத்தவன் உணர்வைத்தந்தது இன்றையத் தங்களின் படைப்பு.கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்தார் என்று நாம் எந்த ஒரு சிறப்பும் கொடுக்காத ஒரு பகுதியை ஆய்ந்து மேய்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.ஷேக்ஸ்பியரையும்,மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்கான நோக்கங்களையும் அழகாகத் தொடர்பு படுத்தியுள்ளீர்கள்.நம் வாழ்வின் மாலைப்பொழுது நெருங்கும்போது மட்டுமல்ல,ஒவ்வொரு மாலையும் உறக்கம் நம் இமைகளைத்தழுவும் நேரம் " அனைத்தையும் மிக நல்லதெனக் கண்டேன்" என்று சொல்லும் நிலைக்கு நம் வாழ்வை வாழ்ந்தால் எத்துணை இனிமையாக இருக்கும்!!!.

    ReplyDelete