Saturday, October 4, 2014

பாதை மாறுவதே என் பயணமானது!

விவிலியத்தின் முதல் ஏற்பாட்டில் ஒருவர் மற்றவரிடம் கேட்கும் கேள்விகளைப் பற்றி நம் வலைப்பதிவில் 137 நாட்கள் எழுதினோம். பின் நம் பார்வை யோபுவின் பக்கம் திரும்பியது. யோபு முடிந்தபின் என்ன எழுதவென்று தெரியாமலேயே ஏறக்குறைய எல்லாவற்றையும் பற்றி 63 நாட்கள் எழுதிவிட்டோம். எழுதியதை திரும்ப வாசிக்கும் போது என்ன எழுதியிருக்கிறோம்! எதிலுமே ஆழம் இல்லையே! என்றே தோன்றுகிறது. கைக்குக் கிடைத்ததையெல்லாம் வாசிக்க ஒருவர் பழகிவிட்டால் பல் தேய்க்கும் போது கூட பேஸ்ட்டில் எழுதியிருப்பதையும், சாப்பிடும் போது ஜாம் பாட்டிலில் எழுதியிருப்பதையும் வாசிக்கத் தோன்றும். நினைப்பதையெல்லாம் எழுதுவதில் உள்ள ஆபத்தும் இதுவே. இன்று விவிலியம், நாளை அரசியல், நாளை மறுநாள் சினிமா என்று ஒரே கலவையாக்கி கல்யாண வீட்டில் மிச்சம் இருக்கும் காய்கறியையெல்லாம் ஒன்றாய்ப் போட்டு கடைசியில் வைக்கும் 'கூட்டு' போல ஆகிவிடுகிறது. ஆகவே ஏதாவது உருப்படியாக எழுத வேண்டும் என்பது என் அக்டோபர் மாத வாக்குறுதி. எல்லாவற்றையும் பற்றி எழுதுவது ஏதோ நுனிப்புல் மேய்வது போல இருக்கிறது. ஆகவே, இன்றிலிருந்து ஒரு புதிய முயற்சி. நம் முயற்சியின் தலைப்பு: வரலாற்று இயேசு. இயேசுவின் வரலாறு என்று நாம் நிறைய கேட்டிருப்போம்.

ஆனால், வரலாற்றில் வாழ்ந்த இயேசுவுக்கும், மதத்தில் நாம் காணும் கிறிஸ்துவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நம் ஒவ்வொருவருக்குமே ஒரு வரலாறு இருக்கிறது. வரலாறு என்றால் என்ன? ஒன்று, நேரம். மற்றொன்று, இடம். நாம் குறிப்பிட்ட ஆண்டு பிறந்து, குறிப்பிட்ட ஆண்டில் இறந்து விடுகிறோம். நம் பிறப்பும், இறப்பும் இடம் சார்ந்தே இருக்கின்றது. நேரத்திற்குள்ளும், இடங்களுக்குள்ளும் நாம் செய்யும் பயணமே வரலாறு. வரலாறு என்று சொல்லும் போது கொஞ்சம் கவனம் தேவை. ஒருவருக்கு போராளி எனத் தெரிவது மற்றவருக்கு தீவிரவாதி எனத் தெரியலாம் - இதுதான் வரலாறு.

இயேசுவின் வரலாற்றை எங்கே தொடங்குவது? கண்டிப்பாக அவரது பிறப்பில் தான். எங்கே பிறந்தார்? எப்படிப் பிறந்தார்? என்று வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு இல்லை. உலக வரலாற்றில் இயேசுவின் 'இறப்பு' மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிறப்பு பற்றிய குறிப்புகள் இல்லை. இயேசுவின் பிறப்பு குறித்து நமக்குத் தகவல் தருபவை நற்செய்திகள். அவற்றை எடுத்துப் பார்த்தால் முன்னுக்குப் பின்னான தகவல்கள். மேலும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய ஒரு சில 'மறைந்த' நற்செய்திகளும் இருக்கின்றன. அவற்றை கத்தோலிக்கத் திருச்சபை தொடக்கத்தில் இருந்தே நற்செய்தி என ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகளை வரலாற்றுப் பின்புலத்தோடு, நற்செய்திகள் மற்றும் 'கள்ள' நற்செய்திகளின் துணையோடு இந்தப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய விழைகிறேன்.
'அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்' என்று எங்க தாத்தா அடிக்கடி சொல்வார்.
அந்த எண்ணத்தில் உதித்த சின்ன முயற்சியே இன்று தொடங்கும் நம் தேடல்.

ஏன்டா!....ஒன்னயும் உருப்படியா எழுதமாட்டியா? இங்கிருந்து அங்கேயும், அங்கிருந்து இங்கேயும் தாவுற! என்று கோபப்படுகிறீர்களா?

மன்னிக்கவும்.

'பாதை மாறுவதே என் பயணமானது!'

வருகிற திங்கள் முதல் புதிய கல்வியாண்டைத் தொடங்குகிறேன்.

விவிலிய அறிவியல் படிப்பின் இறுதியாண்டு இது. எனக்காக செபியுங்கள்.

No comments:

Post a Comment