Friday, October 24, 2014

டிரினிட்டியும் ஒரு சூப்பர்ஸ்டிஷன்!

நம்பிக்கையின் வழியாக கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக!
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் இருப்பதாக!
கிறிஸ்துவின் அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!
(எபேசியர் 3:17-19)

இன்று திருப்பலியில் இந்த முதல் வாசகத்தை வாசிக்கக் கேட்டபோது ‘அறிவுக்கு எட்டாத இந்த அன்பை’ என்ற வார்த்தைகள் என்னைத் தொட்டன.

இன்று மாலை மருத்துவமனை தன்னார்வப் பணிக்காக தூய யோவான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். வார்டுக்குள் நுழைவதற்கு முன் வெள்ளைச் சட்டை, கையுறை அணிந்து கொள்ள வேண்டும். கையுறை அணிவதற்கு இலகுவாக இருக்க வேண்டி என் விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி மேசையில் வைத்தேன். அதை உடனே எடுத்துப் பார்த்த செவிலி ஒருத்தி ‘இது என்ன வித்தியாசமா? கறுப்பா?’ என்று கேட்டாள். ‘யானை முடி!’ என்றேன். ‘எதற்காக?’ என்றாள். ‘இது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்!’ என்றேன். ‘அப்படியா? இது சூப்பர்ஸ்டிஷன்!’ என்றாள். ‘அப்படியென்றால் மூவொரு இறைவனும் சூப்பர்ஸ்டிஷன் தான்!’ என்றேன் என்னையும் அறியாமல். அவள் ஒரு நொடி ஷாக் ஆகி நின்றாள். ‘என்ன சொன்ன?’ என்றாள். ‘அப்படியென்றால் மூவொரு இறைவனும் மூடநம்பிக்கை தான்! நீ நம்பவில்லையா?’ என்று சற்றே நிறுத்திச் சொன்னேன். ‘க்வெஸ்தோ எ உன் ஸ்காந்தலோ!’ (இது ஒரு அபத்தம்! இடறல்!) என்று புலம்பிக் கொண்டே வார்டு நோக்கி நடந்தாள்.

எனக்குள் ஒளிந்திருந்த கடவுள் நம்பிக்கை சட்டென்று என் நினைவிற்கு வந்தது. ‘நான் ஏன் அப்படிச் சொன்னேன்?’ என நினைத்துக் கொண்டு நானும் வழிநடந்தேன். வேலை நேரம் முழுவதும் ‘டிரினிட்டி ஒரு சூப்பர்ஸ்டிஷனா!’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

‘ஒன் மேன்ஸ் ஃபுட் இஸ் அனதர் மேன்ஸ் பாய்ஸன்’ என்று சொல்வார்கள். ‘ஒன் மேன்ஸ் க்ரீட் இஸ் அனதர் மேன்ஸ் சூப்பர்ஸ்டிஷன்’ என்று சொல்லலாம் தானே!

‘ஒன் மேன்ஸ் லவ் இஸ் அனதர் மேன்ஸ் மேட்னஸ்!’

எபேசுத் திருச்சபையில் நிலவிய பிரச்சனை இதுதான்: ‘இயேசு எப்படி எல்லாரையும் அன்பு செய்தார் என்றும் அந்த அன்பிற்காக சிலுவையில் மரித்தார் என்றும் சொல்லலாம்?’

கடவுளின் அன்பு அவர்களுக்கு வெறும் அறிவு சார்ந்த கேள்வியாக மட்டுமே தெரிந்தது.

அவர்களுக்குத் தெளிவாக எழுதுகின்றார் பவுலடியார்: ‘அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!’

கடவுளின் அன்பு மட்டுமல்ல, நம் சக மனிதர்களின் அன்பே பல நேரங்களில் நம் அறிவுக்கு எட்டாததாகவே இருக்கின்றது.

‘ஹார்ட் ஹேஸ் இட்ஸ் ரீஸன்ஸ் விச் மைன்ட் வில் நெவர் நோ!’ என்பார்கள். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்னும் இந்த மூன்றும் இதயம் சார்ந்தவை தான் போல. இந்த மூன்றில் மட்டும் தான் மூளை இதயத்திற்கு அடிமையாக இருக்கிறது.

அன்பை ஒரு ஆர்க்கிடெக்ட் போல ஆய்வு செய்கிறார் பவுலடியார். அகலம், நீளம், உயரம், ஆழம் என அளந்து பார்க்கத் துடிக்கின்றார். அளந்து பார்ப்பது மூளையின் வேலை. அள்ளிக் கொடுப்பது இதயத்தின் வேலை.

‘நாம வச்சிருக்கிற உறவுகள் எல்லாம் நிலைக்காதுடா! ரொம்ப ஃபோன்ல பேசாத!’ என்று அடிக்கடி என்னை எச்சரிப்பான் என் நண்பன் ஒருவன். இன்று நான் நினைக்கிறேன்: ‘என் நம்பிக்கை அவனுக்கு ஒரு சூப்பர்ஸ்டிஷன்!’

நம் வட்டத்திற்கு வெளியே நின்று பார்த்தால்…

யானை முடி ஒரு சூப்பர்ஸ்டிஷன்!

டிரினிட்டியும் ஒரு சூப்பர்ஸ்டிஷன்!

1 comment:

  1. யானை முடி அதிர்ஷ்டம் தந்ததா...தந்தைக்குத் தான் வெளிச்சம்.ஆனால் 'டிரினிட்டி' என்பது நான் மனமார ஏற்றுக்கொண்ட ஒன்று என்பதால்( அதன் முழுப்பரிணாம்மும் எனக்குப் புரியாவிட்டாலும்கூட) அது என்னைப்பொறுத்தவரை பொருள் தரும் ஒரு சொல்.தந்தை என்ன சொல்ல வருகிறார் என்று தெரிவதற்கு முன்னே கூட அந்தத் தலைப்பைப் பார்த்த உடனே என் முகத்தை சுளிக்கிறேன்.காரணம் அங்கே என் நம்பிக்கை ஒரு கேள்விக்குறி ஆகிறது.நம்பிக்கையோ,சூப்பர்ஸ்டிஷனோ அவரவர் மனம் சார்ந்த விஷயம்.மனது சொல்வதை மூளை ஏற்றுக்கொண்டுவிட்டால் மற்றும் மேல் அப்பீல் இல்லை.There isn't any universally accepted norms as to what is belief & what is superstion.Do U agree with me Father?..

    ReplyDelete