Thursday, October 16, 2014

ஊனியல்பும், ஆவியின் இயல்பும்!

இன்றைய திருப்பலியின் போது வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் தூய பவுலடியார் கலாத்திய திருஅவைக்கு எழுதும் தனது திருமடலில் ஆவியின் இயல்புக்கும், ஊனியில்புக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகின்றார்.

ஊனியன்பின் செயல்கள் என அவர் சொல்வது: பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம். மொத்தம் 15.

ஆவியின் கனிகளாக அவர் சொல்வது: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம். மொத்தம் 9.

இந்த ஆவியின் கனிகளைத் தான் நாம் நமது உறுதிப்பூசுதல் மறைக்கல்வி வகுப்புகளில் படிக்கின்றோம்.

தூய பவுலடியாரின் இந்த 'லிட்டனி' வகை எழுத்து ஒரு இலக்கிய நடை. இது விவிலியத்தில் மட்டுமல்ல கிரேக்க இலக்கியங்களிலும் இருக்கின்றது. மக்களுக்கு நேர்மறையானவற்றைச் சொல்வதற்கு முன் எதிர்மறையானவற்றைப் பட்டியலிடுவது. ஆயர் திருமுகங்கள் என்று சொல்லப்படும் 1, 2 திமொத்தேயு மற்றும் தீத்து திருமுகங்களில் இந்த இலக்கிய நடை அதிகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஊனியல்பின் செயல்கள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

இன்று கொஞ்சம் கூடவே இருக்கின்றன.

இன்றைக்குத் தூய பவுலடியார் இருந்தால் இந்த லிஸ்டை இன்னும் நீட்டிருத்திருப்பார்: அதிக நேரம் மொபைலில் பேசுவது, ஃபேஸ்புக் பார்ப்பது, வாட்ஸ்ஆப்பில் மற்றவர்கள் கடைசியாக வந்தது எப்போது எனத் தேடுவது, தலைவி ஜெயிலுக்குப் போனால் பஸ்சை எரிப்பது, சாதியின் பெயரால் சண்டையிடுவது, டாஸ்மாக் போவது, வட்டிக்குப் பணம் கொடுப்பது, ப்ளாக் எழுதுகிறேன் என்ற பெயரில் என்னவாவது எழுதுவது (!) என்று சொல்லிக் கொண்டே போவார்.

ஆவியின் கனிகளுக்கு எதிராக இருக்கும் அனைத்துமே ஊனியல்பின் செயல்கள் தாம். ஆனால், ஊனியல்பின் செயல்கள் நமக்கு எளிதாகத் தெரிகின்றன. ஆவியின் கனிகள் கொடுப்பதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது.

ஒன்று நம்மிடம் பொறுமை இல்லை. மற்றொன்று தொடர்ந்து தக்க வைக்கும் விடாமுயற்சியும் இல்லை.

இந்த இரண்டு வரம் கேட்கிறேன் இறைவனிடம்!

2 comments:

  1. Anonymous10/16/2014

    some one prayed for porumai this way

    irivaa

    enaku porumaiyai kodu

    adai udane kodu

    ha ha ha

    ReplyDelete
  2. ஆவியின் கனிகளையும், ஊனியல்பின் இயல்புகளையும் வார்த்தைகளாக யோசிக்கும்போதே,சொல்லும்போதே அவற்றில் உள்ள மென்மையும்,கடுமையும் நமக்குப் புரிகிறது.தந்தை கொடுத்துள்ள ஊனியல்பின் செயல்களின் புதுப்பட்டியல் நம்மைக் கண்டிப்பாக யோசிக்க வைக்க வேண்டும்.யோசிப்பது மட்டுமின்றி விரைவில் அதை செயலாகவும் மாற்றுவோம்...தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete