Tuesday, October 28, 2014

மே பி ஆர் மே நாட் பி!

இன்று காலை ஆனந்த விகடனில் 'பேசாத பேச்செல்லாம்' பகுதி படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் இந்தப் பகுதியை நேரம் இருந்தால் படியுங்கள். வாழ்வின் எதார்த்தங்களை, தான் நேரில் கண்டதை போகிற போக்கில் அவ்வளவு அருமையாகச் சொல்கின்றார் இந்த ஆசிரியை. இன்று நான் படித்த பகுதி 'திடீரெனத் தோன்றும் நட்பு' பற்றியது.

நாம் வாழ்வில் திடீரென்று நாம் சந்திக்கும் ஒரு நபர் நம் வாழ்வில் அழிக்க முடியாத நபராக மாறும் அனுபவம் நம் அனைவருக்குமே இருந்திருக்கும்.

மெட்ராசுக்கு சென்ற புதிதில் ஒரு திரையரங்கில் சந்திக்க நேரிட்ட மூன்று பசங்களும் தன்னை 'அக்கா!' 'அக்கா!' என்று அன்போடு அழைத்ததையும், தன் மேல் அக்கறை காட்டியதையும் சொல்லும் அவர் இப்படி எழுதுகிறார்:

திரையரங்கிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நேரம் அந்த தம்பிகளில் ஒருவன் போன் செய்தான். 'என்னக்கா! எங்க இருக்க? பத்திரமா போய்ட்டியா?' என்று கேட்டான். எனக்கு அவன் பெயரைக் கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. 'மெட்ராஸ் தம்பி' என்று மட்டும் அவனது பெயரை கான்டக்டில் சேமித்தேன். அவனுமம் 'மெட்ராஸ் அக்கா' என்று தான் சேமித்து வைத்திருக்கக் கூடும். பின்னொரு ஞாயிறு மதியம் திரும்பவும் அழைத்தான். ஏதோ நேற்றுதான் கடைசியாகப் பேசியது போல அவ்வளவு நெருக்கமாகப் பேசினான். பேசிக்கொண்டே, 'எங்க வீடு தாம்பரம் சர்ச் பக்கம் தான். வந்தா வாங்க!' என்றான். நானும், 'சரி' என்றேன். இந்த நீண்ட உரையாடலில் கூட நாங்கள் ஒருவர் மற்றவரின் பெயரைக் கேட்டுக்கொள்ளவில்லை. ஃபோனை வைத்தவுடன் 'எனக்கு சென்னையில் ஒரு புதிய உறவு' என்று சொல்லிக் கொண்டேன்.

நிற்க!

'சீக்கிரம் வந்தது சீக்கிரம் போய்விடும்' என்று சொல்வார்கள். அது பணத்திற்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர, உறவுகளுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன். வாழ்வில் நாம் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்தில் 'பழகிய பின் உறவாடுவது' என்பதெல்லாம் இயலாத ஒன்று.

சில வருடங்களுக்கு முன் யாஹூ இணையதள உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த போது அதன் தாரக மந்திரம் 'திங்க்' என்று இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த கூகுள் 'திங்க்' பண்றதுக்கெல்லாம் நேரம் இல்ல தம்பி! இனிமேல் 'ப்ளிங்க்' மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும் என்று புதிய பாதையை வகுத்தது. நம் வாழ்வில் நாம் முக்கியமான முடிவெடுக்கும் சமயங்களில் கூட 'திங்க்' செய்து எடுப்பதை விட, ஒரு 'ப்ளிங்கில்' எடுப்பதுதான் இயல்பான முடிவாக இருக்கிறது. ஒருசிலர் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் அவர்கள் முடிவை இரண்டாவது முறை மாற்றிவிட்டார்கள் என்பதல்ல. அவர்கள் முதல் முறை முடிவே எடுக்கவில்லை. அவ்வளவுதான்.

பனிவிழும் ஓர் இரவில் திடீரென அடித்த செல்ஃபோன் ஒலி வாழ்வின் போக்கையே மாற்றிவிடுமா என்று நீங்கள் கேட்டால், நான் 'ஆம்!' என்றே சொல்வேன்.

இன்றும் நம் மொபைல்களில் யாரோ ஒருவரின் குரலைக் கேட்டு, அவரைப் பிடித்திருந்தும் அவர் யாரெனத் தெரியாததால் 'யாரோ' என்று அழைப்பில் சேமித்து வைக்கத்தானே செய்கின்றோம். நான் மதுரையில் இருந்தபோது 'யாரோ 1', 'யாரோ 2', 'யாரோ 3' என்று போட்டிருந்த காலமும் உண்டு. இப்பல்லொம் அப்படி யார் பெயரும் இல்லை. வெளியில் இருந்து வரும் அழைப்பையெல்லாம் இத்தாலி நெட்வொர்க்கே 'அன்நோன்' என மாற்றித் தந்துவிடுகிறது.

'என் அயலான் யார்?' என்று தன்னிடம் கேட்ட மறைநூல் அறிஞருக்கு 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு.

நல்ல சமாரியனாய் இருப்பதற்கு நமக்குத் தேவையானது இரண்டுதான்: ஒன்று, நமக்கு அருகில் நடப்பவற்றைக் காணும் திறந்த மனம், மற்றொன்று, நாம் வேகமாகப் பயணம் செய்யும் கழுதையை நிறுத்திக் கொஞ்சம் இறங்கிப் பார்க்கும் தாராள உள்ளம். போகிற போக்கில் பார்த்துக் கொண்டே போகிறவர்கள் எல்லாம் நல்ல சமாரியர்கள் ஆவதில்லை. கள்வர் கையில் அகப்பட்டவன் சத்திரத்தில் இருந்து எப்போது உடல் நலம் பெற்று வந்தான், சமாரியன் அவனைக் காண திரும்ப வந்தானா என்பதற்கெல்லாம் விடை கதையில் இல்லை. வந்திருக்கலாம். வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் செய்த அந்தச் செயல் அடிபட்டவனின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.

இன்னைக்கு நமக்குத் தெரியாத நம்பர்ல இருந்து ஃபோன் வந்தாலும், தெரியாத நபர் காலிங் பெல் அடித்தாலும், காலர் டியூன், கிரெடிட் கார்ட் என டெலிஷாப்பிங் ஃபோன் வந்தாலும் எடுத்து ஒரு நிமிடம் பேசலாமே.

பேசுகின்ற அந்த நபர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாய் மாறிவிடுவாரா?

மே பி ஆர் மே நாட் பி!

1 comment:

  1. ஆனந்த விகடன் ஆசிரியையின் துணுக்கு ரசிக்கும்படி இருப்பினும் இப்படியொரு 'பாசக்கார அக்கா' அந்தத் தம்பிகளின் பெயர்களைத் தெரிந்துகொள்ளாமல் போனது ..நம்ப முடியவில்லை.'உறவு' பற்றிய தங்களின் பகிர்வு எனக்கும்கூட பல 'மலரும் நினைவுகளைத்' தந்தது.நன்றிகள்.இன்றைய 'நல்ல சமாரியனுக்குத்தேவை...திறந்த மனமும், தாராளமாகப் உள்ளமும்...ஒத்துக்கொள்ள வேண்டிய அருமையான விஷயம்.பல நல்ல நினைவுகளை அசைபோட வைத்த தந்தைக்குப் பாராட்டும், நன்றிகளும்..

    ReplyDelete