Saturday, October 25, 2014

ஆண்களா? அல்லது பெண்களா?

'நெருக்கடியான சூழல்களை எளிதாகக் கையாளுபவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா?' என்ற தலைப்பில் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் ஒரு தீபாவளி அன்று ஒளிபரப்பப்பட்டதாகவும், அதை தான் பார்த்ததாகவும் என் நண்பர் கல்லூரியில் சொல்லிக் கொண்டிருந்தார். இன்று நான் சந்தித்த அருட்செல்வி ஒருவரும் அதைப் பற்றியே சொன்னார்.

அந்தப் பட்டிமன்றத்தைப் பற்றி என் நண்பர் சொன்னதை வைத்து இந்த நாளில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பட்டிமன்றத்தில் யார்? யார்? என்ன பேசினார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நண்பர் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

அ. தீர்ப்பு பெண்கள் சார்பாக வழங்கப்பட்டது.
ஆ. பேசியவர்கள் விவிலியம் மற்றும் இந்து இலக்கியங்களின் பின்புலங்களில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இந்த இரண்டையும் வைத்து கொஞ்சம் பில்ட்-அப் செய்து எழுதுவோம்.

அ. நாம் பயன்படுத்தும் டெக்னாலஜியைப் பாருங்களேன். இன்று நாம் பயன்படுத்துவது நேற்றைய ப்ராடக்டின் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. இன்று நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 8, நேற்றுப் பயன்படுத்திய விண்டோஸ் 7ன் மேம்பட்ட பதிப்பு, மேக்புக்கின் யோஸ்மைட், நேற்றைய லெப்பர்டின் மேம்பட்ட பதிப்பு. நேற்று ஐஃபோன் 5, இன்று ஐஃபோன் 6. ஆக, பழையவற்றின் தவறுகள் சரிசெய்யப்பட்டு, புதிய படைப்பு பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றது. இதை அப்படியே விவிலியத்தின் படைப்பு கதையாடலுக்குப் பொருத்திப் பாருங்கள். மனிதர்களில் முதலில் படைக்கப்பட்டவர் ஆண். இரண்டாவது படைக்கப்பட்டவர் பெண். ஆக, லாஜிக் படி பார்த்தால் பெண் என்பர் ஆணின் மேம்பட்ட பதிப்பு. ஆக, பெண்களுக்கு இயல்பாகவே வாழ்வின் எந்த சூழ்நிலையையும் கையாளும் மனப்பக்குவம் இருக்கின்றது. அதிலும், நெருக்கடியான சூழல்களை மிக இலகுவாகக் கையாள்வார்கள்.

ஆ. புதிய ஏற்பாட்டில் இயேசுவிடம் தன் மகளைப் பேயின் கட்டிலிருந்து விடுவிக்கும்படி கெஞ்சிக் கேட்கும் கனானியப் பெண் நெருக்கடியான சூழலை எப்படிக் கையாளுகிறார் பாருங்கள்! இயேசு தன்னை 'நாய்' என அழைத்தாலும், 'பிள்ளைகளின் உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடலாகாது' என்று இழிவுபடுத்தினாலும், அதைப் பொருட்படுத்தாது தன் மகளின் நலன் தான் மேல் என்றும், அதற்காக எந்த இழிநிலையையும் ஏற்கத் தயார் என்றும் சொல்கின்றார். அவர் தன் வாழ்வின் நெருக்கடியான இந்தச் சூழலைக் கையாளும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது.

இ. மோவாபு நாட்டுப் பெண் ரூத்து தன் கணவன் இறந்த போதும், தன் சக்களத்தி தன் வீடு திரும்பிய போதும், தன் மாமியாரின் தனிமை போக்க உடன் நிற்கின்றார். 'ஆண்டவரைக் கண்டோம், தண்டிக்கப்படுவோம்!' என்று புலம்பிக் கொண்டிருந்த சிம்சோனின் தந்தை மனோவாவுக்கு, கடவுளின் இரக்கத்தை உணர்த்தியவர் அவரின் மனைவி - ஒரு பெண். தன் சக்களத்தியோடு சேர்ந்துகொண்டு தனக்குக் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை கடவுளிடம் எடுத்துச் சொல்லி கண்ணீர் வடித்து குழந்தையையும் பெற்றெடுத்து, அதைக் கடவுளுக்கும் காணிக்கையாக்கிவிடுகின்றார் சாமுவேலின் தாய் அன்னா.

இப்படியாக விவிலியத்தில் நெருக்கடியான சூழல்களைப் பெண்களே இலகுவாகக் கையாளுபவர்களாக ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நெருக்கடியான சூழல்கள் உருவாகக் காரணமாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

விலக்கப்பட்ட கனியை உண்டதால் மனுக்குலத்திற்கே நெருக்கடியான சூழலை உருவாக்கிய முதற்பெண், ஏசா-யாக்கோபுக்கும் இடையே பெரிய பிளவை உண்டாக்கிய ரெபேக்கா, சிம்சோனின் தலையை மழித்து அவரின் வலிமை போகக் காரணமாக இருந்த டெலிலா என உதாரணங்கள் விவிலியத்தில் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது. (கோயிச்சுக்காதீங்க! இந்தப் பத்தி வெறும் ஆர்க்யுமண்டுக்காக எழுதப்பட்டது!)

நம் இந்திய இலக்கியங்களில் பார்க்கும்போது மகாபாரதத்தில் தருமன் என்ற ஒரு ஆணால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தைப் போக்க இறைவனை வேண்டியவள் பாஞ்சாலி என்ற பெண்தான். தான் கற்புடையவள் என்பதை நிரூபிக்க தீக்குண்டத்தில் இறங்கியவள் இராமாயண சீதை. தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கை எதிர்த்து நீதி கேட்டவள் சிலப்பதிகாரத்துக் கண்ணகி. தன் அட்சயப்பாத்திரத்தால் தன் நாட்டின் பஞ்சம் தீர்த்தவள் மணிமேகலை. அதியமான் காலத்தில் நடந்த வெஞ்சிப் போரை தன் மதிநுட்பத்தால் நிறுத்தியவர் ஒளவையார் என்ற பெண்.

ஆக, பெண்கள் பக்கம் தான் சாட்சிகள் அதிகம் இருக்கின்றன.

ஆனால், தீர்ப்பை நாம் கொஞ்சம் மாத்தி எழுதுவோம். நெருக்கடியான சூழல்களை எளிதாகக் கையாளுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆணில் ஒளிந்திருக்கும் பெண்மைதான் அவனின் நெருக்கடியான சூழல்களை அவன் கையாள உதவி செய்கின்றது. ஆக, பெண்கள் மட்டும் மேலானவர்கள் அல்லர். பெண்மையும் மேலானதே!



1 comment:

  1. தீபாவளி பட்டிமன்றத்தை நானும் கேட்டேன்.தலைவர் அந்தக் கனானேயப் பெண்ணைக் கையாண்ட விதம் என்னையும் சிலிர்க்க வைத்தது.விவிலியத்திலும்,நம் இந்திய இலக்கியங்களிலும் வரும் பெண்கள் மட்டுமல்ல,இன்று நம் குடும்பங்களில் உள்ள பெண்களும் ஒரு தாயாக,மனைவியாக,சகோதரியாக, அனைத்து உறவுகளையும் ஒன்று சேர்க்கும் பாலமாக எத்துணையோ நெருக்கடியான சூழ்நிலைகளை வெகு இலகுவாக்க் கையாண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.தீர்ப்பை மேடை போட்டுச் சொல்லியாயிற்று.சாட்சியங்களின் அடிப்படையில் தங்கள் மனதும் அதுதான் சரி என்று ஏற்றுக் கொண்டுவிட்டது. அப்புறம் எதற்குத் தங்களின் 'மூளை'யைத் துணைக்கு அழைக்கிறீர்கள்? தெரியவில்லை..ஆணில் ஒளிந்திருக்கும் பெண்மைக்கு இங்கென்ன வேலை...புரியவில்லை..அப்பப்ப தங்களின் 'மனது' சொல்வதையும் 'சரி' என்று ஏற்றுக் கொள்ளலாம் தந்தையே! தவறில்லை.கோயிச்சுக்காதீங்க..இன்றையதும் ஒரு சுவாரஸ்யமான, யோசிக்கத்தூண்டும் பதிவுதான்..அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete