Sunday, October 19, 2014

சீசருக்கு உரியதை சீசருக்கும்!

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்'

இன்று மாலை முதல் நாளை மாலை வரை எல்லாக் கத்தோலிக்க ஆலயங்களிலும் ஒலிக்கும் வசனம் தான் இது.

22 நாட்கள் 'வனவாசத்திற்குப்' பிறகு மீண்டும் இன்று அயோத்தி திரும்பினார் நம் அம்மா. வழங்கப்பட்ட வரவேற்பைப் பார்த்தால் 'தவறு செய்வதெல்லாம் சரி' என்று ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டது போலவே தோன்றுகிறது. 'கடவுளை மனிதன் தண்டிக்கலாமா?' என்று பேனர் கட்டியவர்கள் எல்லாம் இந்தக் கடவுளுக்காக மனிதனிடம் ஏன் ஜாமீன் கேட்டார்கள் என்றும் தெரியவில்லை.

'ஜெயாவுக்கு உரியதை ஜெயாவுக்கும், கருணாநிதிக்கு உரியதை கருணாநிதிக்கும் கொடுங்கள்' என்று இயேசு சொன்னால் நாம் எப்படி புரிந்து கொள்வோம்.

'சீசருக்கு உரியதை சீசருக்கு' என்ற இறைவாக்கைப் பற்றி ஒரு சில கமெண்டரிகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் எழுதியிருந்தார். இயேசு மனிதன் சார்ந்த விஷயங்களை அல்லது உலகு சார்ந்த விஷயங்களை விளக்க வந்தவர் அல்லர். அவர் கடவுள் சார்ந்த, மேலுலகம் சார்ந்தவற்றை விளக்க வந்தவர் என்று. எனக்கு இந்த விளக்கத்தில் உடன்பாடு இல்லை. இயேசுவை வெறும் ஆன்மீகமாக்கப்பட்ட சந்தைப் பொருளாக மாற்றுவது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று அல்ல.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' என்று சொல்லும் இயேசு, 'நாம் ஏன் அவ்வாறு கொடுக்க வேண்டும்?' என்று கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே.

இயேசுவின் காலத்தில் உரோமை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அப்படியிருக்க இயேசுவின் போதனை அவர்களை சீசரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவும், அடிபணிந்து போகவும் சொல்கிறதா?

எனக்கு என்னவோ இந்த இறைவாக்குப் பகுதி பின்னாளில் திருச்சபையில் ஏற்பட்ட 'அரசியலா? திருச்சபையா?' என்ற கேள்விக்கு விடையாக எழுதப்பட்டதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் வாழ்ந்த போப்-ஆண்டவர்கள் தங்களை அரசர்களாக மக்கள் மதிக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். அல்லது அரசுக்கும், திருச்சபைக்கும் ஏதாவது 'பதவி' மோதல் இருந்திருக்கலாம். இதைச் சரி செய்வதற்காக 'அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுக்க வேண்டும்' என்று சாமானியனுக்கு அறிவுறுத்தும் பகுதியாக இதை இயேசுவின் வாயில் திணித்து எழுதி விட்டார்கள்.

'அவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுக்க வேண்டும்' என்பது இயற்கையின் விதிக்கு அப்பாற்பட்டது. அவரவருக்க உரியதை அவரவருக்கு கொடுத்திருந்தால் உயிரினம் வளர்ச்சி பெறாமல் போயிருக்கும் என்பது டார்வினின் 'ஆரிஜின் ஆஃப் ஸ்பீஸிஸ்'ல் உள்ள ஒரு கருத்து. தனக்கு கிடைத்தது போல இன்னும் தனக்கு என எடுத்துக்கொள்ளும் உயிரினமே பரிணாம வளர்ச்சி பெறும்.

'சீசருக்கு உரியது சீசருக்கு' என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இது அவருக்கு உரியது என எப்படி அளவிடுவது?

இதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், 'சீசர் வேலையை சீசர் பார்க்கட்டும், கடவுள் வேலையை கடவுள் பார்க்கட்டும்! நீங்க உங்க வேலையை ஒழுங்கா பாருங்க!' என்று இயேசு சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சீசருக்கு உரியதை நாம் சீசருக்குக் கொடுக்கிறோம் என்றால் சீசரும் நமக்கு உரியதை நமக்குக் கொடுக்க வேண்டும்தானே!

ஜெயாவுக்கு உரியதை ஜெயாவுக்கு நீதிமன்றம் கொடுத்த போதே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்! ஜெயாவால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்று சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுக்கிறோமா அல்லது கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுக்கிறோமா என்று கேட்பதை விட, நமக்குள்ளதை நமக்குக் கொடுக்கிறோமா என்று கேட்போம்.


1 comment:

  1. இந்திய அதிலும் தமிழக அரசியலின் அவலத்தை நையாண்டி கலந்து விமரிசித்துள்ளீர்கள்..இன்றைய நற்செய்தியுடன் ஒப்பிட்டு.சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள்.." நமக்குள்ளதை நமக்குக்கொடுக்கின்றோமா" என்று.ஆம் உண்மைதான்..எவனொருவன் தனக்குறிய 'சுயமரியாதை,தன்னைப்பற்றிய பெருமிதம்' இவற்றைத் தனக்கு உரித்தாக்குகிறானோ அவன் கண்டிப்பாகத் தன் கடவுளுக்கும்.நாட்டுக்கும்,சகமனிதனுக்கும் சேர வேண்டியதையும் கொடுப்பான்.ஐயமில்லை...அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete