Sunday, October 12, 2014

ஞானியர் தரும் பாடங்கள்

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை எழுதும்போது லூக்கா நற்செய்தியில் இல்லாத இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார்: ஒன்று, மூன்று ஞானியர்களின் வருகை, இரண்டு, குழந்தைகள் படுகொலை செய்யப்படுதல். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம் பெறுபவர் ஆளுநர் ஏரோது.

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்ததுண்டு. எதற்காக ஞானியர் தங்கள் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குழந்தையைப் பார்க்க வரவேண்டும்?

மத்தேயு இயேசுவை புதிய இஸ்ராயேலாக முன்வைக்க விரும்புகின்றார். பழைய இஸ்ராயேல் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்ததால் கடவுளின் இனமாக உயிர் பெற்றது. ஆக, இயேசுவையும் எகிப்துக்கு அனுப்பி அங்கிருந்து திரும்பி வரச் செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான், 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன்' (ஓசேயா 11:1) என்ற இறைவாக்கு இயேசுவில் நிறைவேறும். இந்த நிகழ்வை எழுதுவதற்காக அவர் கையில் எடுக்கும் பாடமே ஞானியர் வருகையும், குழந்தையர் கொல்லப்படுதலும்.
ஞானியர் வருகையை இன்று நான் வாசித்தபோது என்னில் இரண்டு எண்ணங்கள் உருவாயின.

ஒன்று, நம்ம வாழ்க்கையில எல்லாமே காரணத்தோடு தான் இருக்கனும்னு நினைக்கிறோம். அதாவது, நம்மகிட்ட யாராவது 'யோகா செய்யுங்களேன்!' அப்படின்னு சொன்னா, நம்ம உடனே என்ன கேட்போம், 'அதனால என்ன பயன்?' எல்லாவற்றையும் பயன்பாட்டு அடிப்படையில் தான் பார்க்கின்றோம். ஏன் யோகா செய்வதற்காக செய்யலாமே. நாம் நடப்பது, நிற்பது, ஓடுவது, படிப்பது, பார்ப்பது என அனைத்திற்கும் காரணம் தேடுகிறோம். இந்தக் காரணங்கள் நாம் கோயிலுக்குப் போவது, வேலைக்குப் போவது, உறவாடுவது என அனைத்தையும் பாதிக்கவே செய்கிறது. என்கிட்ட நிறைய பேர் கேட்டதுண்டு: 'ஏன் நீங்க ஃபாதர் ஆனீங்க?' நான் அப்படிக் கேட்டவர்களிடமெல்லாம், 'நீங்க ஏன் கல்யாணம் முடிச்சீங்க?' என்றும கேட்டிருக்கிறேன். அவர்கள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு எதாவது காரணம் சொல்வார்கள். ஏன் கல்யாணம் முடிக்க வேண்டும் என்பதற்காக முடிக்கலாமே, ஃபாதர் ஆக வேண்டும் என்பதற்காக ஆகலாமே.

ஒரு பச்சிளம் குழந்தையைப் பார்க்க தங்கள் வேலைகளையெல்லாம் போட்டுவிட்டு ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி வருகிறார்கள் ஞானியர். அந்தக் குழந்தையைப் பார்த்ததால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? ஒன்றும் இல்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு நேர, ஆற்றல், பொருள் விரயம் தான். ஆனால் அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரியும் குழந்தையைத் தேடி வந்ததால் தங்களுக்கு எதுவும் கிடைக்காது என. குழந்தையைக் காண வந்தவர்கள் மோட்சத்துக்கப் போனார்களா, அல்லது நரகத்துக்குப் போனார்களா என்று கூட மத்தேயு எழுதவில்லை. ஆக, நாம் செய்யும் எல்லாவற்றிலும் காரணம் இருந்தால் அல்லது பலன் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. அவைகள் இல்லாமலும் செய்யலாம்.

இன்னைக்குக் காரணம் இல்லாமல் ஏதாவது ஒன்று செய்து பார்க்க முயற்சி செய்யலாமே!

இரண்டு, குழந்தை இயேசுவுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய வணக்கம் அவர்கள் கொண்டு வந்த பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப்போளத்தையும் அளித்தது அல்ல. மாறாக, ஏரோதுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததே. உண்மையைக் கண்டவர்கள் பொய்மைக்கு முன் மண்டியிட முடியாது. கூடாது. ஒளியைக் கண்டவர்கள் பின் மறுபடி இருளைத் தேடிச் செல்லக் கூடாது. வாழ்வைக் கண்டவர்கள் இறப்பின் காரணியைத் தன் வசம் வைத்திருக்கக் கூடாது.

நம்மை ஞானியர் ஆக்க இந்த ஞானியர் தரும் இரண்டு பாடங்களே இவை!


1 comment:

  1. ஒரு ந்தியானது தான் பாயும் இடமெல்லாம் தன் வளமையை விட்டுச்செல்வது போல எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் நற்செயல்கள் புரிவதே நல்லவர்களின் இலக்கணம்.ஆனால் அதற்கான பிரதிபலன் பொருள் உருவத்தில் இலையெனினும் 'ஆத்ம திருப்தி' என்ற ஒன்றாக அவர்களை வந்தடையும் என்பதும் உண்மையே! "உண்மையைக் கண்டவர்கள் பொய்மைக்கும்,ஒளியைக் கண்டவர்கள் இருளுக்கும்,வாழ்வைக்கண்டவர்கள் இறப்புக்கும் காரணிகளைத் தம் வசம் வைத்திருக்கக்கூடாது"... அருமையான பதிவு. அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete