Sunday, October 19, 2014

இடைவிடாது உங்களை நினைத்து

நாங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும்,
அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும்,
எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள மனவுறுதியையும் நினைவு கூறுகிறோம்.
(காண். 1 தெச 1:1-5)

புதிய ஏற்பாட்டு நூல்களில் முதலில் எழுதப்பட்ட நூல் தெசலோனிக்கியருக்கு எழுதிய முதல் திருமடல் தான். தூய பவுல் முதன்முதலாக நற்செய்திப்பணி புரிந்த இடங்களில் ஒன்று தெசலோனிக்கா.

இன்றைய நிலையில் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு பங்குத்தளத்தில் பணி புரிந்த அருட்பணியாளர் தன் பணியினிமித்தம் வேறிடம் மாற்றப்பட்ட பின்போ அல்லது வெளியூர், வெளிநாடு என அவர்களைப் பிரிந்து சென்றபோது அவர்களை நினைவு கூர்ந்து எழுதுவது என வைத்துக் கொள்ளலாம்.

தூய பவுலடியாரின் எல்லாத் திருமடல்களும் தன் இறைமக்களை வாழ்த்துவதாகவே தொடங்குகின்றது. மேலும் முழுக்க முழுக்க அந்த இறைமக்களை மையமாக வைத்தே எழுதுகிறார் பவுலடியார் இது அருட்பணியாளர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

நீங்க என்னை நல்லாக் கவனிக்கல, நான் ஹவுஸ் விசிட் வந்த போது நிறையப் பேர் இல்ல. ஃபேர்வெல் அன்னைக்கும் என்னை யாரும் சரியா வாழ்த்திப் பேசல, நான் மீட்டிங் கூப்பிட்டப்பல்லாம் நீங்க யாரும் வரல - என்று எந்தவொரு வருத்தமும் அவரின் மடல்களில் இருப்பதில்லை.

'உங்களை நினைத்து நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்!'

இது தான் பவுலின் முதல் வார்த்தைகள். நீங்க எப்படி என்னை ஏற்றுக் கொண்டாலும் பரவாயில்லை. என் மனதில் உங்களின் நினைவு தருவது நன்றிதான். என்னவொரு பெருந்தன்மை இது!

அருட்பணி நிலையில் மட்டுமல்ல, எந்த நிலையிலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு கொடை. அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ, அன்பு செய்கிறாரோ இல்லையோ, நம் உறவுகளின் முன் நாம் ஏதோ ஒரு வகையில் நம்மையே நிர்வாணமாக்கி விடுகிறோம். 'இதுதான் நான்!' என்று நம்மையே அவர்களுக;குக் காட்டுகிறோம். உறவு என்பது ஒரு சரண்டர். இந்தப் பின்புலத்தில் நான் சண்டையிட்டு அவர்களிடம் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதும் எதுவும் இல்லை. எந்நேரமும் நன்றி மனம் இருந்தால் மட்டுமே போதுமானது.

தொடர்ந்து பவுலடியார் அவர்களின் நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு என்ற இந்த மூன்றையும் வாழ்த்துகின்றார்.

நம்பிக்கை செயலிலும், அன்பு உழைப்பிலும், எதிர்நோக்கு மனவுறுதியிலும் வெளிப்படுவதாகச் சொல்கின்றார்.

இன்று திருச்சபை வாழ்வது பெரிய பெரிய கட்டடங்களிலும், உயர்ந்த ஆலயங்களிலும் அல்ல. மாறாக சின்னஞ் சிறு வீடுகளின் கட்டாந்தரைகளில் தான். தாங்கள் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு அவர்கள் காட்டும் பதிலன்பு அவர்களின் புன்சிரிப்பிலும், வரவேற்பிலும் மிக இயல்பாக இருக்கும்.

நம் கடவுள் சின்னஞ்சிறியவர்களின் கடவுள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் தூய பவுலடியார்.


1 comment:

  1. மிக அழகான பதிவு.நானும் கூட அடிக்கடி யோசித்ததுண்டு.தூய பவுலடியார் தம் திருமுகங்களில் பல இடங்களில் உபயோகப்படுத்தியுள்ள வார்த்தைகள் ஏதோ தம் உடன்பிறப்புக்களிடம் தன் உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொள்வதுபோல் மிக எதார்த்தமாக இருக்கும்.நாம் கேட்காமலே பலரை இறைவன் நமக்கு 'உறவாக', தம் 'கொடையாக' அனுப்புகிறார்.இவர்களுக்காக நன்றி கூறுவது மட்டுமின்றி நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கொடையாக, உறவாக இருக்க முயற்சி செய்யலாமே! இந்த வாரம் இனிய வாரமாகட்டும்....

    ReplyDelete