Saturday, October 11, 2014

மரியாவின் பாடலும் கடைசி செய்தித்தாளும்

இன்று மரியாவின் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கல்லூரி புறப்பட்டுச் சென்றேன். போகும் வழியில் வழக்கமாக செய்தித்தாள் வாங்கும் கடைக்குச் சென்றேன். கடை ஏறக்குறைய வெறிச்சோடி இருந்தது. நேற்றைய தினம் குவிந்து கிடந்த புத்தகங்கள் இன்று இல்லை. ரொம்ப நாளா காலி பண்ணப் போறேன்னு சொன்னவர் இன்று உண்மையாகவே காலி பண்ணிவிட்டார். என்னைப் பார்த்தவுடன் புன்முறுவல் பூத்துக் கொண்டே 'இதுதான் கடைசி செய்தித்தாள்!' என்றார். அந்தப் புன்முறுவலின் பின்னால் ஒரு வலி இருந்தது. 18 ஆண்டுகளாக இந்த இடத்தில் கடை வைத்திருந்தவர் இன்று வாடகை கட்ட முடியாமல் காலி செய்வதாகச் சொன்னார். 'இனி என்ன செய்வேன்னு தெரியல!' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. 'நான் அப்புறம் வருகிறேன்!' என்று சொல்லிவிட்டு வெளியேறினேன். அவருக்குத் தெரியும் நான் திரும்பி வருவதற்குள் போய்விடுவார் என்று.

இரண்டரை ஆண்டுகள் தினமும் பார்த்த பல முகங்களில் அவர் முகமும் ஒன்று.

மனித முகங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் போதே சும்மாயிருப்பதில்லை. ஒன்றும் பேசவில்லையென்றாலும் அங்கே ஒரு தகவல் பரிமாற்றம் நடந்துவிடுகிறது. மனித முகம் ஒருவர் மற்றவரைப் பார்த்து 'என்னைப் பிடித்திருக்கிறதா?' 'நான் அழகாக இருக்கிறேனே!' என்று கேட்காமல் கேட்கிறது.

முகங்கள் ஒன்றையொன்று பார்க்கும் போது சில நேரங்களில் உள்ளம் துள்ளிக் குதிக்கின்றது. சில நேரங்களில் உள்ளம் வாடிப்போய்விடுகின்றது. 'உனக்காக எதையும் செய்வேன்!' என்று சொல்லத் தோன்றுகிறது. அல்லது 'ஐயோ! என்னால ஒன்னும் செய்ய முடியலையே!' என்று துவண்டு விடுகிறது.

மரியாளும் எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வை அழகிய பாடலாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. இந்திய மொழித் திரைப்படங்களில் உள்ளத்தின் மகிழ்ச்சியை, சோகத்தை, இழப்பை வெளிப்படுத்த பாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அதுபோலத்தான் நற்செய்தியாளர் லூக்காவும். இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் மூன்று பாடல்களை இணைக்கின்றார்: மரியாளின் பாடல் (1:47-55), சக்கரியாவின் பாடல் (1:68-79) மற்றும் சிமியோனின் பாடல் (2:29-32).

மரியாளின் பாடல் (1:47-55) முதல் ஏற்பாட்டில் வரும் அன்னாவின் பாடலின் (1 சாமுவேல் 2:1-10) திருத்திய பதிப்பு என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல், தன் சக்களத்தி பெனின்னா தன்னை ஏளனம் செய்ய, தன் கணவரும் தன்னை அடிக்கடி குத்திக் காட்ட, இறைவனின் முன்னிலையில் அழுது புலம்பி, சாமுவேலை குழந்தையாகப் பெற்றெடுக்கின்றார் அன்னா. தவமாய்த் தவமிருந்து பெற்ற குழந்தையைக் கடவுளின் ஆலயத்தில் அர்ப்பணித்துவிட்டு பாடும் பாடலே 'அன்னாவின் பாடல்'. மரியாளின் பாடலின் சூழல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

லூக்கா நற்செய்தியாளர் முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலை நன்கு அறிந்தவராக இருந்திருப்பார். அல்லது தான் யாருக்கு எழுதுகிறோமோ அவர்களுக்கு அந்தப் பாடல் நன்றாகத் தெரியும் என்ற பிண்ணனியில் எழுதியிருப்பார்.

இரண்டு பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

அ. ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது (லூக் 1:47) // ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் ... (1 சாமு 2:1)
ஆ. எனது மீட்பராம்...பேருவகை கொள்கின்றது (1:47) // நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன் (2:1)
இ. தூயவர் என்பது அவரது பெயர் (1:49) // ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர் (2:2)
ஈ. வலியோரை அரியணையிலிருந்து... (1:52) // வலியோரின் வில்கள்... (2:4)
உ. பசித்தோரை நலன்களால்... (1:53) // பசியுடன் இருந்தோர்... (2:5)

இரண்டு பாடல்களுக்கும் உள்ள வேற்றுமைகள் எவை?
அ. அன்னாவின் பாடல் அரசரை வாழ்த்துவதாக முடிகிறது (2:10) x மரியாவின் பாடல் ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நினைவுகூறுவதாக முடிகிறது (1:54).
ஆ. அன்னா கடவுளின் வல்லமையை நினைத்துப் பாடுகிறார் (2:4-7,9,10) x மரியாள் கடவுளின் இரக்கத்தை நினைத்துப் பாடுகிறார் (1:50,53-55).

மரியாவின் பாடல் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஆன்மீகப்பாடலாகத் தெரிகிறது. ஆனால் அதை ஆழ்ந்து பார்க்கும் போது மெசியாவின் வருகையின்போது வரும் பொருளாதார, சமூக, கலாச்சார 'தலைகீழ்' மாற்றத்தின் இறைவாக்காகத் தெரிகிறது.

எலிசபெத்தின் முகத்தைப் பார்த்தவுடன் மரியாளின் முகம் பாடுகிறது.

இன்று நாம் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்க்கும் போது நம் மனம் பாடுகிறதா? அல்லது வாடுகிறதா?

நான் காலையில் பார்த்த கடைசி செய்தித்தாள் நபரை மீண்டும் பார்த்தால் அவரிடம் நான் என்ன சொல்வேன்?


1 comment:

  1. 'முகம்'.அது நம் இதயத்தின் ஜன்னல்.நாம் பார்க்கும் அத்தனை முகங்களும் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.சில முகங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாலும்,வேறு சில முகங்களைப் பார்க்கையில் 'ஐயோ! பார்த்திருக்க வேண்டாமே' என்ற ஆதங்கத்திலும் நம் கண்கள் பனிக்கின்றன.சில முகங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.ஆனால் நமது முகம் அடுத்தவருக்கு எடுத்துரைப்பது என்னவென்று யோசிக்கலாமே! .." ஆனந்தமா..வியப்பா..மகிழ்ச்சியா....கருணையா...எதிர்பார்ப்பா...நன்றியா...!!?? இப்படி நேர்மறையான உணர்வுகளை ஏற்படுத்துவோமே! முதல் ஏற்பாட்டின் 'அன்னாவையும்,இரண்டாம் ஏற்பாட்டின் 'மரியாவையும்' நம் முகம் பார்த்துப் பூரிக்கச் செய்யலாமே!

    ReplyDelete