Monday, October 27, 2014

எங்கே பயம் முடிகிறதோ!

நாளை மறுநாள் எங்கள் பங்கின் பாதுகாவலர் தூய யூதா ததேயுவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இன்று மேதகு கர்தினால் பீட்டர் பரோலின், திருப்பீட முதல்வர், அவர்களின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

திருப்பீடத்தில் திருத்தந்தை அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வெகு சாதாரணமாக வந்திருந்தார். பாதுகாப்பு, பந்தோபஸ்து எதுவும் இல்லை. தன் கைப்பையைத் தானே எடுத்துக் கொண்டு, செங்கோல், தொப்பி என எதுவும் எடுத்து வராமல் ஒரு சாதாரண அருட்பணியாளரைப் போல வந்தார். திருப்பலி நிறைவேற்றினார். எங்கள் பங்கின் இளைஞர், இளம்பெண்கள் இந்த நாட்களில் நடத்திக் கொண்டிருக்கும் 'ப்ளே' ஒன்றையும் பார்க்க இருக்கிறேன் என்று சொன்னார். தன் கார் டிரைவரைத் தானே போய் அழைத்து வந்தார். 'நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா?' என்று டிரைவருக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டார். இரவு சாப்பாடு சாப்பிடுவதில்லையாம். 'ஒருவேளை சாப்பிடவில்லையென்றால் நாம் இறந்துவிடுவோமா?' என்று எளிமையாகக் கேட்டார். யாரும் தனக்கு வணக்கம் வைக்கவில்லையே என்ற கோபமோ, ஏமாற்றமோ இல்லை. எனக்கு அவரை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒரு மறைநூல் அறிஞர் கேட்கிறார், 'திருச்சட்டத்தில் மிகச் சிறந்த கட்டளை எது?' இயேசுவின் பதில்: 'உன் கடவுளை அன்பு செய்! உன் அயலானை அன்பு செய்!' என்று மிக எளிதாக, ஆனால் மிக ஆழமாக இருக்கின்றது.

இன்று அன்பு பல நேரங்களில் பயமாக மாறிவிட்டது. அதாவது, பதவியில் இருப்பவர்கள் தாங்கள் மற்றவர்களைப் பயமுறுத்தி அல்லது ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தியே அன்பைப் பெறுகிறார்கள். உதாரணத்திற்கு, அண்மையில் ஜெயாவுக்காக தமிழகத்தில் நடைபெற்ற மொட்டை, தாடி, அழுகை, ஒப்பாரி சமாச்சாரங்களைப் பார்த்தால் அவர்கள் எல்லாம் ஜெயாவை அன்பு செய்கிறார்கள் என்று அர்த்தமா? இல்லை! அவர்கள் பயப்படுகிறார்கள். அல்லது பயமுறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடவுளையும், நம் அயலாரையும் நாம் அன்பு செய்ய பயம் ஒருபோதும் காரணமாக இருக்கவே கூடாது.

கடவுளைப் பார்க்கவில்லையென்றால் நமக்கு நல்லது நடக்காது அல்லது நோய் வரும், நினைத்தது நடக்காது, அவர் கோய்ச்சுக்கிடுவார் என்று பயம் அடிப்படையில் நம் கடவுள் அன்பு இருந்தது என்றால் அது நம்மை அதிமுக தொண்டர்களோடு சேர்த்துவிடுகிறது.

அண்மையில் இணையதளத்தில் மாதாவின் ஒரு படம் வலம் வருகிறது. அதாவது, இந்தப் படத்தை 15 நிமிடங்களுக்குள் 13 பேருக்கு நீங்கள் பகிர்ந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். இதை அழிக்க முயன்றாலோ, பகிரவில்லையென்றாலோ உங்கள் வீட்டில் இறப்பு நடக்கும், நீங்கள் வேலை இழப்பீர்கள், தொழிலில் நஷ்டம் வரும் என்ற அச்சுறுத்தல்கள். பயத்தினால் சிலர் நமக்கென்ன என்று ஃபார்வர்டும் செய்கிறார்கள். ஆனால், இதுதான் அன்பா? தன் படத்தைப் பகிரவில்லையென்று ஒரு அன்னை, அதுவும் மாதா கோபப்பட முடியுமா?

பல நேரங்களில் அயலானின் அன்பும் கூட பயத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றது. அதாவது, அவனுக்கு இன்றைக்கு உதவி செய்யவில்லையென்றால் நாளைக்கு நமக்கு உதவி செய்யாமல் போய்விடுவானோ என்ற பயம் அல்லது அடுத்தவரை அன்பு செய்யாவிட்டால் நமக்கு மோட்சம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

ஆக, கடவுளன்பிலும், பிறரன்பிலும் பயம் அடிப்படையாக இருந்தால் அங்கு அன்பு இல்லையென்றே அர்த்தம்.

எங்கே பயம் முடிகிறதோ, அங்கு மட்டுமே அன்பு தொடர்கிறது!

2 comments:

  1. மேதகு.கர்தினால் பீட்டர் ப்ரோலின் அவர்களின் எளிமை போற்றப்பட,பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.'நிறை குடம் தளும்பாது' எனும் முதுமொழியை மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்
    பயம்...இந்த உண்ர்வு பற்றிக்கூறும்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தின் முக்கியத்துவம் கருதி சிறிது பயம் கலந்து ஊட்டப்படுகிறது. வளரும்போது அந்த பயம் சிலருக்கு காணாமல் போய்விட்டாலும் பலருக்குக் கூடவே வருவதுதான் நிஜம். அதைப் போக்குவதுதானே தங்களை மாதிரி இறையடியார்களின் வேலை! தாங்கள் அதைத்திறம்படச் செய்வதற்குப் பாராட்டுக்கள்.தங்கள் நற்பணி தொடர எங்களின் செபம் உதவட்டும்.இந்த வாரம் இனிய வாரமாய் அமைந்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete