Wednesday, October 1, 2014

காக்கும் தூதர்கள்

நாளை காவல் தூதர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' (மத்தேயு 18:10) என்னும் இயேசுவின் வார்த்தைகளே காவல்தூதர்கள் என்னும் சிந்தனையின் தொடக்கம்.

வானதூதர்கள் கடவுளின் செல்லப்பிள்ளைகளைக் காப்பாற்றுபவர்களாகவும் (தானியேல் 6:20-23, 2 அரசர்கள் 6:13-17), தகவல்களை வெளிப்படுத்துபவர்களாகவும் (திப 7:52-53, லூக் 1:11-20), வழிகாட்டுபவர்களாகவும் (மத் 1:20-21, திப 8:26), பராமரிப்பவர்களாகவும் (தொநூ 21:17-20, 1 அர 19:5-7), பணிவிடை செய்பவர்களாகவும் (எபி 1:14) வலம் வருகின்றனர்.

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதர் உண்டு என்பதற்கான விவிலிய பரிந்துரை எதுவும் இல்லை. யூதர்களுக்கும் காவல் தூதர்கள் நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கை இவர்கள் பாபிலோனியாவில் நாடு கடத்தப்பட்டபோது இவர்களுக்கு வருகின்றது.

திருச்சபையின் தந்தையர் என அழைக்கப்படுகின்ற அகுஸ்தினார், அக்வினாஸ், ஐரேனியு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டிச் சாத்தான் இருப்பதாகவும் சொல்வது வியப்பாக இருக்கிறது.

காவல் தூதர் என்பவர் கடவுளிடமிருந்து நமக்கு வரும் வாக்குறுதி. 'உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என்று சொல்லும் கடவுள் நம் கண்ணுக்குத் தெரியாத காவல் தூதர்கள் வழியாக தன் பிரசன்னத்தை நமக்கு உணர்த்துகிறார்.

காவல்தூதர்கள் நம்மோடு எப்போதும் இருக்கிறார்களா? அப்படி இருந்தும் நாம் ஏன் சில நேரங்களில் தவறான வழியில் செல்கிறோம்? அல்லது நாம் நல்லது செய்யும் போது மட்டும் உடன் இருக்கிறார்களா? நல்லது-கெட்டது என்பதை நாம் எதை வைத்து அளவிடுவது? - இந்தக் கேள்விகளின் விடைகளும் காவல்தூதர்களின் பிரசன்னைத்தைப் போலவே மறைபொருளானவை!

என்னைப் பொறுத்தவரையில் மூன்று வகை காவல்தூதர்கள் இருக்கிறார்கள்:

அ. நாம் பிறக்கும் போது கடவுள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க ஒருவரை நியமிக்கிறார். அவர் முதல் தூதர்.

ஆ. நம்மோடு வாழ்ந்து இன்று நம்மை விட்டு மறைந்து நிற்கும் நம் பெற்றோர், தாத்தா - பாட்டி, நண்பர்கள் நாம் சுவாசிக்கும் காற்றாக, நாம் குடிக்கும் தண்ணீராக, நம்மைத் தாங்கும் பூமியாக சுற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாம் தூதர்கள்.

இ. இன்று நம்மை நேசிக்கும், நாம் நேசிக்கும் உறவுகள். நமக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், வழிகாட்டும் பெரியவர்கள், நண்பர்கள். நம் நலன் ஒன்றையே இவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் மூன்றாம் தூதர்கள்.

காக்கும் தூதர்கள் உடனிருக்க கலக்கம் ஏன்?

1 comment:

  1. மிக அழகான பதிவு..என் சிறு பிராயத்திலிருந்தே என்னைக் கவர்ந்தவர்கள் இந்தக் காவல் தூதர்கள்." நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக்கைவிடுவதுமில்லை".... இறைவனுடைய பிரசன்னத்தை நமக்கு உணர்த்துவது இவர்களுடைய உடனிருப்பு...ஆறுதலான வார்த்தைகள்.நம் நலன்நாடும்,நம் நலன்காக்கும் யாவருமே வானதூதர்கள் தாம்....அனைவரும் மனதார உணர்ந்து மகிழக் கூடிய வரிகள்.இந்த அழகுப்பதிப்புக்கு நன்றிகள் தந்தையே!

    ReplyDelete