Sunday, October 5, 2014

தலைமுறை அட்டவணை - 1

சமுத்திரக்கனி அவர்கள் இயக்கத்தில் வெளியான 'நாடோடிகள்' (2009) திரைப்படத்தில் கருணாகரன் (சசிக்குமார்) 'வரலாறு' இளங்கலை படிப்பதை அவரது அப்பா கிண்டல் செய்வார். 'எல்லாரும் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் என்று மாறிக்கொண்டிருக்கும் போது இவன் மட்டும் ஒன்னுக்கும் உதவாத வரலாறு படிக்கிறான்!' என்று கேலி செய்வார். அப்போது கருணாகரன் அளிக்கும் பதிலே இது:

'உங்க அப்பா பேரு...?'

'அவங்க அப்பா பேரு...?'

'அவங்க அப்பா பேரு...?'

'அவங்க அப்பா பேரு...?'

'அவங்க அப்பா பேரு...?'

என்று ஐந்து தலைமுறை வரைக்கும் பெயரைக் கண்டுபிடித்து விட்டு இந்த ஐந்தாம் நபர் பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர் என்றும், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்றும் முடிப்பார்.

(சின்ன டைவர்ஸன்: காசில்லாதவன் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் போனால் நாம் கொடுக்கும் பெயர் புலம்பெயர்தல். அதையே காசுள்ளவன் போனால் அதன் பெயர் சுற்றுலா. வறுமையான நாட்டிலிருந்து வளமையான நாட்டிற்குப் போனால் அதன் பெயர் அகதிகள் தஞ்சம் அடைதலாம். அதையே வளமையான நாட்டிலிருந்து வறுமையான நாட்டிற்குப் போனால் அதன் பெயர் 'மறைபரப்புப்பணி' அல்லது 'காலனியாக்கமாம்'. வரலாறு எப்பவும் காசுள்ளவன் கையில் தான் இருக்கிறது என்பது வேதனையான ஒன்று!)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரின் புகழைப் பற்றி எழுத வேண்டுமானால் அவரின் தலைமுறை அட்டவணையை எழுதுவார்கள்.

முதல் ஏற்பாட்டில் ஆதாம் முதல் நோவா வரை (தொநூ 5:1-31), நோவாவின் மக்கள் (தொநூ 10:1-32), சேம் முதல் ஆபிரகாம் வரை (தொநூ 11:10-26), தாரின் வம்சாவழியியினர் (தொநூ 11:27-32), நாக்கோரின் வம்சாவழியினர் (தொநூ 22:20-24), கெற்றூரா என்ற பெண்ணின் வழி ஆபிரகாமின் வழிமரபினர் (தொநூ 25:1-4), இஸ்மயேலின் வழிமரபினர் (தொநூ 25:12-18), யாக்கோபின் வழிமரபினர் (தொநூ 25:23-29), ஏசாவின் வழிமரபினர் (தொநூ 36:1-43), எகிப்தில் யாக்கோபின் வழிமரபினர் (தொநூ 46:8-27), லேவியர்களின் அட்டவணை (எண் 3:14-39), குலமுதல்வர்களின் அட்டவணை (எண் 26:1-51), தாவீதின் அட்டவணை (ரூத்து 4:18-22), எஸ்ராவின் அட்டவணை (எஸ்ரா 7:1-5) என நீண்ட அட்டவணைகளும், சில குறுகிய தலைமுறை அட்டவணைகளும் (காண் 1 குறி 1-9, நெகே 11-12) உள்ளன.

புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு மட்டுமே தலைமுறை அட்டவணை உண்டு. மத்தேயு (1:1-17) மற்றும் லூக்கா (3:23-38) நற்செய்தியாளர்கள் இயேசுவின் தலைமுறை அட்டவணையைத் தொகுத்து வழங்குகின்றனர். யோவான் (1:1-18) நற்செய்தியில் இயேசுவின் தலைமுறை அட்டவணை இல்லையென்றாலும் இயேசுவின் தொடக்கத்தை படைப்பின் தொடக்கத்திற்கும், கடவுளின் நெஞ்சத்திற்கும் கொண்டு செல்கின்றார் யோவான். இதுவும் ஒரு பெயரில்லா தலைமுறை அட்டவணையே.

மத்தேயு சொல்லும் இயேசுவின் தலைமுறை அட்டவணை ஆபிரகாமில் தொடங்கி, தாவீது மற்றும் சாலமோன் என நீண்டு, எக்கோனியா அரசன், யோசேப்பு என முடிகிறது. லூக்கா சொல்லும் இயேசுவின் தலைமுறை தலைகீழாக இருக்கின்றது யோசேப்பில் தொடங்கி, தாவீதின் மகன் நாத்தான் வழியாக, ஆதாமில் முடிகிறது.

இரண்டு அட்டவணைகளுமே இயேசு யோசேப்பின் மகன் அல்ல, மரியாவின் வழியாக வந்த கடவுளின் மகன் என்றே சொல்கின்றன. மேலும் இரண்டு அட்டவணைகளிலும் இடம் பெறும் தாவீது இயேசுவின் அரச வம்சவழியைக் குறிக்கிறார். விவிலிய ஆசிரியர்களின் கருத்து என்னவென்றால் 'தலைமுறை அட்டவணை' என்பது ஒரு இலக்கிய நடை. அதில் உள்ளதெல்லாம் உண்மை என்று அப்படியே நாம் எடுத்துக்கொள்ள முடியாது. உண்மை இல்லை என்று ஒதுக்கிவிடவும் முடியாது. ஒவ்வொரு நற்செய்தியாளரும் தன் இலக்கிய நடை மற்றும் இலக்கிற்கு ஏற்ப அட்டவணையை உருவாக்குகின்றார்.

தலைமுறை அட்டவணைக்கு அடிப்படை நினைவாற்றல். காலங்காலமாக மக்களின் நினைவில் இருந்ததை நற்செய்தியாளர் எழுதியிருக்க வேண்டும். 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்து வடிவம் என்பது அரிதான ஒன்று. வாய்மொழி வழக்கில் இருந்த நினைவாற்றலை வைத்தே நற்செய்தியாளர்கள் இதை வடிவமைத்திருக்க வேண்டும்.

மத்தேயுவின் நினைவாற்றல் என்ன? அவரது இலக்கு என்ன? அவரது அட்டவணையின் முக்கியத்துவம் என்ன? அவர் விட்டது என்ன? அவர் சேர்த்தது என்ன? நாளை பார்ப்போம்.

இன்னைக்கு ஒரு சின்ன எக்ஸர்சைஸ். ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துக்கொள்வோம். நம் பெயரை கீழே எழுதிக்கொள்வோம். நம் அப்பா, அம்மா, அவர்களின் அப்பா - அம்மா, அவர்களின் அப்பா - அம்மா என எவ்வளவு தூரம் நம்மால் எழுத முடிகிறது என்று பார்ப்போம். அடுத்த பக்கத்தில் நாம் பணியாற்றும் இடம். நம் பெயர். நமக்கு முன் அந்த இடத்தில் இருந்தவர். அதற்கு முன். அதற்கு முன். இப்படி எழுதிப் பார்க்கும் போது நாம் பயணித்து வந்த பாதை நமக்கு நினைவிற்கு வருகிறது.

பவுலோ கோயலோ அழகாகச் சொல்வார்: 'நமக்கு முன்னிருக்கும் பாதை தெளிவாக இல்லாமல் நமக்கு பயம் தரும்போது, நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு தூரம் வழிநடத்திய இறைவன் நம்மை இனியும் வழிநடத்தாமலா போய்விடுவார்!'


2 comments:

  1. நாம் கடந்து வந்த பாதை எப்படிப்பட்ட கரடுமுரடானதாக இருப்பினும் நாம் கடக்கப்போகும்பாதையை சுகமானதொன்றாக வழிநடத்த நம் இறைவன் இருக்கிறார் என்று நம்புவோம்.இறைவனின் மறுபெயர் தானே 'நம்பிக்கை'.தாங்கள் குறிப்பிட்டுள்ள எக்ஸர்சைஸ. மூலம் நாங்கள் கடந்துவந்த பாதையைத் திரும்பிப்பார்க்க வைத்த தந்தைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தங்களின் இறுதியாண்டு படிப்பு இனிதே முடிய எங்களின் செபமும் வாழ்த்துக்களும்...இறைவன் தங்களை இனிதே வழிநடத்தட்டும்....

    ReplyDelete