Tuesday, October 28, 2014

ஒரு வித்தியாசமான பெண்!

சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்த நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும். (மத்தேயு 19:12)

மேற்காணும் நற்செய்தி பழைய மொழிபெயர்ப்பில் இப்படி உள்ளது:

சிலர் பிறவியிலேயே அண்ணகராக இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அண்ணகர் நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

இதை புதிய மொழிய பெயர்ப்பில் 'அண்ணகர்' என்பதை 'திருநங்கை' என மொழிபெயர்த்திருக்க வேண்டுமே தவிர அதற்கு 'மணஉறவு' என்னும் பொருள் கொடுப்பது சிறப்பாகத் தெரியவில்லை.

இன்று மாலை நவநாள் செபத்திற்காக ஆலயத்திற்குச் சென்றேன். நான் சென்ற நேரம் எற்கனவே நவநாள் தொடங்கியிருந்தது. வழக்கமாக நான் அமரும் இடத்தில் அமரச் சென்றபோது தூரத்திலிருந்து ஒருவர் கையசைத்து அழைத்தார். அழைத்தது ஒரு எக்ஸ்.ஒய்.இசட். அவர் ஒரு திருநங்கை. நான் அருகில் சென்ற பார்த்தபோது அதிர்ச்சி. கலங்கிய கண்களாய் அமர்ந்திருந்தார். 'உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்!' என்றார். நானும் 'சரி' என்று சொல்லி அவரை அங்கிருந்த 'ஒப்புரவு அறைக்கு' அழைத்துச் சென்றேன். கதவை சாத்தியவுடன் ஓவென்று அழத் தொடங்கினார். எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. நிறுத்தி நிதானமாகப் பேசினாலே எனக்கு இத்தாலியன் தரிகனத்தாம் போடும். இவர் அழுகையும், இத்தாலியனுமாய் இருந்தார். ஒரு கட்டத்தில் 'எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்!' என்று வெளியே உள்ளவர்களைப் பார்த்து கையை நீட்டினார்.

இவரைப் பற்றிய ஒரு பின்குறிப்பு. எங்கள் பங்கைச் சார்ந்தவர் இவர். வயது ஏறக்குறைய 20 இருக்கும். எல்லாராலும் 'உனா தோன்னா ஸ்த்ரானா' (ஒரு வித்தியாசமான பெண்) என அறியப்பட்டவர். குரல், உடல் வளர்ச்சி எல்லாம் பெண் போல இருந்தாலும், அவரைப் பார்த்தாலே அவர் பெண் இல்லை என்று சொல்லிவிடலாம். மாலையில் ஆலயம் திறக்கப்படுமுன்பே வந்து விடுவார். செபம் சொல்வார். வாசகம் வாசிப்பார். காணிக்கை எடுப்பார். புத்தகங்களை அடுக்குவார். கொஞ்ச நாட்களாக அவர் சீக்கிரம் வந்தாலும் வேறு எதுவும் செய்யாமல் ஒரு ஓரமாகவே அமர்ந்திருந்தார். அதன் காரணம் இன்றுதான் புரிந்தது.

செபமாலை சொல்ல தினமும் வரும் பெண்கள் சிலர் தங்களோடு அமர வேண்டாம் என்று அவரைச் சொன்னார்கள் போல! இன்று அனைவருக்கும் நவநாள் பேப்பர் கையில் கொடுத்துக் கொண்டே வந்தவர் இவருக்குக் கொடுக்கவில்லையாம். உச்சகட்டமாக உடைந்துவிட்டார். 'என்னை யாரும் கண்டுகொள்வதில்லையே!' என்ற ஒரு உணர்வு மிகக் கொடுமையான உணர்வு.

'நான் இப்படிப் பிறந்தது என் குற்றமா?' என்று அவர் என்னிடம் கேட்டபோது எனக்கே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. நாம் செய்யாத அல்லது நம் சக்திக்கு உட்படாத சிலவற்றிற்காக மற்றவர்கள் நம்மை வெறுக்கவோ, அல்லவோ கண்டு கொள்ளாமலோ இருக்கும் போது நம்மால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை.

நம் பிறப்பு, நம் நிறம், நம் குடும்பம், நம் உடல்வாகு, நம் மொழி, நம் கலாச்சாரம் - இவையெல்லாம் நாம் கேட்காமலேயே நம்மேல் திணிக்கப்பட்டவை. இதன் பொருட்டு நாம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? படைத்தவர் என்று ஒருவர் இருந்தால் அவர் பொறுப்பு அல்லது பரிணாம வளர்ச்சியின் பொறுப்பு.

ஒருவழியாக சமாதானம் செய்து, என்னுடன் அமர்ந்து செபியுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டேன். போகும் போது கேட்டார்: 'தினமும் நான் இந்த இடத்தில் உட்காரலாமா?' நானும் 'சரி!' என்றேன். 'அவர்கள் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார்களா?' என்றார். நானும் உங்களைப் போலத்தான் என நினைத்துக் கொண்டு 'இல்லை!' என்று புன்முறுவல் செய்தேன்.

அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்படும் போது ஒவ்வொருவரும் ஒரு விருதுவாக்கு எடுப்பதுண்டு. என்னோடு அருட்பொழிவு செய்யப்பட்ட என் நண்பர் அருட்பணி. வரன் அவர்கள் தன் விருதுவாக்காக மேற்காணும் நற்செய்திப்பகுதியை எடுத்திருந்தார்: 'இறையரசுக்கான திருநங்கையாக!'

இயேசு மூன்று வகையான திருநங்கை நிலையைக் குறிப்பிடுகிறார்:

அ. பிறப்பால் திருநங்கையாக இருப்பது.

ஆ. தன் விருப்பத்தால் தன் உறுப்பை சிதைத்துக் கொள்வது. அல்லது மற்றவர்களால் (உதாரணத்திற்கு மருத்துவ காரணங்களுக்காக!) அந்த நிலைக்கு ஆளாக்கப்படுவது.

இ. இறையரசுக்காக தன்னையே அந்த நிலைக்கு உள்ளாக்கிக் கொள்வது.

போன வாரம் 'வலிகளின் நிறங்கள்' என்ற கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் வாசித்தேன். திருநங்கையரின் வாழ்க்கை பற்றிய ஒரு நாடகத்தின் விமர்சனம் அது. திருநங்கையரின் ஒவ்வொரு வலிக்கும் ஒரு கலர் உண்டு என்று வாதிடுகிறார் ஆசிரியர்.

'நவநாள் பேப்பர் கொடுத்துக் கொண்டே வந்தவர் ஒருவேளை இவரைப் பார்க்காமல் போயிருக்கலாமோ!' என்று நினைத்தேன். நாம் அறியாமல், தெரியாமல் செய்யும் காரியங்கள் கூட ஆறாத காயத்தை விட்டு விடுகிறது.

ஒரு முறை நான் பணியாற்றிய பங்குத்தளத்தில் திருப்பலியில் நன்மை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஒரேயொரு பெண் மட்டும் வரிசையில் நிற்க என் பாத்திரத்தில நற்கருணை தீர்ந்து விட்டது. நான் பீடத்திற்கு சென்று எடுத்து வருவதற்கு முன் அந்தப் பெண் எங்கேயோ கூட்டத்தில் மறைந்துவிட்டார். 'சரி வேறு யாரிடமாவது வாங்கப் போயிருப்பார்' என்று நினைத்துக் கொண்டு நானும் திருப்பலி முடிந்து அறைக்குச் சென்று விட்டேன். சற்று நேரம் கழித்து யாரோ கதவைத் தட்ட திறந்தவுடன் அந்தப் பெண் நிற்பதைக் கண்டேன். 'வாங்க அக்கா!' என்று உள்ளே அழைத்தேன். உள்ளே வந்தவர் குபீரென அழ ஆரம்பித்தார். 'ஃபாதர் நான் ஒரு லக் இல்லாதவள். நான் எதற்கும் பிரயோசனம் இல்லாதவள். நான் வந்தவுடன் நன்மையும் தீர்ந்து விட்டது பார்த்தீர்களா!' என்று அழுதுகொண்டே இருந்தார்.

மனித மனம் எவ்வளவு இலகுவானது. சின்ன நிராகரிப்பையும் அதனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. நாம் குழந்தையாய் இருக்கும் போது யாராவது நம்மை அழ வைப்பது தேவையாக இருந்தது. ஆனால் நாம் வளர்ந்த பின் யாராவது நம்மை சிரிக்க வைப்பது தேவையாக இருக்கிறது. என்னே வளர்ச்சியின் முரண்பாடு!

ஒவ்வொருமுறை நாம் வளரும்போதும் கண்ணீரும் அதிகமாகிதே!


2 comments:

  1. 'திரு நங்கைகள்'..இவர்களைக்கண்டாலே பயம் கலந்த வெறுப்புதான் எனக்கு.காரணம் எனக்கேற்பட்ட சில அனுபவங்கள் அப்படி. ஆனால் இன்று " நம் சக்திக்குட்படாத சிலவற்றிற்காக பிறர் நம்மை வெறுப்பது"... யோசிக்க வைக்கும் வரிகள்." நிராகரிப்பு" ..அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அது எத்துணை கொடுமை என்று.இன்று நம்மைச்சுற்றியிருப்பவர்களில் யாராவது ஒருவரின் 'புன்முறுவலுக்கு' நாம் காரணியாய் இருக்கலாமே! " ஒவ்வொரு முறை நாம் வளரும்போதும் கண்ணீரும் அதிகமாகிறதே".. உண்மைதான்.கண்ணீர் என்பது நம் இயலாமையின் வெளிப்பாடு. என்னதான் வல்லவர்களாய், நல்லவர்களாய் நம் வளர்ச்சி இருப்பினும் இந்த 'இயலாமையும்' கூட சேர்ந்தே வளருகிறது என்பது நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று...

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய விடயம்....நன்றி தந்தையே.

    ReplyDelete