Thursday, October 30, 2014

அதை நிறைவு செய்வார்!

'ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவு செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.' (பிலிப்பியர் 1:5-6)

திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்படும் வழிபாட்டில் அருட்பணிநிலைக்குத் தயாரிப்பில் இருக்கும் ஒருவர் முதலில் வாக்களிப்பது 'மணத்துறவு'. இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து வருவது 'மறைமாவட்ட ஆயருக்கு கீழ்ப்படிதல்'. இந்த இரண்டும் அடுத்தடுத்து இருக்கும். இந்த இரண்டு வாக்குறுதிகளின் நிறைவில் ஆயர் மொழிவது மேற்காணும் தூய பவுலடியாரின் வார்த்தைகளே:

'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவு செய்யட்டும்'.

நாளைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கவிருக்கும் பகுதியும் இதுவே.

மகாபாரதத்தில் துரியோதனன் ஒரு கட்டத்தில் கிருஷ்ணனின் கேட்பார்: 'கண்ணா! எனக்கு நன்மை, தீமையெல்லாம் தெரியாததால் நான் தீயவானக இருக்கிறேன் என நினைக்கிறாயா? இல்லை. தருமனுக்குத் தெரிவதை விட எனக்கு நல்லது என்ன என்றும் கெட்டது என்ன என்றும் தெரியும். ஆனால் என்னால் தீமையை விடுத்து, நன்மையைப் பற்றிக் கொள்ள முடிவதில்லை. அப்படி முடிந்தாலும் நான் நன்மையில் நிலைத்திருக்க முடிவதில்லை.

ஆக, துரியோதனின் பிரச்சனை 'நன்மையில் நிலைத்திருக்க முடியாத நிலை'. அவரிடம் விடாமுயற்சி இல்லை.

துரியோதனன் நல்லவன் என்பதற்கு அழகிய உதாரணம் கர்ணன் திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கர்ணனும், துரியோதனின் மனைவியும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பார்கள். துரியோதனன் வருவதைக் கண்ட மனைவி திடீரென ஆட்டத்தை விட்டு எழுவாள். அப்போது அவளின் கையைப் பிடிக்க முனைகின்ற கர்ணன் தவறுதலாக அவளது இடுப்பைப் பிடித்துவிடுவான். அப்போது அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை அறுந்து முத்துக்கள் சிதறுண்டு ஓடும். கர்ணன் அப்படியே பதறி விடுவான். அப்போது பின்னால் வருகின்ற துரியோதனன், 'சிதறிய முத்துக்களை எடுக்கவா, கோர்க்கவா?' என்று சொல்லிக் கொண்டே சிதறிய முத்துக்களை எடுக்கத்  தலைப்படுவான். 'என்னை மன்னித்துவிடு!' என்று கர்ணன் கேட்கும் முன்பே, 'உன்னையும் என் மனைவியையும் நான் அறியாதவனா?' என்று கட்டித் தழுவிக் கொள்வான். இந்த நிகழ்வை பின் ஒருமுறை தன் தாய் குந்திதேவியிடம் சொல்லும் கர்ணன், 'துரியோதனன் ஒரு மனித தெய்வம்!' என்பான்.

துரியோதனன் நல்லவன் தான். ஆனால், எப்போதாவது நல்லவன்.

இன்றைக்குத் தேவை எப்போதுமே நல்லவனாக இருப்பது.

அமல மரி தியாகிகள் சபை என்றழைக்கப்படும் துறவற சபையில் 'விடாமுயற்சி' என்ற நான்காவது வார்த்தைப்பாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்காணும் இறைவாக்குப் பகுதியை வாசித்தபோது புனே குருமடத்தில் நான் திருத்தொண்டராக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் (மேலே காணும் புகைப்படம்) நினைவிற்கு வந்தது.

சிரமேற்கொண்டிருக்கும் எந்தப் பணியிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இருந்தாலும், செய்ய வேண்டிய பணியைத் தொடர்ந்து, விடாமுயற்சியோடு செய்யும் வரம் கேட்கிறேன் இறைவனிடம்!


பேச மட்டும் நேரம் இருக்காது!

இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கும். ஆனா எங்கூட பேச மட்டும் நேரம் இருக்காது!

இந்த வார்த்தைகளை உங்களிடம் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

நாம ஒரே நேரத்தில் ஒன்றை எனக்கு வேண்டும் என்றும் சொல்லலாம். அதையே வேண்டாம் என்றும் சொல்லலாம்.

சமீபத்தில் படித்த ஒரு மேலாண்மை நூல் தரும் எடுத்துக்காட்டு இது:

காலையில் எழுகிறோம். அலுவலகத்திற்குப் புறப்படுகிறோம். வேகமாக மேசையில் அமர்ந்து காஃபி கப்பை எடுத்து காஃபியை ஊற்றிக் குடிக்கிறோம். குடிக்கும் இந்தப் பொழுதில் நமக்குத் தேவையாக இருப்பது காஃபி மட்டும் தான். கப் என்ன கலர் என்றும், அது எதில் செய்யப்பட்டது என்றும் நாம் கவலைப்படுவதில்லை. இந்த நேரத்தில் காஃபி தான் முக்கியம்.

கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன். காஃபி குடித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் குடிக்க வேண்டும் போல இருக்கிறது. கையில் இருக்கும் கப்பைப் பார்க்கிறோம். அங்கே பாதி காஃபி இருக்கின்றது. அதைக் குடித்து முடித்தால் தான் நாம் இன்னும் காஃபியை ருசிக்க முடியும். இந்த நேரத்தில் தான் நாம் கப்பைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ச்சே! இன்னும் கொஞ்சம் பெரிய கப்பாக இருந்திருக்கலாமே என்றோ அல்லது வேகமாக கப்பிக் காலியாக்க வேண்டும் எனவும் முனைப்பாகிறோம். இந்த நேரத்தில் நம் கவனம் காஃபி மேல் தான் இருக்கின்றது.

இன்றைய நாளின் நற்செய்தியில் இடுக்கமான வாயில் பற்றிப் பேசுகின்றார் இயேசு. இடுக்கமான வாயில் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று அல்ல. உடல் பெரிதாய் உள்ளவருக்கு இடுக்கமாகத் தெரிவது உடல் மெலிந்தவருக்கு அகலமாகத் தெரியலாம். ஆக, இடுக்கமான வாயில் வழியே செல்லுங்கள் என்று யாராவது நம்மைப் பார்த்து பிரசங்கம் வைத்தால், 'சரி...ஃபாதர்' என்று தலையாட்டிவிடக் கூடாது! இடுக்கமானது என்றால் என்ன, என்னைப் பொறுத்த வரையில் இடுக்கமானது எது என்று கேட்க வேண்டும்.

நாம் பார்க்கும் பல வேலைகளுக்கு நடுவே நாம் அன்பு செய்யும் நம் உறவுகளுக்கு நேரம் கொடுப்பதே இன்று நான் சந்திக்கும் இடுக்கமான வாயில்!

Tuesday, October 28, 2014

மே பி ஆர் மே நாட் பி!

இன்று காலை ஆனந்த விகடனில் 'பேசாத பேச்செல்லாம்' பகுதி படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் இந்தப் பகுதியை நேரம் இருந்தால் படியுங்கள். வாழ்வின் எதார்த்தங்களை, தான் நேரில் கண்டதை போகிற போக்கில் அவ்வளவு அருமையாகச் சொல்கின்றார் இந்த ஆசிரியை. இன்று நான் படித்த பகுதி 'திடீரெனத் தோன்றும் நட்பு' பற்றியது.

நாம் வாழ்வில் திடீரென்று நாம் சந்திக்கும் ஒரு நபர் நம் வாழ்வில் அழிக்க முடியாத நபராக மாறும் அனுபவம் நம் அனைவருக்குமே இருந்திருக்கும்.

மெட்ராசுக்கு சென்ற புதிதில் ஒரு திரையரங்கில் சந்திக்க நேரிட்ட மூன்று பசங்களும் தன்னை 'அக்கா!' 'அக்கா!' என்று அன்போடு அழைத்ததையும், தன் மேல் அக்கறை காட்டியதையும் சொல்லும் அவர் இப்படி எழுதுகிறார்:

திரையரங்கிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நேரம் அந்த தம்பிகளில் ஒருவன் போன் செய்தான். 'என்னக்கா! எங்க இருக்க? பத்திரமா போய்ட்டியா?' என்று கேட்டான். எனக்கு அவன் பெயரைக் கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. 'மெட்ராஸ் தம்பி' என்று மட்டும் அவனது பெயரை கான்டக்டில் சேமித்தேன். அவனுமம் 'மெட்ராஸ் அக்கா' என்று தான் சேமித்து வைத்திருக்கக் கூடும். பின்னொரு ஞாயிறு மதியம் திரும்பவும் அழைத்தான். ஏதோ நேற்றுதான் கடைசியாகப் பேசியது போல அவ்வளவு நெருக்கமாகப் பேசினான். பேசிக்கொண்டே, 'எங்க வீடு தாம்பரம் சர்ச் பக்கம் தான். வந்தா வாங்க!' என்றான். நானும், 'சரி' என்றேன். இந்த நீண்ட உரையாடலில் கூட நாங்கள் ஒருவர் மற்றவரின் பெயரைக் கேட்டுக்கொள்ளவில்லை. ஃபோனை வைத்தவுடன் 'எனக்கு சென்னையில் ஒரு புதிய உறவு' என்று சொல்லிக் கொண்டேன்.

நிற்க!

'சீக்கிரம் வந்தது சீக்கிரம் போய்விடும்' என்று சொல்வார்கள். அது பணத்திற்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர, உறவுகளுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன். வாழ்வில் நாம் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்தில் 'பழகிய பின் உறவாடுவது' என்பதெல்லாம் இயலாத ஒன்று.

சில வருடங்களுக்கு முன் யாஹூ இணையதள உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த போது அதன் தாரக மந்திரம் 'திங்க்' என்று இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த கூகுள் 'திங்க்' பண்றதுக்கெல்லாம் நேரம் இல்ல தம்பி! இனிமேல் 'ப்ளிங்க்' மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும் என்று புதிய பாதையை வகுத்தது. நம் வாழ்வில் நாம் முக்கியமான முடிவெடுக்கும் சமயங்களில் கூட 'திங்க்' செய்து எடுப்பதை விட, ஒரு 'ப்ளிங்கில்' எடுப்பதுதான் இயல்பான முடிவாக இருக்கிறது. ஒருசிலர் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் அவர்கள் முடிவை இரண்டாவது முறை மாற்றிவிட்டார்கள் என்பதல்ல. அவர்கள் முதல் முறை முடிவே எடுக்கவில்லை. அவ்வளவுதான்.

பனிவிழும் ஓர் இரவில் திடீரென அடித்த செல்ஃபோன் ஒலி வாழ்வின் போக்கையே மாற்றிவிடுமா என்று நீங்கள் கேட்டால், நான் 'ஆம்!' என்றே சொல்வேன்.

இன்றும் நம் மொபைல்களில் யாரோ ஒருவரின் குரலைக் கேட்டு, அவரைப் பிடித்திருந்தும் அவர் யாரெனத் தெரியாததால் 'யாரோ' என்று அழைப்பில் சேமித்து வைக்கத்தானே செய்கின்றோம். நான் மதுரையில் இருந்தபோது 'யாரோ 1', 'யாரோ 2', 'யாரோ 3' என்று போட்டிருந்த காலமும் உண்டு. இப்பல்லொம் அப்படி யார் பெயரும் இல்லை. வெளியில் இருந்து வரும் அழைப்பையெல்லாம் இத்தாலி நெட்வொர்க்கே 'அன்நோன்' என மாற்றித் தந்துவிடுகிறது.

'என் அயலான் யார்?' என்று தன்னிடம் கேட்ட மறைநூல் அறிஞருக்கு 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு.

நல்ல சமாரியனாய் இருப்பதற்கு நமக்குத் தேவையானது இரண்டுதான்: ஒன்று, நமக்கு அருகில் நடப்பவற்றைக் காணும் திறந்த மனம், மற்றொன்று, நாம் வேகமாகப் பயணம் செய்யும் கழுதையை நிறுத்திக் கொஞ்சம் இறங்கிப் பார்க்கும் தாராள உள்ளம். போகிற போக்கில் பார்த்துக் கொண்டே போகிறவர்கள் எல்லாம் நல்ல சமாரியர்கள் ஆவதில்லை. கள்வர் கையில் அகப்பட்டவன் சத்திரத்தில் இருந்து எப்போது உடல் நலம் பெற்று வந்தான், சமாரியன் அவனைக் காண திரும்ப வந்தானா என்பதற்கெல்லாம் விடை கதையில் இல்லை. வந்திருக்கலாம். வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் செய்த அந்தச் செயல் அடிபட்டவனின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.

இன்னைக்கு நமக்குத் தெரியாத நம்பர்ல இருந்து ஃபோன் வந்தாலும், தெரியாத நபர் காலிங் பெல் அடித்தாலும், காலர் டியூன், கிரெடிட் கார்ட் என டெலிஷாப்பிங் ஃபோன் வந்தாலும் எடுத்து ஒரு நிமிடம் பேசலாமே.

பேசுகின்ற அந்த நபர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாய் மாறிவிடுவாரா?

மே பி ஆர் மே நாட் பி!

ஒரு வித்தியாசமான பெண்!

சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்த நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும். (மத்தேயு 19:12)

மேற்காணும் நற்செய்தி பழைய மொழிபெயர்ப்பில் இப்படி உள்ளது:

சிலர் பிறவியிலேயே அண்ணகராக இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அண்ணகர் நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

இதை புதிய மொழிய பெயர்ப்பில் 'அண்ணகர்' என்பதை 'திருநங்கை' என மொழிபெயர்த்திருக்க வேண்டுமே தவிர அதற்கு 'மணஉறவு' என்னும் பொருள் கொடுப்பது சிறப்பாகத் தெரியவில்லை.

இன்று மாலை நவநாள் செபத்திற்காக ஆலயத்திற்குச் சென்றேன். நான் சென்ற நேரம் எற்கனவே நவநாள் தொடங்கியிருந்தது. வழக்கமாக நான் அமரும் இடத்தில் அமரச் சென்றபோது தூரத்திலிருந்து ஒருவர் கையசைத்து அழைத்தார். அழைத்தது ஒரு எக்ஸ்.ஒய்.இசட். அவர் ஒரு திருநங்கை. நான் அருகில் சென்ற பார்த்தபோது அதிர்ச்சி. கலங்கிய கண்களாய் அமர்ந்திருந்தார். 'உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்!' என்றார். நானும் 'சரி' என்று சொல்லி அவரை அங்கிருந்த 'ஒப்புரவு அறைக்கு' அழைத்துச் சென்றேன். கதவை சாத்தியவுடன் ஓவென்று அழத் தொடங்கினார். எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. நிறுத்தி நிதானமாகப் பேசினாலே எனக்கு இத்தாலியன் தரிகனத்தாம் போடும். இவர் அழுகையும், இத்தாலியனுமாய் இருந்தார். ஒரு கட்டத்தில் 'எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்!' என்று வெளியே உள்ளவர்களைப் பார்த்து கையை நீட்டினார்.

இவரைப் பற்றிய ஒரு பின்குறிப்பு. எங்கள் பங்கைச் சார்ந்தவர் இவர். வயது ஏறக்குறைய 20 இருக்கும். எல்லாராலும் 'உனா தோன்னா ஸ்த்ரானா' (ஒரு வித்தியாசமான பெண்) என அறியப்பட்டவர். குரல், உடல் வளர்ச்சி எல்லாம் பெண் போல இருந்தாலும், அவரைப் பார்த்தாலே அவர் பெண் இல்லை என்று சொல்லிவிடலாம். மாலையில் ஆலயம் திறக்கப்படுமுன்பே வந்து விடுவார். செபம் சொல்வார். வாசகம் வாசிப்பார். காணிக்கை எடுப்பார். புத்தகங்களை அடுக்குவார். கொஞ்ச நாட்களாக அவர் சீக்கிரம் வந்தாலும் வேறு எதுவும் செய்யாமல் ஒரு ஓரமாகவே அமர்ந்திருந்தார். அதன் காரணம் இன்றுதான் புரிந்தது.

செபமாலை சொல்ல தினமும் வரும் பெண்கள் சிலர் தங்களோடு அமர வேண்டாம் என்று அவரைச் சொன்னார்கள் போல! இன்று அனைவருக்கும் நவநாள் பேப்பர் கையில் கொடுத்துக் கொண்டே வந்தவர் இவருக்குக் கொடுக்கவில்லையாம். உச்சகட்டமாக உடைந்துவிட்டார். 'என்னை யாரும் கண்டுகொள்வதில்லையே!' என்ற ஒரு உணர்வு மிகக் கொடுமையான உணர்வு.

'நான் இப்படிப் பிறந்தது என் குற்றமா?' என்று அவர் என்னிடம் கேட்டபோது எனக்கே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. நாம் செய்யாத அல்லது நம் சக்திக்கு உட்படாத சிலவற்றிற்காக மற்றவர்கள் நம்மை வெறுக்கவோ, அல்லவோ கண்டு கொள்ளாமலோ இருக்கும் போது நம்மால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை.

நம் பிறப்பு, நம் நிறம், நம் குடும்பம், நம் உடல்வாகு, நம் மொழி, நம் கலாச்சாரம் - இவையெல்லாம் நாம் கேட்காமலேயே நம்மேல் திணிக்கப்பட்டவை. இதன் பொருட்டு நாம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? படைத்தவர் என்று ஒருவர் இருந்தால் அவர் பொறுப்பு அல்லது பரிணாம வளர்ச்சியின் பொறுப்பு.

ஒருவழியாக சமாதானம் செய்து, என்னுடன் அமர்ந்து செபியுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டேன். போகும் போது கேட்டார்: 'தினமும் நான் இந்த இடத்தில் உட்காரலாமா?' நானும் 'சரி!' என்றேன். 'அவர்கள் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார்களா?' என்றார். நானும் உங்களைப் போலத்தான் என நினைத்துக் கொண்டு 'இல்லை!' என்று புன்முறுவல் செய்தேன்.

அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்படும் போது ஒவ்வொருவரும் ஒரு விருதுவாக்கு எடுப்பதுண்டு. என்னோடு அருட்பொழிவு செய்யப்பட்ட என் நண்பர் அருட்பணி. வரன் அவர்கள் தன் விருதுவாக்காக மேற்காணும் நற்செய்திப்பகுதியை எடுத்திருந்தார்: 'இறையரசுக்கான திருநங்கையாக!'

இயேசு மூன்று வகையான திருநங்கை நிலையைக் குறிப்பிடுகிறார்:

அ. பிறப்பால் திருநங்கையாக இருப்பது.

ஆ. தன் விருப்பத்தால் தன் உறுப்பை சிதைத்துக் கொள்வது. அல்லது மற்றவர்களால் (உதாரணத்திற்கு மருத்துவ காரணங்களுக்காக!) அந்த நிலைக்கு ஆளாக்கப்படுவது.

இ. இறையரசுக்காக தன்னையே அந்த நிலைக்கு உள்ளாக்கிக் கொள்வது.

போன வாரம் 'வலிகளின் நிறங்கள்' என்ற கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் வாசித்தேன். திருநங்கையரின் வாழ்க்கை பற்றிய ஒரு நாடகத்தின் விமர்சனம் அது. திருநங்கையரின் ஒவ்வொரு வலிக்கும் ஒரு கலர் உண்டு என்று வாதிடுகிறார் ஆசிரியர்.

'நவநாள் பேப்பர் கொடுத்துக் கொண்டே வந்தவர் ஒருவேளை இவரைப் பார்க்காமல் போயிருக்கலாமோ!' என்று நினைத்தேன். நாம் அறியாமல், தெரியாமல் செய்யும் காரியங்கள் கூட ஆறாத காயத்தை விட்டு விடுகிறது.

ஒரு முறை நான் பணியாற்றிய பங்குத்தளத்தில் திருப்பலியில் நன்மை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஒரேயொரு பெண் மட்டும் வரிசையில் நிற்க என் பாத்திரத்தில நற்கருணை தீர்ந்து விட்டது. நான் பீடத்திற்கு சென்று எடுத்து வருவதற்கு முன் அந்தப் பெண் எங்கேயோ கூட்டத்தில் மறைந்துவிட்டார். 'சரி வேறு யாரிடமாவது வாங்கப் போயிருப்பார்' என்று நினைத்துக் கொண்டு நானும் திருப்பலி முடிந்து அறைக்குச் சென்று விட்டேன். சற்று நேரம் கழித்து யாரோ கதவைத் தட்ட திறந்தவுடன் அந்தப் பெண் நிற்பதைக் கண்டேன். 'வாங்க அக்கா!' என்று உள்ளே அழைத்தேன். உள்ளே வந்தவர் குபீரென அழ ஆரம்பித்தார். 'ஃபாதர் நான் ஒரு லக் இல்லாதவள். நான் எதற்கும் பிரயோசனம் இல்லாதவள். நான் வந்தவுடன் நன்மையும் தீர்ந்து விட்டது பார்த்தீர்களா!' என்று அழுதுகொண்டே இருந்தார்.

மனித மனம் எவ்வளவு இலகுவானது. சின்ன நிராகரிப்பையும் அதனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. நாம் குழந்தையாய் இருக்கும் போது யாராவது நம்மை அழ வைப்பது தேவையாக இருந்தது. ஆனால் நாம் வளர்ந்த பின் யாராவது நம்மை சிரிக்க வைப்பது தேவையாக இருக்கிறது. என்னே வளர்ச்சியின் முரண்பாடு!

ஒவ்வொருமுறை நாம் வளரும்போதும் கண்ணீரும் அதிகமாகிதே!


Monday, October 27, 2014

எங்கே பயம் முடிகிறதோ!

நாளை மறுநாள் எங்கள் பங்கின் பாதுகாவலர் தூய யூதா ததேயுவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இன்று மேதகு கர்தினால் பீட்டர் பரோலின், திருப்பீட முதல்வர், அவர்களின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

திருப்பீடத்தில் திருத்தந்தை அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வெகு சாதாரணமாக வந்திருந்தார். பாதுகாப்பு, பந்தோபஸ்து எதுவும் இல்லை. தன் கைப்பையைத் தானே எடுத்துக் கொண்டு, செங்கோல், தொப்பி என எதுவும் எடுத்து வராமல் ஒரு சாதாரண அருட்பணியாளரைப் போல வந்தார். திருப்பலி நிறைவேற்றினார். எங்கள் பங்கின் இளைஞர், இளம்பெண்கள் இந்த நாட்களில் நடத்திக் கொண்டிருக்கும் 'ப்ளே' ஒன்றையும் பார்க்க இருக்கிறேன் என்று சொன்னார். தன் கார் டிரைவரைத் தானே போய் அழைத்து வந்தார். 'நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா?' என்று டிரைவருக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டார். இரவு சாப்பாடு சாப்பிடுவதில்லையாம். 'ஒருவேளை சாப்பிடவில்லையென்றால் நாம் இறந்துவிடுவோமா?' என்று எளிமையாகக் கேட்டார். யாரும் தனக்கு வணக்கம் வைக்கவில்லையே என்ற கோபமோ, ஏமாற்றமோ இல்லை. எனக்கு அவரை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒரு மறைநூல் அறிஞர் கேட்கிறார், 'திருச்சட்டத்தில் மிகச் சிறந்த கட்டளை எது?' இயேசுவின் பதில்: 'உன் கடவுளை அன்பு செய்! உன் அயலானை அன்பு செய்!' என்று மிக எளிதாக, ஆனால் மிக ஆழமாக இருக்கின்றது.

இன்று அன்பு பல நேரங்களில் பயமாக மாறிவிட்டது. அதாவது, பதவியில் இருப்பவர்கள் தாங்கள் மற்றவர்களைப் பயமுறுத்தி அல்லது ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தியே அன்பைப் பெறுகிறார்கள். உதாரணத்திற்கு, அண்மையில் ஜெயாவுக்காக தமிழகத்தில் நடைபெற்ற மொட்டை, தாடி, அழுகை, ஒப்பாரி சமாச்சாரங்களைப் பார்த்தால் அவர்கள் எல்லாம் ஜெயாவை அன்பு செய்கிறார்கள் என்று அர்த்தமா? இல்லை! அவர்கள் பயப்படுகிறார்கள். அல்லது பயமுறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடவுளையும், நம் அயலாரையும் நாம் அன்பு செய்ய பயம் ஒருபோதும் காரணமாக இருக்கவே கூடாது.

கடவுளைப் பார்க்கவில்லையென்றால் நமக்கு நல்லது நடக்காது அல்லது நோய் வரும், நினைத்தது நடக்காது, அவர் கோய்ச்சுக்கிடுவார் என்று பயம் அடிப்படையில் நம் கடவுள் அன்பு இருந்தது என்றால் அது நம்மை அதிமுக தொண்டர்களோடு சேர்த்துவிடுகிறது.

அண்மையில் இணையதளத்தில் மாதாவின் ஒரு படம் வலம் வருகிறது. அதாவது, இந்தப் படத்தை 15 நிமிடங்களுக்குள் 13 பேருக்கு நீங்கள் பகிர்ந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். இதை அழிக்க முயன்றாலோ, பகிரவில்லையென்றாலோ உங்கள் வீட்டில் இறப்பு நடக்கும், நீங்கள் வேலை இழப்பீர்கள், தொழிலில் நஷ்டம் வரும் என்ற அச்சுறுத்தல்கள். பயத்தினால் சிலர் நமக்கென்ன என்று ஃபார்வர்டும் செய்கிறார்கள். ஆனால், இதுதான் அன்பா? தன் படத்தைப் பகிரவில்லையென்று ஒரு அன்னை, அதுவும் மாதா கோபப்பட முடியுமா?

பல நேரங்களில் அயலானின் அன்பும் கூட பயத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றது. அதாவது, அவனுக்கு இன்றைக்கு உதவி செய்யவில்லையென்றால் நாளைக்கு நமக்கு உதவி செய்யாமல் போய்விடுவானோ என்ற பயம் அல்லது அடுத்தவரை அன்பு செய்யாவிட்டால் நமக்கு மோட்சம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

ஆக, கடவுளன்பிலும், பிறரன்பிலும் பயம் அடிப்படையாக இருந்தால் அங்கு அன்பு இல்லையென்றே அர்த்தம்.

எங்கே பயம் முடிகிறதோ, அங்கு மட்டுமே அன்பு தொடர்கிறது!

Saturday, October 25, 2014

ஆண்களா? அல்லது பெண்களா?

'நெருக்கடியான சூழல்களை எளிதாகக் கையாளுபவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா?' என்ற தலைப்பில் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் ஒரு தீபாவளி அன்று ஒளிபரப்பப்பட்டதாகவும், அதை தான் பார்த்ததாகவும் என் நண்பர் கல்லூரியில் சொல்லிக் கொண்டிருந்தார். இன்று நான் சந்தித்த அருட்செல்வி ஒருவரும் அதைப் பற்றியே சொன்னார்.

அந்தப் பட்டிமன்றத்தைப் பற்றி என் நண்பர் சொன்னதை வைத்து இந்த நாளில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பட்டிமன்றத்தில் யார்? யார்? என்ன பேசினார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நண்பர் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

அ. தீர்ப்பு பெண்கள் சார்பாக வழங்கப்பட்டது.
ஆ. பேசியவர்கள் விவிலியம் மற்றும் இந்து இலக்கியங்களின் பின்புலங்களில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இந்த இரண்டையும் வைத்து கொஞ்சம் பில்ட்-அப் செய்து எழுதுவோம்.

அ. நாம் பயன்படுத்தும் டெக்னாலஜியைப் பாருங்களேன். இன்று நாம் பயன்படுத்துவது நேற்றைய ப்ராடக்டின் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. இன்று நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 8, நேற்றுப் பயன்படுத்திய விண்டோஸ் 7ன் மேம்பட்ட பதிப்பு, மேக்புக்கின் யோஸ்மைட், நேற்றைய லெப்பர்டின் மேம்பட்ட பதிப்பு. நேற்று ஐஃபோன் 5, இன்று ஐஃபோன் 6. ஆக, பழையவற்றின் தவறுகள் சரிசெய்யப்பட்டு, புதிய படைப்பு பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றது. இதை அப்படியே விவிலியத்தின் படைப்பு கதையாடலுக்குப் பொருத்திப் பாருங்கள். மனிதர்களில் முதலில் படைக்கப்பட்டவர் ஆண். இரண்டாவது படைக்கப்பட்டவர் பெண். ஆக, லாஜிக் படி பார்த்தால் பெண் என்பர் ஆணின் மேம்பட்ட பதிப்பு. ஆக, பெண்களுக்கு இயல்பாகவே வாழ்வின் எந்த சூழ்நிலையையும் கையாளும் மனப்பக்குவம் இருக்கின்றது. அதிலும், நெருக்கடியான சூழல்களை மிக இலகுவாகக் கையாள்வார்கள்.

ஆ. புதிய ஏற்பாட்டில் இயேசுவிடம் தன் மகளைப் பேயின் கட்டிலிருந்து விடுவிக்கும்படி கெஞ்சிக் கேட்கும் கனானியப் பெண் நெருக்கடியான சூழலை எப்படிக் கையாளுகிறார் பாருங்கள்! இயேசு தன்னை 'நாய்' என அழைத்தாலும், 'பிள்ளைகளின் உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடலாகாது' என்று இழிவுபடுத்தினாலும், அதைப் பொருட்படுத்தாது தன் மகளின் நலன் தான் மேல் என்றும், அதற்காக எந்த இழிநிலையையும் ஏற்கத் தயார் என்றும் சொல்கின்றார். அவர் தன் வாழ்வின் நெருக்கடியான இந்தச் சூழலைக் கையாளும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது.

இ. மோவாபு நாட்டுப் பெண் ரூத்து தன் கணவன் இறந்த போதும், தன் சக்களத்தி தன் வீடு திரும்பிய போதும், தன் மாமியாரின் தனிமை போக்க உடன் நிற்கின்றார். 'ஆண்டவரைக் கண்டோம், தண்டிக்கப்படுவோம்!' என்று புலம்பிக் கொண்டிருந்த சிம்சோனின் தந்தை மனோவாவுக்கு, கடவுளின் இரக்கத்தை உணர்த்தியவர் அவரின் மனைவி - ஒரு பெண். தன் சக்களத்தியோடு சேர்ந்துகொண்டு தனக்குக் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை கடவுளிடம் எடுத்துச் சொல்லி கண்ணீர் வடித்து குழந்தையையும் பெற்றெடுத்து, அதைக் கடவுளுக்கும் காணிக்கையாக்கிவிடுகின்றார் சாமுவேலின் தாய் அன்னா.

இப்படியாக விவிலியத்தில் நெருக்கடியான சூழல்களைப் பெண்களே இலகுவாகக் கையாளுபவர்களாக ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நெருக்கடியான சூழல்கள் உருவாகக் காரணமாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

விலக்கப்பட்ட கனியை உண்டதால் மனுக்குலத்திற்கே நெருக்கடியான சூழலை உருவாக்கிய முதற்பெண், ஏசா-யாக்கோபுக்கும் இடையே பெரிய பிளவை உண்டாக்கிய ரெபேக்கா, சிம்சோனின் தலையை மழித்து அவரின் வலிமை போகக் காரணமாக இருந்த டெலிலா என உதாரணங்கள் விவிலியத்தில் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது. (கோயிச்சுக்காதீங்க! இந்தப் பத்தி வெறும் ஆர்க்யுமண்டுக்காக எழுதப்பட்டது!)

நம் இந்திய இலக்கியங்களில் பார்க்கும்போது மகாபாரதத்தில் தருமன் என்ற ஒரு ஆணால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தைப் போக்க இறைவனை வேண்டியவள் பாஞ்சாலி என்ற பெண்தான். தான் கற்புடையவள் என்பதை நிரூபிக்க தீக்குண்டத்தில் இறங்கியவள் இராமாயண சீதை. தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கை எதிர்த்து நீதி கேட்டவள் சிலப்பதிகாரத்துக் கண்ணகி. தன் அட்சயப்பாத்திரத்தால் தன் நாட்டின் பஞ்சம் தீர்த்தவள் மணிமேகலை. அதியமான் காலத்தில் நடந்த வெஞ்சிப் போரை தன் மதிநுட்பத்தால் நிறுத்தியவர் ஒளவையார் என்ற பெண்.

ஆக, பெண்கள் பக்கம் தான் சாட்சிகள் அதிகம் இருக்கின்றன.

ஆனால், தீர்ப்பை நாம் கொஞ்சம் மாத்தி எழுதுவோம். நெருக்கடியான சூழல்களை எளிதாகக் கையாளுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆணில் ஒளிந்திருக்கும் பெண்மைதான் அவனின் நெருக்கடியான சூழல்களை அவன் கையாள உதவி செய்கின்றது. ஆக, பெண்கள் மட்டும் மேலானவர்கள் அல்லர். பெண்மையும் மேலானதே!



இணைச்சட்டத்தோடு இணைந்த நாள்!

இன்று இணைச்சட்ட நூல் குறித்து ஒரு சிறப்பு கருத்தரங்கம் எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த வருடம் யோபு நூல் குறித்துப் பேச ஹார்வர்டிலிருந்து ஒருவர் வந்தார் நினைவிருக்கிறதா? இன்று கருத்தரங்கிற்கு வந்தவர் திரு. எக்கார்ட் ஓட்டோ. இவர் ஒரு லூத்தரன் சபையைச் சார்ந்த ஜெர்மானிய மொழி பேசும் பேராசிரியர். விவிலியத்தில் 600க்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். சமூக அறிவியல் மற்றும் விவிலியம் என இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர். தொல்பொருள் ஆராய்ச்சியிலும் ஆர்வமுள்ளவர்.

அவரிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் இன்று பகிர்ந்து கொள்வோம்.

அ. விவிலியத்தில் உள்ள பத்துக்கட்டளைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் ஹமுராபி மற்றும் எஸ்னுன்னாவின் சட்டங்களின் மாற்று உருவங்கள் என்பது உண்மையா?

பதில்: ஆம். ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. கிமு 2ஆம் மில்லனியத்தில் எழுதப்பட்டவை ஹமுராபி மற்றும் எஸ்னுன்னா சட்டங்கள். ஆனால் இணைச்சட்ட நூல் எழுதப்பட்டது கிமு 1ஆம் மில்லனியத்தில். ஓராயிரம் ஆண்டை எப்படி நிரப்புவது என்ற கேள்வி விவிலிய ஆய்வாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்கு விடையாக நான் கண்டது இதுதான். யூதேயா மனாசே என்ற அரசனால் ஆட்சி செய்த போது அப்போது மிகவும் அச்சுறுத்தலாக இருந்த ஒரு நாடு அசீரியா. கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம் என வளர்ந்திருந்த அசீரியா இன்றைய அமெரிக்கா போல பக்கத்திலிருக்கும் எல்லாருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது. அசீரியாவை எதிர்த்து நிற்க பல அரசுகள் கூட்டு சேர்கின்றன. ஆனால் இறுதியில் யூதேயா மட்டும் தனித்து விடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் அசீரிய என்ற அடக்குமுறைக்கு எதிராக, இணைச்சட்ட நூலின் ஆசிரியர்கள் ஒரு எழுத்துப் புரட்சி செய்கின்றனர். அந்த எழுத்துப் புரட்சியே இணைச்சட்ட நூல். அரசன் என்ற ஒருவன் அச்சுறுத்துவான். ஆனால் எங்கள் ஆண்டவர் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த மாட்டார் என்ற நிலையில் அரசனுக்குப் பதிலாக ஆண்டவனை வைத்து தங்களுக்கென ஒரு சட்டம், நாகரீகம் என வகுத்துக்கொண்டனர் யூதர்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வாய்மொழியாக் கேட்ட ஹமுராபி மற்றும் எஸ்னுன்னா சட்டங்கள் கண்டிப்பாக அவர்கள் மனத்தில் இருந்திருக்கும். அது அவர்களின் எழுத்துக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்தப் பதில் நமக்குச் சொல்வது என்ன? முதல் ஏற்பாட்டின் தோரா நூல்கள் எனப்படும் நூல்கள் மட்டுமல்ல, எல்லா விவிலிய நூல்களுமே ஒரே நபராலோ, கடவுளாலோ எழுதப்பட்டவை அல்ல. அவை அந்தந்த காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்பவை. அவைகளை முழுமையாக அறிவதற்கு நாம் அதன் பின்புலத்தையும் ஆராய்வது அவசியம். ஆக, வெறும் புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இதுதான் எல்லாம் என்று சொல்வது சால்பன்று.

ஆ. இதுவரை நடைபெற்ற விவிலிய ஆய்வுகள் சாதித்தது என்ன?

பதில்: விவிலிய ஆய்வுகளை இரண்டு குழுக்களுக்குள் அடக்கி விடலாம்: ஒன்று, டயாக்ரோனிக். மற்றொன்று, சின்க்ரோனிக். டயாக்ரோனிக் என்ற குழுவினர் விவிலியம் கடந்து வந்த பாதையை ஆராய்ச்சி செய்கின்றனர். சின்க்ரோனிக் குழுவினர் விவிலியம் இன்று தொகுக்கப்பட்டு நிற்பதை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்கின்றனர். பலரின் கைகள் எழுதியிருப்பதாக முதல் குழுவினர் சொல்கின்றனர். யார் எழுதினார் என்பது பற்றிக் கவலையில்லை, என்ன எழுதியிருக்கிறது என்பது தான் முக்கியம் என வாதிடுகின்றனர் இரண்டாம் குழுவினர். இந்த இரண்டு குழுக்களுமே முழுமையில்லாதவை. இரண்டிலும் நிறைகுறைகள் இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு பேரும் செய்கின்ற ஒரே தவறு என்னவென்றால், 'நாங்கள் தான் அறிவாளிகள் எனவும், இரண்டாயிரம் அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நூலை எழுதியவர்கள் முட்டாள்கள்!' எனவும் நினைப்பது. நம்மிடம் எல்லா தொழில்நுட்பமும் இருக்கிறது என்பதற்காக கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவர்களின் நூலை கிழித்துப் பார்ப்பது பொருளற்றது. இன்று நாம் உண்மையெனக் கொள்ளும் ஒன்று நாளை பொய்யாக்கப்படலாம். ஆகையால் எந்த விவிலிய நூலையும் நான் 'மாஸ்டர்' ஆக்கிவிடவேண்டும் என்ற மனநிலை இருக்கவே கூடாது. இருக்கின்ற நூலை இருப்பது போல ஒரு அர்ப்பண உணர்வுடன் அணுக வேண்டும். 'எனக்கு எல்லாம் தெரியும்!' என்று இன்று நாம் சொல்லும் போது நாளை ஒருவர் வந்து உனக்குத் தெரிந்ததெல்லாம் அபத்தம் என்று சொல்லிவிட முடியும்.

இந்தப் பதில் நமக்குச் சொல்வது என்ன? விவிலிய நூல் மட்டுமல்ல, நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருமே புனிதமானவர். நாம் அவர்களை நம்மிடம் இருக்கும் கத்தியைக் கொண்டு 'நீ இப்படி, நீ அப்படி' என்று ஆராய்வதை விட்டு ஒரு அர்ப்பண உணர்வோடு அணுகுவதே சால்பு.

இ. அறிவிற்கும், விசுவாசத்திற்கும் தொடர்பு இருக்கிறது?

பதில்: அறிவும், கடவுள் நம்பிக்கையும் ஒருபோதும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்பதில்லை. சின்ன உதாரணம். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய போது செங்கடல் இரண்டு சுவர்கள் போல பிரிந்து நின்று கட்டாந்தரை உருவானது. அவர்கள் பாதம் நனையாமல் கடந்து சென்றனர் என்று சொல்கிறது விவிலியம். இது காமன் சென்சுக்கு எதிரானது. புவியீர்ப்பு விசை குறித்து தெரிந்த எவரும் சொல்லிவிட முடியும் இது அபத்தம் என்று. ஒரு போதும் நம் மூளை இதை சரி என்று ஏற்றுக் கொள்ளாது. ஆனால், இது எழுதப்பட்டதன் பின்புலத்தைப் பார்க்க வேண்டும். பாபிலோனியாலில் அடிமைப்பட்டுக் கிடந்து, தங்கள் நாடு, கோவில், சட்டம் என அனைத்தையும் இழந்த மக்கள் தங்களுக்கென்று ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டிக் கொள்கின்றனர். பாபிலோனியா என்ன பாபிலோனியா! எங்கள் கடவுள் உங்களிலும் மேலானவர்! அவரால் கடலின் தண்ணீரையும் செங்குத்தாக நிற்க வைத்துக் கட்டாந்தரையை உருவாக்க முடியும்! என்று தாங்கள் மூளை கட்டளையிட்டதை எழுதுகின்றனர். நம்பிக்கை உருவாவது அறிவில்தான். ஆக, அது ஒன்றிலிருந்து முரண்பட முடியாது.

இந்தப் பதில் நமக்குச் சொல்வது என்ன? ஒருவர் கொண்டிருக்கும் (கடவுள்) நம்பிக்கையை அறிவீனம் என்று சொல்வது இன்று மெத்தப்படித்த மேதாவிகளும், நம் சமுதாயமும் செய்யும் மிகப் பெரிய தவறு. இது அந்தக் கால மிஷனரிகளும், இந்தக் கால மிஷனரிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எந்த மதமும் தன் கொள்கையை மட்டும் முதன்மைப்படுத்தி மற்றொன்றை இல்லாமல் ஆக்க முனைவது பெரிய மனித உரிமை மீறல். 'என் வழி எனக்கு! உன் வழி உனக்கு! இதில் நல்ல வழி, கெட்ட வழி என்ற எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது!'

ஆக, இந்த நாள் இணைச்சட்டத்தோடு இணைந்த இனிய நாள்!



Friday, October 24, 2014

டிரினிட்டியும் ஒரு சூப்பர்ஸ்டிஷன்!

நம்பிக்கையின் வழியாக கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக!
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் இருப்பதாக!
கிறிஸ்துவின் அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!
(எபேசியர் 3:17-19)

இன்று திருப்பலியில் இந்த முதல் வாசகத்தை வாசிக்கக் கேட்டபோது ‘அறிவுக்கு எட்டாத இந்த அன்பை’ என்ற வார்த்தைகள் என்னைத் தொட்டன.

இன்று மாலை மருத்துவமனை தன்னார்வப் பணிக்காக தூய யோவான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். வார்டுக்குள் நுழைவதற்கு முன் வெள்ளைச் சட்டை, கையுறை அணிந்து கொள்ள வேண்டும். கையுறை அணிவதற்கு இலகுவாக இருக்க வேண்டி என் விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி மேசையில் வைத்தேன். அதை உடனே எடுத்துப் பார்த்த செவிலி ஒருத்தி ‘இது என்ன வித்தியாசமா? கறுப்பா?’ என்று கேட்டாள். ‘யானை முடி!’ என்றேன். ‘எதற்காக?’ என்றாள். ‘இது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்!’ என்றேன். ‘அப்படியா? இது சூப்பர்ஸ்டிஷன்!’ என்றாள். ‘அப்படியென்றால் மூவொரு இறைவனும் சூப்பர்ஸ்டிஷன் தான்!’ என்றேன் என்னையும் அறியாமல். அவள் ஒரு நொடி ஷாக் ஆகி நின்றாள். ‘என்ன சொன்ன?’ என்றாள். ‘அப்படியென்றால் மூவொரு இறைவனும் மூடநம்பிக்கை தான்! நீ நம்பவில்லையா?’ என்று சற்றே நிறுத்திச் சொன்னேன். ‘க்வெஸ்தோ எ உன் ஸ்காந்தலோ!’ (இது ஒரு அபத்தம்! இடறல்!) என்று புலம்பிக் கொண்டே வார்டு நோக்கி நடந்தாள்.

எனக்குள் ஒளிந்திருந்த கடவுள் நம்பிக்கை சட்டென்று என் நினைவிற்கு வந்தது. ‘நான் ஏன் அப்படிச் சொன்னேன்?’ என நினைத்துக் கொண்டு நானும் வழிநடந்தேன். வேலை நேரம் முழுவதும் ‘டிரினிட்டி ஒரு சூப்பர்ஸ்டிஷனா!’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

‘ஒன் மேன்ஸ் ஃபுட் இஸ் அனதர் மேன்ஸ் பாய்ஸன்’ என்று சொல்வார்கள். ‘ஒன் மேன்ஸ் க்ரீட் இஸ் அனதர் மேன்ஸ் சூப்பர்ஸ்டிஷன்’ என்று சொல்லலாம் தானே!

‘ஒன் மேன்ஸ் லவ் இஸ் அனதர் மேன்ஸ் மேட்னஸ்!’

எபேசுத் திருச்சபையில் நிலவிய பிரச்சனை இதுதான்: ‘இயேசு எப்படி எல்லாரையும் அன்பு செய்தார் என்றும் அந்த அன்பிற்காக சிலுவையில் மரித்தார் என்றும் சொல்லலாம்?’

கடவுளின் அன்பு அவர்களுக்கு வெறும் அறிவு சார்ந்த கேள்வியாக மட்டுமே தெரிந்தது.

அவர்களுக்குத் தெளிவாக எழுதுகின்றார் பவுலடியார்: ‘அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!’

கடவுளின் அன்பு மட்டுமல்ல, நம் சக மனிதர்களின் அன்பே பல நேரங்களில் நம் அறிவுக்கு எட்டாததாகவே இருக்கின்றது.

‘ஹார்ட் ஹேஸ் இட்ஸ் ரீஸன்ஸ் விச் மைன்ட் வில் நெவர் நோ!’ என்பார்கள். நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்னும் இந்த மூன்றும் இதயம் சார்ந்தவை தான் போல. இந்த மூன்றில் மட்டும் தான் மூளை இதயத்திற்கு அடிமையாக இருக்கிறது.

அன்பை ஒரு ஆர்க்கிடெக்ட் போல ஆய்வு செய்கிறார் பவுலடியார். அகலம், நீளம், உயரம், ஆழம் என அளந்து பார்க்கத் துடிக்கின்றார். அளந்து பார்ப்பது மூளையின் வேலை. அள்ளிக் கொடுப்பது இதயத்தின் வேலை.

‘நாம வச்சிருக்கிற உறவுகள் எல்லாம் நிலைக்காதுடா! ரொம்ப ஃபோன்ல பேசாத!’ என்று அடிக்கடி என்னை எச்சரிப்பான் என் நண்பன் ஒருவன். இன்று நான் நினைக்கிறேன்: ‘என் நம்பிக்கை அவனுக்கு ஒரு சூப்பர்ஸ்டிஷன்!’

நம் வட்டத்திற்கு வெளியே நின்று பார்த்தால்…

யானை முடி ஒரு சூப்பர்ஸ்டிஷன்!

டிரினிட்டியும் ஒரு சூப்பர்ஸ்டிஷன்!

Thursday, October 23, 2014

ஆர்க்கிடைப்புகள்...!

நேற்றைய தினம் மாணவர் அரங்கத்தில் தொடக்க உரையாற்றிய என் பேராசிரியர் ஒருவர் தான் அண்மையில் வாசித்த ஒரு புத்தகத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பியர்சன் மனித வாழ்வில் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் 12 ஆர்க்கிடைப்ஸ் பற்றிப் பேசுகின்றார். அதில் முதல் இரண்டு ஆர்க்கிடைப்புகள் பற்றிப் பேராசிரியர் சொன்னதை இன்று பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

முதலில் ஆர்க்கிடைப்புகள் என்றால் என்ன? இந்த வார்த்தைக்குச் சொந்தக்காரர் கார்ல் யுங் என்ற உளவியல் நிபுணர். நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆர்க்கிடைப்பை வாழ்கிறோம் என்று சொன்னவர் இவர். ஆர்க்கிடைப் என்றால் ஒரு 'மாடல்'. உதாரணத்திற்கு, கடவுள் உணர்வு என்பது ஒரு ஆர்க்கிடைப். கடவுள் இருந்தாலும், இல்லையென்றாலும் கடவுளைப் பற்றிய உணர்வு நம்முள் இருப்பதற்குக் காரணம் பிரபஞ்சத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் இந்த 'கடவுள்' என்ற ஆர்க்கிடைப்.

யுங்கைப் பின்பற்றி எழுதும் பியர்சன் மனித வாழ்வில் 12 ஆர்க்கிடைப்புகளை வகைப்படுத்துகின்றார்.

மாசற்றவர், அநாதை, போராளி, அக்கறைகாட்டுபவர், தேடுபவர், அன்பு செய்பவர், அழிப்பவர், படைப்பவர், ஆள்பவர், மந்திரவாதி, ஞானி, முட்டாள் என பன்னிரண்டு நபர்கள் ஒளிந்திருக்கிறார்கள். இதில் நம்மை அதிகம் பாதிப்பவர் 'அநாதை'. எப்படி?

'அநாதை உணர்வு' என்பது எல்லாருக்கும் பொதுவானது என்று தொடங்கும் பியர்சன் இதுதான் நாம் பிறரின் அன்பைத் தேடுவதற்குக் காரணமாக இருக்கிறது என்றும் எழுதுகின்றார். நம் அனைவரிடமும் ஏதோ ஒருவகையான அநாதை உணர்வு ஒளிந்திருக்கிறதாம். 'எனக்கென்று யாருமில்லை! அவனுக்கு எல்லாம் இருக்கிறது! எனக்கு ஒன்றும் இல்லை! நான் அன்பு செய்வது நிலைத்திருக்காது! என்னை எல்லாரும் கைவிட்டுவிடுவார்கள்! எனக்கு சிறிய வயதில் எதுவும் கிடைக்கவில்லை! இனியும் எனக்குக் கிடைக்காது! எனக்கு அதிர்ஷ்டம் இல்லை! என்னால் யாருக்கும் பயனில்லை! என்னை யாரும் தேடமாட்டார்கள்! அங்கே இருந்தா நல்லா இருந்துருக்குமே! இங்கே எனக்கு யாரும் இல்லை!' என்று புலம்பும் மனநிலைNயு நம் அநாதை ஆர்க்கிடைப். இதில் ஒரு நல்லது என்னவென்றால் இந்த ஆர்க்கிடைப் அதிகம் இருப்பவர்கள் அடுத்தவர்களைப் புரிந்து கொள்பவர்களாக, அதிகம் இரக்கம் காட்டுபவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் கையில் எடுக்க வேண்டியது இதுதான்: 'நான் ஒரு விக்டிம் ஆக மாட்டேன்!' என்று நமக்குள் உறுதியாகச் சொல்லிக் கொள்ளவேண்டும்.

இதைச் சமநிலைப்படுத்தும் மற்றொரு ஆர்க்கிடைப் தான் 'போராளி உணர்வு'. இந்தப் போராளி உணர்வு வந்தால் மட்டுமே அநாதை உணர்வை சரிநிலைப்படுத்த முடியும்.

இந்த மனநிலையை வளர்த்துக்கொள்ள ஆசிரியர் இரண்டு கருத்துக்களைச் சொல்கின்றார்:

அ. வலி இன்றி ஆழம் இல்லை. வாழ்வின் எந்த நிலையிலும் நாம் ஆழமாகக் காலூன்றி நிற்க வேண்டும் என்றால் வலியை ஏற்றுக்கொள்வது அவசியம். வலிகள் குறைந்து இருப்பின் அங்கே ஆழம் அதிகம் இல்லை என்றே அர்த்தம்.

ஆ. நாம் வலியைத் தாங்கிக் கொள்ள நமக்குத் துணை நிற்பது நாம் கொள்ளும் எதிர்நோக்கு. எதிர்நோக்கு இல்லாமல் நாம் தாங்கும் வலிகள் நமக்குக் கசப்புணர்வையே தரும். ஆனால் எதிர்நோக்கு இருப்பின் வலிகள் கசப்பாகத் தெரிவதில்லை.

இன்று நாம் பார்க்கும் எல்லா நபருக்குள்ளும் இந்த 'அநாதை - போராளி' போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது!



Tuesday, October 21, 2014

தீபஒளித் திருநாள்


நாளை நாம் தீப ஒளித்திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தீமையின் மேல் நன்மை கொள்ளும் வெற்றியாக, இருளின் மேல் ஒளி கொள்ளும் வெற்றியாக, அறியாமையின் மேல் ஞானம் கொள்ளும் வெற்றியாகவே இது உருவகம் செய்யப்படுகிறது.

வீடு கூட்டி, தண்ணீர் தெளித்து, செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை வணங்கி, வானவேடிக்கை, இனிப்பு, புத்தாடை என்று கொண்டாடப்படும் இந்தத் தீபஒளித் திருநாள் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஒளி ஏற்றட்டும்.

தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

சூசன்னா - 1

இன்று பழைய ஏற்பாட்டு கிரேக்க நூலான சூசன்னாவைப் படிக்கத் தொடங்கினோம். தானியேலின் 13ஆவது அதிகாரமாக இது பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் வழங்கப்பட்டாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இதை ஒரு தனி நூலாகவே முன்வைக்கிறது. வெறும் 64 வசனங்கள் கொண்ட இந்த நூலைக் கண்டிப்பாக வாசியுங்கள். சரியா? பக்கம் எண்கள்: 207-210.

சூசன்னா என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல் இது.

இதன் பின்புலம் 'ரேப்' - அதாவது, பாலியல் வன்முறை.

எதற்காக ரேப் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது? ஒரு பெண்ணை இருப்பது போல, கறைபடியாமல் ஏற்றுக்கொள்ள விரும்புகிறது ஆண் மனம். ரேப்பின் பின்னால் இருக்கும் கோபத்திற்குக் காரணம் ஆணாதிக்கம். ஆணாதிக்கம் உள்ள சமுதாயத்தில் மட்டுமே ரேப் ஒரு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

சூசன்னா என்ற பெண்ணை முதியோர் இருவர் கவர்ந்து கொள்ள நினைப்பதாகத் தொடங்குகிறது நூல்.

இவர்களை முதியோர் என்று கிரேக்க விவிலியம் சொல்லவில்லை. வயது வந்தவர்கள் என்று சொல்கிறது. அதாவது, ஏறக்குறைய முப்பது முதல் நாற்பது வயது இருக்கும்.

'இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செல்லவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறிமாறிச் சென்றார்கள்' என்று அவர்களின் மனநிலை சித்தரிக்கப்படுகின்றது.

ஆக, ரேப் செய்ய முனைவதற்கு முன்பே இந்த வயது வந்தவர்கள் செய்த முதல் குற்றம் எதை நினைக்க வேண்டுமோ அதை நினைக்காமல் போனதே!


Sunday, October 19, 2014

இடைவிடாது உங்களை நினைத்து

நாங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும்,
அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும்,
எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள மனவுறுதியையும் நினைவு கூறுகிறோம்.
(காண். 1 தெச 1:1-5)

புதிய ஏற்பாட்டு நூல்களில் முதலில் எழுதப்பட்ட நூல் தெசலோனிக்கியருக்கு எழுதிய முதல் திருமடல் தான். தூய பவுல் முதன்முதலாக நற்செய்திப்பணி புரிந்த இடங்களில் ஒன்று தெசலோனிக்கா.

இன்றைய நிலையில் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு பங்குத்தளத்தில் பணி புரிந்த அருட்பணியாளர் தன் பணியினிமித்தம் வேறிடம் மாற்றப்பட்ட பின்போ அல்லது வெளியூர், வெளிநாடு என அவர்களைப் பிரிந்து சென்றபோது அவர்களை நினைவு கூர்ந்து எழுதுவது என வைத்துக் கொள்ளலாம்.

தூய பவுலடியாரின் எல்லாத் திருமடல்களும் தன் இறைமக்களை வாழ்த்துவதாகவே தொடங்குகின்றது. மேலும் முழுக்க முழுக்க அந்த இறைமக்களை மையமாக வைத்தே எழுதுகிறார் பவுலடியார் இது அருட்பணியாளர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

நீங்க என்னை நல்லாக் கவனிக்கல, நான் ஹவுஸ் விசிட் வந்த போது நிறையப் பேர் இல்ல. ஃபேர்வெல் அன்னைக்கும் என்னை யாரும் சரியா வாழ்த்திப் பேசல, நான் மீட்டிங் கூப்பிட்டப்பல்லாம் நீங்க யாரும் வரல - என்று எந்தவொரு வருத்தமும் அவரின் மடல்களில் இருப்பதில்லை.

'உங்களை நினைத்து நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்!'

இது தான் பவுலின் முதல் வார்த்தைகள். நீங்க எப்படி என்னை ஏற்றுக் கொண்டாலும் பரவாயில்லை. என் மனதில் உங்களின் நினைவு தருவது நன்றிதான். என்னவொரு பெருந்தன்மை இது!

அருட்பணி நிலையில் மட்டுமல்ல, எந்த நிலையிலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு கொடை. அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ, அன்பு செய்கிறாரோ இல்லையோ, நம் உறவுகளின் முன் நாம் ஏதோ ஒரு வகையில் நம்மையே நிர்வாணமாக்கி விடுகிறோம். 'இதுதான் நான்!' என்று நம்மையே அவர்களுக;குக் காட்டுகிறோம். உறவு என்பது ஒரு சரண்டர். இந்தப் பின்புலத்தில் நான் சண்டையிட்டு அவர்களிடம் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதும் எதுவும் இல்லை. எந்நேரமும் நன்றி மனம் இருந்தால் மட்டுமே போதுமானது.

தொடர்ந்து பவுலடியார் அவர்களின் நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு என்ற இந்த மூன்றையும் வாழ்த்துகின்றார்.

நம்பிக்கை செயலிலும், அன்பு உழைப்பிலும், எதிர்நோக்கு மனவுறுதியிலும் வெளிப்படுவதாகச் சொல்கின்றார்.

இன்று திருச்சபை வாழ்வது பெரிய பெரிய கட்டடங்களிலும், உயர்ந்த ஆலயங்களிலும் அல்ல. மாறாக சின்னஞ் சிறு வீடுகளின் கட்டாந்தரைகளில் தான். தாங்கள் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு அவர்கள் காட்டும் பதிலன்பு அவர்களின் புன்சிரிப்பிலும், வரவேற்பிலும் மிக இயல்பாக இருக்கும்.

நம் கடவுள் சின்னஞ்சிறியவர்களின் கடவுள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் தூய பவுலடியார்.


சீசருக்கு உரியதை சீசருக்கும்!

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்'

இன்று மாலை முதல் நாளை மாலை வரை எல்லாக் கத்தோலிக்க ஆலயங்களிலும் ஒலிக்கும் வசனம் தான் இது.

22 நாட்கள் 'வனவாசத்திற்குப்' பிறகு மீண்டும் இன்று அயோத்தி திரும்பினார் நம் அம்மா. வழங்கப்பட்ட வரவேற்பைப் பார்த்தால் 'தவறு செய்வதெல்லாம் சரி' என்று ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டது போலவே தோன்றுகிறது. 'கடவுளை மனிதன் தண்டிக்கலாமா?' என்று பேனர் கட்டியவர்கள் எல்லாம் இந்தக் கடவுளுக்காக மனிதனிடம் ஏன் ஜாமீன் கேட்டார்கள் என்றும் தெரியவில்லை.

'ஜெயாவுக்கு உரியதை ஜெயாவுக்கும், கருணாநிதிக்கு உரியதை கருணாநிதிக்கும் கொடுங்கள்' என்று இயேசு சொன்னால் நாம் எப்படி புரிந்து கொள்வோம்.

'சீசருக்கு உரியதை சீசருக்கு' என்ற இறைவாக்கைப் பற்றி ஒரு சில கமெண்டரிகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் எழுதியிருந்தார். இயேசு மனிதன் சார்ந்த விஷயங்களை அல்லது உலகு சார்ந்த விஷயங்களை விளக்க வந்தவர் அல்லர். அவர் கடவுள் சார்ந்த, மேலுலகம் சார்ந்தவற்றை விளக்க வந்தவர் என்று. எனக்கு இந்த விளக்கத்தில் உடன்பாடு இல்லை. இயேசுவை வெறும் ஆன்மீகமாக்கப்பட்ட சந்தைப் பொருளாக மாற்றுவது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று அல்ல.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' என்று சொல்லும் இயேசு, 'நாம் ஏன் அவ்வாறு கொடுக்க வேண்டும்?' என்று கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே.

இயேசுவின் காலத்தில் உரோமை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அப்படியிருக்க இயேசுவின் போதனை அவர்களை சீசரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவும், அடிபணிந்து போகவும் சொல்கிறதா?

எனக்கு என்னவோ இந்த இறைவாக்குப் பகுதி பின்னாளில் திருச்சபையில் ஏற்பட்ட 'அரசியலா? திருச்சபையா?' என்ற கேள்விக்கு விடையாக எழுதப்பட்டதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் வாழ்ந்த போப்-ஆண்டவர்கள் தங்களை அரசர்களாக மக்கள் மதிக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். அல்லது அரசுக்கும், திருச்சபைக்கும் ஏதாவது 'பதவி' மோதல் இருந்திருக்கலாம். இதைச் சரி செய்வதற்காக 'அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுக்க வேண்டும்' என்று சாமானியனுக்கு அறிவுறுத்தும் பகுதியாக இதை இயேசுவின் வாயில் திணித்து எழுதி விட்டார்கள்.

'அவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுக்க வேண்டும்' என்பது இயற்கையின் விதிக்கு அப்பாற்பட்டது. அவரவருக்க உரியதை அவரவருக்கு கொடுத்திருந்தால் உயிரினம் வளர்ச்சி பெறாமல் போயிருக்கும் என்பது டார்வினின் 'ஆரிஜின் ஆஃப் ஸ்பீஸிஸ்'ல் உள்ள ஒரு கருத்து. தனக்கு கிடைத்தது போல இன்னும் தனக்கு என எடுத்துக்கொள்ளும் உயிரினமே பரிணாம வளர்ச்சி பெறும்.

'சீசருக்கு உரியது சீசருக்கு' என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இது அவருக்கு உரியது என எப்படி அளவிடுவது?

இதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், 'சீசர் வேலையை சீசர் பார்க்கட்டும், கடவுள் வேலையை கடவுள் பார்க்கட்டும்! நீங்க உங்க வேலையை ஒழுங்கா பாருங்க!' என்று இயேசு சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சீசருக்கு உரியதை நாம் சீசருக்குக் கொடுக்கிறோம் என்றால் சீசரும் நமக்கு உரியதை நமக்குக் கொடுக்க வேண்டும்தானே!

ஜெயாவுக்கு உரியதை ஜெயாவுக்கு நீதிமன்றம் கொடுத்த போதே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்! ஜெயாவால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்று சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுக்கிறோமா அல்லது கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுக்கிறோமா என்று கேட்பதை விட, நமக்குள்ளதை நமக்குக் கொடுக்கிறோமா என்று கேட்போம்.


Saturday, October 18, 2014

நீங்க சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!

பைபிளில வர்ற இயேசுநாதரின் போதனைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்: 'நீங்கள் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள்!'

இதுல என்னங்க இருக்கு? இத சொல்றதுக்கு இயேசுநாதருதான் வேணுமா? எல்.கே.ஜி குழந்தைக்குக் கூடத் தெரியும். பறவைகள், விலங்குகளை விட மனிதருக்கு பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு இருக்குன்னு. நேச்சுரலி நாமதான் மேலானவர்கள்! 'நாம மேலானவங்க' அப்படிங்கறது நம்ம மூளைக்குத் தெரிஞ்ச அளவுக்கு நம்ம மனசுக்குத் தெரியலயே? அதத்தான் இயேசு சொல்ல வர்றாரு.

இயேசு இதைச் சொல்லும்போது அவர் காலத்தில இருந்த யூத பப்ளிக் மார்க்கெட்டில இருந்த ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். 'காசுக்கு இரண்டு குருவிகள் விற்பதில்லையா?' 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?'

இங்க அடுத்த பிரச்சனை. இயேசுவுக்கு கணக்கு தெரியல. ஒரு காசுக்கு இரண்டு குருவினா, இரண்டு காசுக்கு எத்தனை குருவிகள்? நான்கு. ஆனா இயேசு ஐந்துன்னு சொல்றாரே. அது வேறு ஒன்னுமில்லை. ஐந்தாவது குருவிதான நம்ம ஊர்ல காய்கறிக்கடையில நாம வாங்குற கறிவேப்பில மாதிரியான கொசுறு - இலவசம். அந்தக் காலத்தில நாம் 2 கிலோ, 5 கிலோன்னு தக்காளி வாங்கினோம். கடைக்காரரும் ரெண்டு அல்லது மூணு தக்காளி கொசுறுன்னு குடுத்தாரு. இப்ப இருக்குற விலைவாசியில நாம வாங்குதே ரெண்டு அல்லது மூணு தக்காளிதான. இதுல கொசுறு எப்படி வரும்?

ஜவுளி கடையில நாம கேட்டு வாங்குற 'கட்டப்பை', நகைக் கடையில நாம நின்னு வாங்குற 'மணி பர்ஸ்,' ஹோட்டல்ல பில் கட்டிட்டு 'இவ்வளவு ரூபா ஆயிடுச்சேனு' முணங்கிக்கொண்டே தேடி எடுக்கும் 'சீரகம்' இவை எல்லாமே கொசுறுதான். ஏன் நம்ம போட்ட ஓட்டுக்கு நாம வாங்குற டிவி, மிக்சி, கிரைண்டர், லேப்டாப் கூட கொசுறுதான்.

நாம வாங்குற பொருளுக்கும், கொசுறுக்கும் வித்தியாசம் என்னன்னா இந்தக் கொசுறுக்கு ஏதாவது ஆச்சுன்னா நாம கவலைப்படவே மாட்டோம். துணியப் பத்திரப்படுத்தும் அளவுக்கு 'கட்டப்பையையோ', நகையைப் பத்திரப்படுத்தும் அளவுக்கு 'மணி பர்ஸையோ' (எம்ப்டி) பற்றி நாம கவலைப்படறது இல்ல. அது காணாமற்போனால் கூட அதைத் தேடி எடுக்க நாம் மெனக்கெடுவதில்லை.

ஐந்தாவது குருவியோடு நிலைமை அதுதான். நான்கு குருவிக்குத்தான காசு கொடுத்தோம். அவை பத்திரமா இருந்தா போதும். அஞ்சாவது இருந்தா என்ன? பறந்தா என்ன? இயேசு வைக்கிற டுவிஸ்ட் அதுதான். கொசுறா வந்த குருவின்னு நினைக்காம பத்திரமா பாதுகாப்பவர்தான் நம்ம கடவுள்.

ஒரு நிமிஷம் நினைச்சுப்பாருங்களேன். அந்தக் கொசுறா வந்த குருவி மனசுல என்ன நினைக்கும்? 'எனக்குத் தண்ணி வைக்க மாட்றான். அரிசி போட மாட்றான். கூண்டப் பத்தி கவலப்பட மாட்றான். என்ன இருந்தாலும் நான் கொசுறா வந்தவ தான!'னு கண்டிப்பா புலம்பும். நம்ம உறவுகளிலேயே பல நேரங்களில் நம்மிடம் வர்ற உறவுகளையும், நட்பையும் கொசுறாத்தான பார்க்கிறோம். 'அவ இருந்தா என்ன! போனா என்ன? நமக்கு என்ன செலவா? வரவா?' ன்னு நம்மள அறியாமலே நம்முடைய செயல்களால காட்டிவிடுகிறோம்.

திருமண உறவுல இது எப்படி இருக்கும்னா, நம்மள நம்பிதான வந்திருக்கான்(ள்). இனி எங்க போவான்(ள்)? குடுக்குற சாப்பாட சாப்பிட்டுட்டு, குடுக்குற வேலையைச் செய்யட்டும் என நினைக்கிறது. முற்றிலும் துறந்த துறவு வாழ்வில (என்னைப் போன்ற) வாழ்வில எப்படி வெளிப்படும்னா, நான் எதுக்கு இந்த மக்களைப் பற்றி கவலைப்படணும்? இந்த இடம் இல்லைன்னா இன்னொரு இடம்! என்ற ஏனோதானோ மனநிலை மற்றும் இதிலிருந்து வெளிப்படும் அதிகாரம். எனக்குக் கீழ் இருக்கிற மக்களை நான் கொசுறுக் குருவிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிடுவேன்.

நம்மள இந்த உலகம் கொசுறு போல நினைத்தாலும் நம்ம கடவுள் நம்மள ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. அவரோட கண்ணின் கருவிழிகள் நாம். நம்ம உடம்ப பாருங்களேன். அத வெளியில செய்ற செயல்களத்தான் நாம பார்க்கிறோம். கண் பார்க்குது. காது கேட்குது. கை டைப் அடிக்குது. கால் நடக்குது. ஆனா உள்ளுக்குள்ள அதே நேரம் எவ்வளவு வேலைகள் நடக்குது? இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், உணவு செரிமானம், சுவாசம், எண்ண ஓட்டம், மூளையில நடக்குற வேலைகள், கணயம், கிட்னி, குடல் என எல்லாம் எவ்வளவு நேர்த்தியா வேலை செய்கின்றன. உள்ள ஒரு சின்ன பிராப்ளம் ஏற்பட்டு சுவாசம் நுரையீரலுக்குப் பதிலாக இதயத்திற்கோ, உணவு இரைப்பைக்குப் பதிலாக நுரையீரலுக்கோ போனா என்ன ஆகும்? நாம காய்கறி வெட்டிக்கிட்டு இருக்கும்போது காயை வெட்டுங்குற கமாண்டுக்குப் பதிலா மூளை கையை வெட்டுன்னு கமாண்ட் கொடுத்தா என்ன ஆகும்? இதுதான் கடவுளோட பராமரிப்பு. இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்: 'என் உள் உறுப்புக்களை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!' (திபா 139:13). இப்படி எல்லா மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், இயற்கையையும் பராமரிப்பவர் இறைவன். இந்தப் பராமரிப்பை நாம ஒரு நிமிஷம் நினைச்சோம்னா, இந்தப் பெரிய பிரபஞ்சத்தில நாம ஒன்னுமேயில்லை அப்படிங்கிற சுயஅறிவை நாம் பெற்றுவிடுவோம். ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.

நாம யாரையும் 'கொசுறு' போல நினைக்கக்கூடாது. நாம சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கள்ளும் ஏதாவது ஒரு போரட்டம், கண்ணீர், ஏமாற்றம், விரக்தி இருக்கும். அப்படி இருக்கும்போது எதுக்காக நம்மளோட வார்த்தையாலும், செயல்களாலும் அதை அதிகமாக்கணும்? ஒருத்தர் மத்தவர்ட்ட கொஞ்சம் கனிவோட நடந்தால நம்ம மனித குலம் எவ்வளவோ உயர்ந்துடும். வன்முறை, தீவிரவாதம், கோபம், அடிமைத்தனம், போர் இப்படி எதுவுமே இல்லாமல் போய்விடும்.

நாம நம்மள ஒருபோதும் 'கொசுறு' தானேன்னு தாழ்வா மதிப்பிடவே கூடாது. 'உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும்!' என்பதை அடுத்தவர்களுக்குக் கற்றுக்கொடு என்பார் லெனின். நம்மள மத்தவங்க சுயமதிப்பு நிறைந்தவங்கனு நினைக்கனும்னா நாம ஒருநாளும் தாழ்ந்து போகவே கூடாது. எக்காரணத்தக் கொண்டும் தன்மானம் இழக்கவே கூடாது. எப்போ நாம நம்மளயே கொசுறுன்னு நினைக்கிறோமோ, அப்பவே மத்தவங்க நம்மள அதுமாதிரி நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் நாம அவங்களுக்கு விக்டிம்ஸ்தான். 'நில்லுன்னா நிக்கணும்! உட்கார்ன்னா உட்காரணும்!'

சிட்டுக்குருவி மிகவும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஜீவன். குயில்போல அதற்குப் பாடத் தெரியாது. மயில்போல ஆடத் தெரியாது. கிளிபோல பேசத் தெரியாது. அதோட இறகுகள் கூட அட்ராக்டிவ் கிடையாது. மிகவும் வலுவற்ற ஜீவன் அது. ஆகையால்தான் நம்ம செல்ஃபோன் கதிரியக்கத்துக்கூட ஈடுகொடுக்க முடியாம வேகமா அழிஞ்சுட்டு வருது.

இன்னைக்கு எங்கயாவது ஒரு குருவியப் பார்த்தீங்கன்னா ஒரு நிமிஷம் நின்னு உங்க மனசுக்குள்ளேயே சொல்லிக்கோங்க:

'நீங்க சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!'

Thursday, October 16, 2014

ஒரு பெரிய வீட்டில் ...

கடந்த மாதம் தனியாக தியானம் செய்தேன் என்று சொன்னேன் அல்லவா. அந்தத் தியானத்தின் இறுதியில் நான் இந்த ஆண்டு செயல்படுத்துவதற்காகத் தேர்ந்து கொண்ட இறைவாக்கு இதுதான்: 2 திமொத்தேயு 2:20-21.

சரி அதை திடீரென்று இன்று நினைவு கூறக் காரணம் என்ன?

நேற்றைய தினம் நாம் குறிப்பிட்டோம். நற்செய்தியாளர்களும், திருத்தூதர்களும் தங்களின் காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த இலக்கிய நடையையும், அந்தக் காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த சமகால இலக்கியச் செல்வத்தையும் மிகத் தாராளமாக தங்கள் நூல்களிலும் பயன்படுத்தினர். இது எதற்காக என்றால் 'தெரிந்த ஒன்றின் வழியாக தெரியாத ஒன்றை அறிவிப்பது'. 'தெரிந்த ஒரு நடையின் வழியாக தெரியாத இயேசுவை' அறிவிப்பது. இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் 'இன்கல்ச்சரேஷன்' என்று சொல்ல ஆரம்பித்தது.

2 திமொத்தேயு 2:20-21 எனக்குப் பல ஆண்டுகளாகப் பரிச்சயமான ஒன்று. ஆனால் இதன் அர்த்தம் என்னவோ எனக்கு கடந்த ஆண்டுதான் விளங்கியது. இந்த இறைவாக்கின் முதல் பகுதி அப்படியே 'பிளோட்டோவின் உரையாடல்கள்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிளோட்டோ தன்னிடமிருந்து படிப்பை முடித்துச் செல்லும் சீடன் ஒருவனுக்கு இந்த அறிவுரையைச் சொல்லி வழியனுப்புகிறார்.

'ஒரு பெரிய வீட்டில் ...
(அ) பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல,
(ஆ) மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன.
(அ) அவற்றுள் சில மதிப்புடையவை.
(ஆ) சில மதிப்பற்றவை.
(ஆ) ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால்
(அ) அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார்.
(ஆ) அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்.
(அ) தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.'

மேலேயுள்ள நடையைக் கவனியுங்களேன். மொத்தம் 8 சொற்றொடர்கள். 8 சொற்றொடர்களுக்கும் உள்ள தொடர்பு அ, ஆ என வளர்ந்து பின் ஆ, அ எனத் தேய்கிறது. இதுதான். இதை விவிலிய ஆய்வு மொழியில் 'படிக்கட்டு நடை' என்று சொல்வார்கள். மேலே ஏறி, பின் கீழே இறங்குவது.

தூய பவுலும், பிளேட்டோவும் ஒரு வீட்டில் உள்ள பாத்திரங்களை உருவகங்களாக வைத்து திமொத்தேயுவுக்கும், தன் சீடனுக்கும் என்ன அறிவுறுத்துகிறார்கள்.

பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் அந்தக் காலத்தில் உணவு அருந்துவதற்கும், சமய வழிபாட்டிற்கும், சாமிக்கு அர்ச்சணை செய்யவும், பணம் மற்றும் விலையுயர்ந்த முத்துக்களின் சேமிப்புப் பெட்டகமாகவும் இருந்தது. மண் மற்றும் மரத்தாலான கலன்கள் அடிமைகளின் உணவுப் பாத்திரங்களாகவும், மனிதக் கழிவுகளை அகற்றும் பாத்திரங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. இரண்டு வகைப் பாத்திரங்களுமே பயன்படுபவைதாம். ஆனால் பயன்பாட்டில் வித்தியாசம் இருக்கின்றது. பொன் பாத்திரத்தை நம் மடியிலும், மண் பாத்திரத்தை தரையிலும் வைக்கின்றோம்.

கடவுளின் அருட்பணியாளராக இருக்கக் கூடிய திமோத்தேயு என்றும் கடவுளின் மடியில் இருக்கும் பொன்னைப் போல இருக்க வேண்டும் எனவும், கீழானவற்றோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்ளக் கூடாது என்பதுமே பவுலின் அறிவுரை. 'கீழானவை எவை' என்பதை தூய பவுல் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் (காண். 2:22-26).

ஆக, விவிலியத்தை அறிய விவிலியம் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய உருவகங்களையும், இலக்கிய நடையையும் அறிதலும் அவசியமாகிறது. ஒரு சில உருவகங்கள் காலத்தையும் வென்று அர்த்தம் கொடுப்பவைகளாக இருக்கின்றன.


ஊனியல்பும், ஆவியின் இயல்பும்!

இன்றைய திருப்பலியின் போது வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் தூய பவுலடியார் கலாத்திய திருஅவைக்கு எழுதும் தனது திருமடலில் ஆவியின் இயல்புக்கும், ஊனியில்புக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகின்றார்.

ஊனியன்பின் செயல்கள் என அவர் சொல்வது: பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம். மொத்தம் 15.

ஆவியின் கனிகளாக அவர் சொல்வது: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம். மொத்தம் 9.

இந்த ஆவியின் கனிகளைத் தான் நாம் நமது உறுதிப்பூசுதல் மறைக்கல்வி வகுப்புகளில் படிக்கின்றோம்.

தூய பவுலடியாரின் இந்த 'லிட்டனி' வகை எழுத்து ஒரு இலக்கிய நடை. இது விவிலியத்தில் மட்டுமல்ல கிரேக்க இலக்கியங்களிலும் இருக்கின்றது. மக்களுக்கு நேர்மறையானவற்றைச் சொல்வதற்கு முன் எதிர்மறையானவற்றைப் பட்டியலிடுவது. ஆயர் திருமுகங்கள் என்று சொல்லப்படும் 1, 2 திமொத்தேயு மற்றும் தீத்து திருமுகங்களில் இந்த இலக்கிய நடை அதிகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஊனியல்பின் செயல்கள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

இன்று கொஞ்சம் கூடவே இருக்கின்றன.

இன்றைக்குத் தூய பவுலடியார் இருந்தால் இந்த லிஸ்டை இன்னும் நீட்டிருத்திருப்பார்: அதிக நேரம் மொபைலில் பேசுவது, ஃபேஸ்புக் பார்ப்பது, வாட்ஸ்ஆப்பில் மற்றவர்கள் கடைசியாக வந்தது எப்போது எனத் தேடுவது, தலைவி ஜெயிலுக்குப் போனால் பஸ்சை எரிப்பது, சாதியின் பெயரால் சண்டையிடுவது, டாஸ்மாக் போவது, வட்டிக்குப் பணம் கொடுப்பது, ப்ளாக் எழுதுகிறேன் என்ற பெயரில் என்னவாவது எழுதுவது (!) என்று சொல்லிக் கொண்டே போவார்.

ஆவியின் கனிகளுக்கு எதிராக இருக்கும் அனைத்துமே ஊனியல்பின் செயல்கள் தாம். ஆனால், ஊனியல்பின் செயல்கள் நமக்கு எளிதாகத் தெரிகின்றன. ஆவியின் கனிகள் கொடுப்பதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது.

ஒன்று நம்மிடம் பொறுமை இல்லை. மற்றொன்று தொடர்ந்து தக்க வைக்கும் விடாமுயற்சியும் இல்லை.

இந்த இரண்டு வரம் கேட்கிறேன் இறைவனிடம்!

Wednesday, October 15, 2014

இரண்டாம் படைப்பு வரலாறும், மனித உறவு நிலைகளும்!

நேற்றைய தினம் தொடக்கநூலின் முதல் படைப்பு வரலாற்றையும், மனித உடல் வளர்ச்சி நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இன்றைய நாளில் இரண்டாம் படைப்பு வரலாற்றுக்கும், மனித உறவு நிலைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று பார்ப்போம்.

நம்மளப் பார்த்து யாராவது 'ஹூ ஆர் யூ?' என்று கேட்டாலோ அல்லது 'ஹவ் ஆர் யூ?' என்று கேட்டால் பதில் சொல்லிவிடலாம். நம்மிடம் யாராவது 'ஒய் ஆர் யூ?' என்று கேட்டால் நமக்கு எப்படி இருக்கும்? அதற்கு நாம் என்ன பதில் சொல்வோம். மனித வாழ்க்கையின் 'ஏன்?' என்ற கேள்விக்கு விடையாக வருவதே உறவு. எதற்காக நாம் அன்பு செய்கிறோம்? எதற்காக நாம் நட்பு கொள்கிறோம்? எதற்காக ஒரு சிலரை நமக்குப் பிடிக்கிறது? எதற்காக ஒரு சிலரை நாம் வெறுக்கிறோம்?

ஒருவரைவொருவர் அதிகம் அன்பு செய்யும் இனமும் மனித இனம்தான். ஒருவரையொருவர் அதிகம் அழித்துக் கொள்ளும் இனமும் மனித இனம்தான்.

1947ல் வெளிவந்த 'நேச்சர் பாய்' என்ற பாடலை எழுதிய ஆசிரியர் ஏடென் ஆப்ஹெட்ஸ் அழகாகச் சொல்வார்: 'உன் வாழ்வில் நீ கற்கும் மிகப்பெரிய பாடம் அன்பு செய்வதும், அன்பைப் பெறுவதும் தான்'. அதற்குப் பின் நான்கு ஆண்டுகள் கழித்து மனித தேவைகளை அட்டவணைப்படுத்திய ஆபிரகமாம் மாஸ்லோ என்ற உளவியல் நிபுணர், ஐந்தடுக்குப் பிரமிடில் அன்பை மூன்றாவதாக, அதாவது மையமாக நிறுத்துகின்றார். இவர்கள் அன்பு செய்வதைப் பற்றிச் சொன்னாலும் ஏன் நாம் அன்பு செய்கிறோம் அல்லது செய்ய வேண்டும் என்பதற்கும் காரணம் சொல்லவில்லை.

அன்புக் கட்டளை கொடுத்த இயேசு கூட எதற்காக அன்பு செய்கிறீர்கள் என்றும், எதற்காக அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுச்செல்லவில்லை.

நான் மேற்கொண்ட சின்ன இணையதள தேடுதலில் கிடைத்த காரணங்கள் இவை:
அ. அன்பின் முதல் காரணம் நாம் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள். அன்பு செய்வதற்கான காரணம் முதலில் உடலியல் சார்ந்தது. அதாவது, உயிரினத்தின் முதல் குணம் தன்னையே அதிகரித்துக் கொள்வது. எந்த உயிரினமும் வாழவும், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளவுமே விழைகிறது. மனித உடலின் சுரப்பிகளும் இந்தத் தேடலைத் துரிதப்படுத்துகின்றன.

ஆ. சரி! இனப்பெருக்கம் முடிந்தாயிற்று! இனப்பெருக்கத்திற்குப் பின்னும் ஏன் ஒருவர் மற்றவரைத் தேடுகிறோம்? நம் பார்ட்னரோடு இணைந்திருக்க மற்றொரு காரணம் 'ரிவார்ட் அன்ட் அட்டாச்மென்ட்'. நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கும் போது ஏதோ ஒருவகையான வெகுமதி (உணர்வு வெகுமதி! பொருள் வெகுமதியும் இருக்கிறது. ஆனால் பொருள் வெகுமதிக்காக மட்டும் தொடர்பு இருந்தால் அது உறவுப் பிறழ்வாக மாறிவிடுகிறது). நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கும் போது நம்மை அறியாமலேயே ஒரு நெருக்கம் பிறந்து விடுகிறது.

இ. தொடக்தக்தில் உறவு நிலை ஹார்மோன்களில் உந்துதலால் தான் இருக்கிறதே தவிர, அங்கே உண்மையான அக்கறையும், அன்பும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. நம் உடலில் சுரக்கும் 'டோபோமைன்' (நம்மில் இன்ப உணர்வைத் தூண்டக் கூடியது), 'ஆக்ஸிடைசின்' (நெருக்கத்தைத் தேடத் தூண்டுவது) மற்றும் 'வாஸோபிரசின்' (உறவைச் சமூகத்தின் அங்கீகாரமாக மாற்றுவது) என்னும் இந்த மூன்று ஹார்மோன்கள் 'மோனோகாமி' என்னும் 'ஒருதார' உறவை அல்லது நம் பார்ட்னரைத் தேடும் நம் ஆசையை நிலைநிறுத்தி வைக்கிறது.

ஈ. சப்ளிமேஷன் - அதாவது ஹார்மோன்கள் ஒருவர் மற்றவரை நோக்கி ஈர்க்கும் வேலையைச் செய்ய விடாமல் நம் மனதின் உதவியோடு, அல்லது மூளையின் ஆற்றலோடு அதை வேறொரு திசை நோக்கித் திருப்பிவிடுவது. துறவறத்தின் மணத்துறவிலும், மருத்துவ நோக்கத்திற்காகவும், பொதுநல நோக்கத்திற்காகவும் இது செய்யப்படுகிறது. என்னதான் இதற்காக ஆன்மீக காரணங்கள் சொன்னாலும் இயற்கையை அதன் போக்கிலிருந்து திருப்பிவிடவதும், அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்துவதும் ஆபத்தாகவே மாறிவிடுகிறது. 'இதற்கெல்லாம் கடவுள் அருள் வேண்டும்' என்று சொல்வதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. வாழ்க்கை முழுவதும் கடவுளுக்காக மணத்துறவு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இறந்த பின் கடவுள் என்று ஒருவரே இல்லையென்றால் 'ஐயயோ! நம்மள இவ்வளவு நாள் ஏமாத்தீட்டாங்களே!' என்று சொல்லவா முடியும்?

தொடக்கநூலின் இரண்டாம் படைப்பு வரலாற்றை வாசிக்கும் போது (2:4ஆ-25) அது முதல் படைப்பு வரலாற்றிலிருந்து (1:1-2:4அ) வித்தியாசமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முதல் வரலாற்றில் மனிதன் கடைசியாகப் படைக்கப்படுகின்றான். மனிதன் - மனிதை, ஆண் - பெண் என்ற பாகுபாடு அங்கு இல்லை. இரண்டாம் வரலாற்றில் மனிதன் முதலில் படைக்கப்படுகின்றான். அவனுக்குத் துணை ஏதும் கிடைக்காததால் பெண் படைக்கப்படுகின்றாள்.

'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று. அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்' - இதுதான் உறவின் மைய இறைவாக்கு.
'எல்லாவற்றையும் நல்லதெனக் கண்ட' கடவுள் மனிதனின் தனிமையை மட்டும் நல்லதல்ல என்று காண்கின்றார். ஆக நாம் தனிமை உணர்வுக்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். நாம் தனிமையாக இருக்கிறோம் என்று உணரும் போது அங்கே நம்மைப் படைத்த கடவுளே நமக்காகக் கண்ணீர் வடிக்கின்றார்.

உறவின் மூன்று நிலைகளாக நான் இந்தப் பகுதியில் பார்ப்பது என்ன?

அ. பெயரிடும் நிலை. ஆதாமைப் படைத்தவுடன் கடவுள் அவனிடம் தான் படைத்த அனைத்தையும் கூட்டிக் கொண்டு வருகின்றார். எதற்காக? அவன் என்ன பெயரிடுகிறான் என்று பார்ப்பதற்காக. நம் உறவுகள் தொடங்குவது ஒருவர் மற்றவரின் பெயரைக் கொண்டுதான். 'உங்க பேரு என்ன?' பெயரோடு சேர்ந்து அவரோடு நாம் கொள்ளும் உறவின் பெயரும் இணைந்து விடுகிறது. நீங்க எனக்கு அப்பா, நீங்க எனக்கு அம்மா, நீங்க எனக்கு அண்ணன், நீங்க எனக்கு அக்கா, நீங்க எனக்கு நண்பர், நீங்க எனக்கு மனைவி என்று ஆட்களின் பெயரோடு சேர்த்து நாம் உறவின் பெயரையும் கொடுத்து விடுகிறோம்.

ஆ. விலா எலும்பு. ஆதாமின் விலா எலும்பிலுருந்து அவனுக்காக துணையை உருவாக்குகிறார் கடவுள். இதனால் ஆண்களுக்கு விலா எலும்பு ஒன்று குறைவு என்று நாம் சொல்ல முடியாது. நம் உடலின் மிக மென்மையான உறுப்புகள் எல்லாம் மிகக் கடினமான ஒன்றால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆகையால் தான் மூளையைப் பாதுகாக்க மண்டை ஓடும், இதயத்தைப் பாதுகாக்க விலா எலும்பும் இருக்கின்றது. ஆக, ஆணின் இதயத்தைப் பாதுகாப்பவள் பெண். மேலும், இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் விலா எலும்பு போல அவனுக்கு நெருக்கமாக என்றும் இருக்கிறாள் பெண். மேலும் இதயத்தின் மென்மையும், எலும்பின் உறுதியும் ஒன்றையொன்று எதிர்ப்பவையாக இருந்தாலும், இரண்டு வித்தியாசங்களின் இணைவே உறவு என்பதும் இதில் தெளிவாகிறது. நம் எல்லா உறவுகளையும் நாம் விலா எலும்பு உறவாக நினைத்துக் கொள்வதில்லை. நாம் பெயரிடும் பல உறவுகளில் ஒரு உறவே நம் இதயத்தின் அருகில் வருகின்றது.

இ. ஒன்றித்திருக்கும் நிலை. ஒன்றோடு இணைய வேண்டும் என்றால் நாம் மற்றொன்டோடுள்ள இணைப்பை விடுக்க வேண்டும். மனைவியோடு இணைய கணவன் தன் தாய்-தந்தை உறவை விட வேண்டும் (காண் 2:24). அதாவது முழுமையான அர்ப்பணிப்பு. நம் உறவுகளில் விரிசல் வரக் காரணம் 'பார்ட்டைம் பிரன்ட்ஷிப்' என்ற மனநிலைதான். இதில் ஒன்றை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். பரிணாம வளர்ச்சியின் படி பார்க்கும் போது தொடக்கத்தில் குகையில் வசித்த பெண் தன் சிந்தனை முழுவதிலும் வேட்டைக்குப் போன தன் கணவனையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் சாப்பிட்டிருப்பானா? அவன் எங்கே இருப்பான்? மழை பெய்யுமா? அவன் நனைந்துவிடுவானா? என்று கேட்டுக் கொண்டும் சின்னச் சத்தம் வந்தாலும் 'அவன் வந்துவிட்டானா?' என்று குகையின் வாசலுக்கும் சென்று பார்ப்பாள். ஆனால், வேட்டைக்குச் சென்ற ஆண்களுக்கு தாங்கள் செய்யும் பல செயல்களில் ஒன்றுதான் அன்பு செய்வது. அதாவது வேட்டையாடுவது, மீன் பிடிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, நண்பரைப் பார்ப்பது, வில்லைச் சரி செய்வது என்று பல ஆக்டிவிட்டிஸ் இருப்பது போல தன் பெண்ணும் ஒரு ஆக்டிவிட்டி.

சுருக்கமாகச் சொன்னால், ஆணின் மூளை ரயில் போல. ஒரு கம்பார்ட்மெண்ட் கழன்றாலும் அவன் போய்க்கொண்டே இருப்பான். பெண்ணின் மூளை ஏரோபிளேன் போல. (உறவில்) சின்ன விரிசல் விழுந்தாலும் சுக்குநூறாகி விடுவாள்.

நம் உடலின் ஹார்மோன்களின் வேகத்தையும் தாண்டிய, நாம் பெயரிட முடியாத, விலா எலும்பை விட நெருக்கமான உறவுகளும் நமக்கு இருக்கத்தான் செய்கின்றன.

மனிதப் படைப்பைப் போலவே அன்பும் இன்றும் என்றும் ஒரு மறைபொருளே!


Tuesday, October 14, 2014

முதல் படைப்பு வரலாறும், மனித வாழ்க்கை நிலைகளும்!

உலகம் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு காலங்காலமாக அறிவியலும், மதமும் தத்தம் முறைப்படி கற்றுக்கொடுத்துக் கொண்டே வருகின்றன. இரண்டு பதில்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது போலவே, இரண்டுமே நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியாதவைகளாகவே இருக்கின்றன. மேலும் முதல் ஏற்பாட்டு நூலின் தொடக்கத்தில் நாம் வாசிக்கும் உலகம் உருவான 'கதையை' வாசித்தால் அங்கே இரண்டு வகையான கதைகள் பின்னிக் கிடக்கின்றன (காண். 1:1-2:4அ மற்றும் 2:4அ-24). முதல் ஏற்பாட்டு உலகம் உருவான கதைகள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அக்காடிய, சுமேரிய கதைகளின் தொகுப்பே ஆகும் என்பது பலருடைய கருத்து. ஆகையால் இன்று விவிலிய ஆய்வாளர்கள் இந்தப் பகுதியைப் பற்றி எழுதும்போது, 'தொடக்கநூலின் முதல் பிரிவுகள் உலகம் எப்படி உருவானது என்று சொல்வதற்குப் பதிலாக, எதற்காக உருவானது என்று சொல்வதற்கே எழுதப்பட்டவை' என்று முடித்துவிடுகின்றனர்.

எனக்கு 11ஆம் வகுப்பில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த திரு. லூர்து சமுத்திரம் என்னும் ஆங்கில ஆசிரியர் நினைவிற்கு வந்தார். அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வரும்: ஒன்று, அவர் ஓட்டி வரும் 'லூனா' பைக். இந்த பைக்கை வைத்து அவருக்கு 'லூனா' சமுத்திரம் என்ற அடைமொழியும் உண்டு. பெயர் தான் சமுத்திரம். ஆனால் அவரிடம் ஒரு ஆழ்ந்த அமைதியை உணர முடியும். மிக மிக எளிய மனிதர். எளிமை என்றால் உடையிலும், தோரணையிலும் இருப்பதில்லை. எளியவர்க்கு இறங்கி வருதலில் தான் இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொன்னவர். இரண்டு, அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள். நான் ஷேக்ஸ்பியர் மேல் கொண்ட ஒருதலைக் காதலுக்குக் காரணமும் அவரே. முதல் வகுப்பில் ஷேக்ஸ்பியரின் 'ஆல் தெ வேர்ல்ட் இஸ் எ ஸ்டேஜ்' (அஸ் யூ லைக் இட்) என்ற பாடலை நாடகமாக நடத்திக் காட்டினார். அதில் எனக்குக் குழந்தை வேஷம் கிடைத்தது.

சரி! இந்த சிங்காரமெல்லாம் எதுக்குனு கேட்குறீங்களா?

முதல் ஏற்பாட்டு உலகம் உருவான கதையின் ஏழு நாட்களை ஷேக்ஸ்பியர் சொல்லும் மனித வாழ்க்கையின் ஏழு கட்டங்களாக உருவகித்திப் பார்த்தால் எப்படி இருக்கும்?

ஷேக்ஸ்பியர் சொல்லும் ஏழு மனித வாழ்க்கை நிலைகள்:
1. குழந்தை.
2. பள்ளி மாணவர்
3. காதலர்.
4. போர்வீரர்.
5. நீதி கேட்பவர்.
6. வயது முதிர்ந்தவர்.
7. அனைவரையும் சார்ந்தவர்.

ஷேக்ஸ்பியர் ஏழு நிலைகளுக்கும் இந்தப் பெயரைக் குறிக்கவில்லை. இருந்தாலும் அவரின் பாடலை நன்கு வாசித்தால் இந்த ஏழு பேரில் இருக்கும் மனநிலையையே எழுதுகிறார்.

முதல் ஏற்பாட்டு முதல் உலகம் உருவான வரலாற்றில் ஏழு நாள்களில் கடவுள் உலகைப் படைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு வேலை.

நாள் 1: ஒளியையும் இருளையும் வௌ;வேறாகப் பிரித்தார்.
நாள் 2: கீழுள்ள நீரையும் மேலுள்ள நீரையும் பிரித்தார்.
நாள் 3: நீரையும் உலர்ந்த தரையையும் பிரித்தார்.
நாள் 4: ஒளிப்பிழம்புகளால் வானை அலங்கரித்தார்.
நாள் 5: நீர்வாழ் உயிரினங்களால் நீரை அலங்கரித்தார்.
நாள் 6: மனிதன் மற்றும் உயிரினங்களால் நிலத்தை அலங்கரித்தார்.
நாள் 7: கடவுள் ஓய்வெடுத்தார்.

முதல் ஆறுநாள் வேலையை 'பிரித்தல்,' 'அலங்கரித்தல்' என்று இரண்டு வார்த்தைகளாகச் சுருக்கி விடலாம். இந்த வரலாற்றை எழுதிய ஆசிரியர் மிகவும் இலக்கியநயத்தோடு இரண்டு பிரிவுகளாக எழுதியுள்ளது வியப்பாக இருக்கிறது.

சரி! இதற்கும் ஷேக்ஸ்பியருக்கும் என்ன தொடர்பு?

மனித வாழ்க்கையில் நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் 'பிரித்தல்' என்றும், நாம் ஏற்படுத்தும் அனைத்து உறவுகளையும் 'அலங்கரித்தல்' எனவும் சுருக்கி விடலாம். இல்லையா? பள்ளிக்குச் செல்லும் குழந்தை 'அறியாமையிலிருந்து' 'அறிவைப்' 'பிரித்தெடுக்கிறது'. திருமணம் முடிக்கும் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை ஒரு இளவலைக் கொண்டு 'அலங்கரித்துக்' கொள்கிறான்.

1. குழந்தை.
ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் வரை அது தாயின் வயிற்றின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. தாயின் உணவு, சுவாசம் அனைத்திலும் பங்கெடுக்கிறது. முதன் முதலாக தொப்புள் கொடி உறவு அறும் போதுதான் தன் வாழ்வின் முதல் பிரித்தலை உணர்கிறது. நாள் ஒன்றில் கடவுள் இருளிலிருந்து, ஒளியைப் பிரித்தது போல, தாயின் கருவறை என்ற இருளிலிருந்து உலகம் என்ற ஒளியைப் பிரித்துப் பார்க்கிறது. அன்றிலிருந்து அதன் பிரிக்கும் பணி தொடர்கிறது: அம்மா வேறு, நான் வேறு. அப்பா வேறு, அம்மா வேறு. நான் வேறு, அக்கா வேறு.

2. மாணவர்.
நாள் இரண்டில் கடவுள் நீரை மேல்-கீழ் எனப் பிரிக்கின்றார். பள்ளிப்பருவத்தில் நாம் செய்வதும் இதுதான். அது வேறு - இது வேறு, நல்லது வேறு - கெட்டது வேறு, இந்தியா வேறு - அமெரிக்கா வேறு, மரம் வேறு - நட்சத்திரம் வேறு என்று மேன்மையானவற்றிற்கும், கீழானவற்றிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்து கொள்கின்றோம்.

3. காதலர்.
நாள் மூன்றில் கடவுள் தண்ணீரையும், உலர்ந்த தரையையும் பிரிக்கின்றார். தண்ணீர் என்பது நாம் காட்டும் அன்பு. உலர்ந்த தரை என்பது நாம் உணரும் வெறுமை. இந்தப் பருவத்தில் தான் நாம் உலகின் உறவுகளை அனுபவிக்கத் தொடங்குகின்றோம். நம் வறண்ட மனத்திற்கு நீர் பாய்ச்ச நட்பையும், காதலையும் தேடுகிறோம். சிலர் அதிகம் தண்ணீர் வந்து மூழ்கிவிடுவதும் இங்கே தான். உலர்ந்து காய்ந்து போவதும் இங்கே தான்.

4. போர்வீரர்.
நாள் நான்கில் ஒளிப்பிழம்பால் வானை அலங்கரிக்கிறார் கடவுள். இந்தப் பருவத்தில் தான் நாம் நமக்கென்று ஒரு ஒளிப்பிழம்பை நாம் வாழ்க்கை என்னும் வானில் உருவாக்கி அதையே நம் பாதைகாட்டும் நட்சத்திரமாக வைத்து நம் பயணத்தைத் தொடங்குகிறோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் போரிட ஆரம்பிக்கிறோம் - சிலர் பணத்திற்காக, சிலர் பதவிக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பெயருக்காக. இங்கேதான் மனிதன் தன் தனித்தன்மையை, தான் படைக்கப்பட்ட நோக்கத்தை உணர்கிறான். இந்தப் பருவத்தில் அவன் அமைத்துக் கொள்ளும் பயணமே அவனின் முழு வாழ்க்கை நிலையையும் நிர்மாணிக்கிறது.

5. நீதி கேட்பவர்.
ஐந்தாம் நாளில் கடவுள் வானத்துப் பறவைகளையும் வானிலும், மீன்களைத் தண்ணீரிலும் அலங்கரிக்கின்றார். அதாவது எது எங்கே இருக்க வேண்டுமோ, அதை அங்கே வைப்பது. பச்சைக் கிளியைத் தண்ணீரிலும், அயிரை மீனை காற்றிலும் பறக்க விட்டால் எப்படி இருக்கும்? இரண்டுமே இறந்து போகும். மனிதன் இந்த ஐந்தாம் பருவத்தில் தான் 'உலகம் ஏன் இப்படி இருக்கிறது?' 'கடவுள் என்ன செய்கிறார்?' 'ஏன் சிலர் துன்புறுகிறார்கள்?' 'ஏன் சிலர் இன்புறுகிறார்கள்?' 'ஏன் ஏற்றத்தாழ்வு?' என்று தன் உடன் வாழும் மக்களைக் குனிந்து பார்க்கத் தொடங்குகிறான். 'எது எது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையே' என வருத்தம் அடைகிறான். பிறரன்பு, நீதிக்கான வேட்கை இங்கே தான் தொடங்குகிறது.

6. வயது முதிர்ந்தவர்.
கடவுள் ஆறாம் நாளில் காட்டுவிலங்குகளைப் படைத்ததோடல்லாமல், படைப்பின் சிகரமாக மனிதனைத் தன் உருவிலும், சாயலிலும் படைக்கின்றார். இந்தப் பருவத்தில் தான் மனிதன் கடலுளைத் தன் உருவிலும், சாயலிலும் படைக்கின்றான். இதுதான் கடவுள், இதுதான் வாழ்க்கை என்று கடவுளின் புதிரும், வாழ்வின் அர்த்தமும் நமக்குத் தெளிவாவது நம் வாழ்க்கையின் மாலைநேரத்தில் தான்.

7. அனைவரையும் சார்ந்தவர்.
ஏழாம் நாளில் 'வேலைகள் முடித்து' ஓய்வெடுக்கும் கடவுள் போல மனிதன் இந்தப் பருவத்தில் தன் வேலைகளையெல்லாம் முடித்து நிரந்தர ஓய்விற்குள் நுழைகிறான். அல்லது பிறரை மட்டுமே சார்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறான். இது ஒரு இரண்டாம் குழந்தைப் பருவம். தாயின் கருவறை என்ற இருளிலிருந்து வந்தவன் பூமித்தாயின் கல்லறை என்ற இருளுக்குள் தன்னையே கரைத்துக் கொள்கிறான். 'கடவுளின் ஓய்வு எப்போது முடிந்தது? அவர் எட்டாம் நாளுக்கு எழுந்தாரா?' என்ற கேள்விகளுக்கு விடை தொடக்க நூலில் இல்லை. அதுபோலவே, நம் இறப்பு என்னும் ஓய்வு எப்போது முடியும்? எட்டாம் நாள் என்னும் உயிர்ப்பு உண்டா? என்ற கேள்விகளுக்கும் விடை நம்மிடம் இல்லை.

ஸாரி...கடைசியில் ரொம்ப சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டேன்!

சரி...இந்த ஏழு பருவ வாழ்க்கைiயும் எப்படி வாழ்வது? அதற்கும் விடை இந்த இறைவாக்குப் பகுதியிலேயே இருக்கின்றது. ஒவ்வொரு நாளின் செயலுக்குப் பின்னும் 'கடவுள் நல்லதெனக் கண்டார்' என எழுதுகிறார் ஆசிரியர். நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் எப்படி இருந்தாலும் அதை 'நல்லதெனக் காணும்' கடவுளின் கண்கள் நமக்கு இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆறாம் நாளில் 'கடவுள் மிகவும் நல்லதெனக் காண்கிறார்'. ஒவ்வொரு நாளின் விடியலும் நம் வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு பக்கம் கடந்து போவதை நினைவுபடுத்துகிறது. வாழ்வின் மாலைப்பொழுது நெருங்கும் போது நாமும், 'அனைத்தையும் மிகவும் நல்லதெனக் கண்டேன்!' எனச் சொல்லலாமே!

இந்த நாள் இனிய நாள்!


Sunday, October 12, 2014

ஒரு இறையியில் நிகழ்வு போல

ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது.
ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது.
இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்.
ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்.
ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை.
(மத்தேயு 2:17-18)

மத்தேயு மாசில்லாக் குழந்தைகள் படுகொலையின் போது குறிப்பிடும் இந்த இறைவாக்கு எரேமியா 31:15லிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த இறைவாக்கின் பின்புலத்தைப் பார்க்க தொநூ 35:16-19க்குச் செல்ல வேண்டும். இராகேல் பென்யமினின் பிறப்பின் போது இறந்து போகின்றார். பென்யமின் என்பவர் தான் யாக்கோபின் கடைசி, அதாவது, பன்னிரண்டாவது குழந்தை.

தாய் இறந்த ஒரு நிகழ்வை குழந்தைகள் இறந்த நிகழ்வுக்கு ஏன் மத்தேயு ஒப்பிடுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது.

இயேசுவின் வியத்தகு பிறப்பை எழுதுவதற்கே மத்தேயு இந்த நிகழ்வை எழுதுகிறார். மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

இப்படியாக மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் பிறப்பை வரலாற்று நிகழ்வைப் போல அல்லாமல், ஒரு இறையியில் நிகழ்வு போலப் பதிவு செய்கிறார்கள்.


ஞானியர் தரும் பாடங்கள்

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை எழுதும்போது லூக்கா நற்செய்தியில் இல்லாத இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார்: ஒன்று, மூன்று ஞானியர்களின் வருகை, இரண்டு, குழந்தைகள் படுகொலை செய்யப்படுதல். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம் பெறுபவர் ஆளுநர் ஏரோது.

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்ததுண்டு. எதற்காக ஞானியர் தங்கள் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குழந்தையைப் பார்க்க வரவேண்டும்?

மத்தேயு இயேசுவை புதிய இஸ்ராயேலாக முன்வைக்க விரும்புகின்றார். பழைய இஸ்ராயேல் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்ததால் கடவுளின் இனமாக உயிர் பெற்றது. ஆக, இயேசுவையும் எகிப்துக்கு அனுப்பி அங்கிருந்து திரும்பி வரச் செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான், 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன்' (ஓசேயா 11:1) என்ற இறைவாக்கு இயேசுவில் நிறைவேறும். இந்த நிகழ்வை எழுதுவதற்காக அவர் கையில் எடுக்கும் பாடமே ஞானியர் வருகையும், குழந்தையர் கொல்லப்படுதலும்.
ஞானியர் வருகையை இன்று நான் வாசித்தபோது என்னில் இரண்டு எண்ணங்கள் உருவாயின.

ஒன்று, நம்ம வாழ்க்கையில எல்லாமே காரணத்தோடு தான் இருக்கனும்னு நினைக்கிறோம். அதாவது, நம்மகிட்ட யாராவது 'யோகா செய்யுங்களேன்!' அப்படின்னு சொன்னா, நம்ம உடனே என்ன கேட்போம், 'அதனால என்ன பயன்?' எல்லாவற்றையும் பயன்பாட்டு அடிப்படையில் தான் பார்க்கின்றோம். ஏன் யோகா செய்வதற்காக செய்யலாமே. நாம் நடப்பது, நிற்பது, ஓடுவது, படிப்பது, பார்ப்பது என அனைத்திற்கும் காரணம் தேடுகிறோம். இந்தக் காரணங்கள் நாம் கோயிலுக்குப் போவது, வேலைக்குப் போவது, உறவாடுவது என அனைத்தையும் பாதிக்கவே செய்கிறது. என்கிட்ட நிறைய பேர் கேட்டதுண்டு: 'ஏன் நீங்க ஃபாதர் ஆனீங்க?' நான் அப்படிக் கேட்டவர்களிடமெல்லாம், 'நீங்க ஏன் கல்யாணம் முடிச்சீங்க?' என்றும கேட்டிருக்கிறேன். அவர்கள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு எதாவது காரணம் சொல்வார்கள். ஏன் கல்யாணம் முடிக்க வேண்டும் என்பதற்காக முடிக்கலாமே, ஃபாதர் ஆக வேண்டும் என்பதற்காக ஆகலாமே.

ஒரு பச்சிளம் குழந்தையைப் பார்க்க தங்கள் வேலைகளையெல்லாம் போட்டுவிட்டு ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி வருகிறார்கள் ஞானியர். அந்தக் குழந்தையைப் பார்த்ததால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? ஒன்றும் இல்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு நேர, ஆற்றல், பொருள் விரயம் தான். ஆனால் அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரியும் குழந்தையைத் தேடி வந்ததால் தங்களுக்கு எதுவும் கிடைக்காது என. குழந்தையைக் காண வந்தவர்கள் மோட்சத்துக்கப் போனார்களா, அல்லது நரகத்துக்குப் போனார்களா என்று கூட மத்தேயு எழுதவில்லை. ஆக, நாம் செய்யும் எல்லாவற்றிலும் காரணம் இருந்தால் அல்லது பலன் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. அவைகள் இல்லாமலும் செய்யலாம்.

இன்னைக்குக் காரணம் இல்லாமல் ஏதாவது ஒன்று செய்து பார்க்க முயற்சி செய்யலாமே!

இரண்டு, குழந்தை இயேசுவுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய வணக்கம் அவர்கள் கொண்டு வந்த பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப்போளத்தையும் அளித்தது அல்ல. மாறாக, ஏரோதுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததே. உண்மையைக் கண்டவர்கள் பொய்மைக்கு முன் மண்டியிட முடியாது. கூடாது. ஒளியைக் கண்டவர்கள் பின் மறுபடி இருளைத் தேடிச் செல்லக் கூடாது. வாழ்வைக் கண்டவர்கள் இறப்பின் காரணியைத் தன் வசம் வைத்திருக்கக் கூடாது.

நம்மை ஞானியர் ஆக்க இந்த ஞானியர் தரும் இரண்டு பாடங்களே இவை!


Saturday, October 11, 2014

மரியாவின் பாடலும் கடைசி செய்தித்தாளும்

இன்று மரியாவின் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கல்லூரி புறப்பட்டுச் சென்றேன். போகும் வழியில் வழக்கமாக செய்தித்தாள் வாங்கும் கடைக்குச் சென்றேன். கடை ஏறக்குறைய வெறிச்சோடி இருந்தது. நேற்றைய தினம் குவிந்து கிடந்த புத்தகங்கள் இன்று இல்லை. ரொம்ப நாளா காலி பண்ணப் போறேன்னு சொன்னவர் இன்று உண்மையாகவே காலி பண்ணிவிட்டார். என்னைப் பார்த்தவுடன் புன்முறுவல் பூத்துக் கொண்டே 'இதுதான் கடைசி செய்தித்தாள்!' என்றார். அந்தப் புன்முறுவலின் பின்னால் ஒரு வலி இருந்தது. 18 ஆண்டுகளாக இந்த இடத்தில் கடை வைத்திருந்தவர் இன்று வாடகை கட்ட முடியாமல் காலி செய்வதாகச் சொன்னார். 'இனி என்ன செய்வேன்னு தெரியல!' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. 'நான் அப்புறம் வருகிறேன்!' என்று சொல்லிவிட்டு வெளியேறினேன். அவருக்குத் தெரியும் நான் திரும்பி வருவதற்குள் போய்விடுவார் என்று.

இரண்டரை ஆண்டுகள் தினமும் பார்த்த பல முகங்களில் அவர் முகமும் ஒன்று.

மனித முகங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் போதே சும்மாயிருப்பதில்லை. ஒன்றும் பேசவில்லையென்றாலும் அங்கே ஒரு தகவல் பரிமாற்றம் நடந்துவிடுகிறது. மனித முகம் ஒருவர் மற்றவரைப் பார்த்து 'என்னைப் பிடித்திருக்கிறதா?' 'நான் அழகாக இருக்கிறேனே!' என்று கேட்காமல் கேட்கிறது.

முகங்கள் ஒன்றையொன்று பார்க்கும் போது சில நேரங்களில் உள்ளம் துள்ளிக் குதிக்கின்றது. சில நேரங்களில் உள்ளம் வாடிப்போய்விடுகின்றது. 'உனக்காக எதையும் செய்வேன்!' என்று சொல்லத் தோன்றுகிறது. அல்லது 'ஐயோ! என்னால ஒன்னும் செய்ய முடியலையே!' என்று துவண்டு விடுகிறது.

மரியாளும் எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வை அழகிய பாடலாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. இந்திய மொழித் திரைப்படங்களில் உள்ளத்தின் மகிழ்ச்சியை, சோகத்தை, இழப்பை வெளிப்படுத்த பாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அதுபோலத்தான் நற்செய்தியாளர் லூக்காவும். இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் மூன்று பாடல்களை இணைக்கின்றார்: மரியாளின் பாடல் (1:47-55), சக்கரியாவின் பாடல் (1:68-79) மற்றும் சிமியோனின் பாடல் (2:29-32).

மரியாளின் பாடல் (1:47-55) முதல் ஏற்பாட்டில் வரும் அன்னாவின் பாடலின் (1 சாமுவேல் 2:1-10) திருத்திய பதிப்பு என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல், தன் சக்களத்தி பெனின்னா தன்னை ஏளனம் செய்ய, தன் கணவரும் தன்னை அடிக்கடி குத்திக் காட்ட, இறைவனின் முன்னிலையில் அழுது புலம்பி, சாமுவேலை குழந்தையாகப் பெற்றெடுக்கின்றார் அன்னா. தவமாய்த் தவமிருந்து பெற்ற குழந்தையைக் கடவுளின் ஆலயத்தில் அர்ப்பணித்துவிட்டு பாடும் பாடலே 'அன்னாவின் பாடல்'. மரியாளின் பாடலின் சூழல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

லூக்கா நற்செய்தியாளர் முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலை நன்கு அறிந்தவராக இருந்திருப்பார். அல்லது தான் யாருக்கு எழுதுகிறோமோ அவர்களுக்கு அந்தப் பாடல் நன்றாகத் தெரியும் என்ற பிண்ணனியில் எழுதியிருப்பார்.

இரண்டு பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

அ. ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது (லூக் 1:47) // ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் ... (1 சாமு 2:1)
ஆ. எனது மீட்பராம்...பேருவகை கொள்கின்றது (1:47) // நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன் (2:1)
இ. தூயவர் என்பது அவரது பெயர் (1:49) // ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர் (2:2)
ஈ. வலியோரை அரியணையிலிருந்து... (1:52) // வலியோரின் வில்கள்... (2:4)
உ. பசித்தோரை நலன்களால்... (1:53) // பசியுடன் இருந்தோர்... (2:5)

இரண்டு பாடல்களுக்கும் உள்ள வேற்றுமைகள் எவை?
அ. அன்னாவின் பாடல் அரசரை வாழ்த்துவதாக முடிகிறது (2:10) x மரியாவின் பாடல் ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நினைவுகூறுவதாக முடிகிறது (1:54).
ஆ. அன்னா கடவுளின் வல்லமையை நினைத்துப் பாடுகிறார் (2:4-7,9,10) x மரியாள் கடவுளின் இரக்கத்தை நினைத்துப் பாடுகிறார் (1:50,53-55).

மரியாவின் பாடல் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஆன்மீகப்பாடலாகத் தெரிகிறது. ஆனால் அதை ஆழ்ந்து பார்க்கும் போது மெசியாவின் வருகையின்போது வரும் பொருளாதார, சமூக, கலாச்சார 'தலைகீழ்' மாற்றத்தின் இறைவாக்காகத் தெரிகிறது.

எலிசபெத்தின் முகத்தைப் பார்த்தவுடன் மரியாளின் முகம் பாடுகிறது.

இன்று நாம் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்க்கும் போது நம் மனம் பாடுகிறதா? அல்லது வாடுகிறதா?

நான் காலையில் பார்த்த கடைசி செய்தித்தாள் நபரை மீண்டும் பார்த்தால் அவரிடம் நான் என்ன சொல்வேன்?


Thursday, October 9, 2014

கனவில் வானதூதர் வருவது!

மத்தேயு இயேசு பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகளை வேறுமாதிரி எழுதுகின்றார். 'கனவில்  வானதூதர் வருவது' தான் மத்தேயுவின் எழுத்து நடை. 'கனவில் வழி கிடைப்பது' என்ற இலக்கிய நடை தொடக்கநூலின் சில பகுதிகளிலும், தானியேல் நூலிலும் அதிகமாக இருக்கிறது.

லூக்கா நற்செய்தியாளர் மரியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, மத்தேயு நற்செய்தியாளர் யோசேப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். யூத சமுதாயம் ஒரு தந்தைவழி சமூகம். ஆகவே, யூத மக்களுக்கு என தன் நற்செய்தியை எழுதும் மத்தேயு இயேசுவின் பிறப்பை தந்தை வழியாகவே அறிமுகம் செய்கிறார்.

நாம் கிறிஸ்து பிறப்பின் போது கொண்டாடும் நட்சத்திரங்கள், வானதூதர்கள், குடில்கள், குகை, மாடு, கழுதை, சத்திரம், மூன்று ஞானியர் அனைத்தும் கொண்டாட்டதிற்குள் வர தூய பிரான்சிஸ் அசிசியே காரணம். சாந்தா கிளாஸ் உருவாகக் காரணமாக இருந்தவர் நிக்கோலாஸ் என்ற மிலன் நகர ஆயர்.

மேலும் கிறிஸ்து பிறப்பை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுவதிலும் சிக்கல் இருக்கிறது. பண்டைக்கால ரோமையர் சூரியக் கடவுளுக்கு டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் விழா எடுத்தனர். மேற்கத்திய நாடுகளில் சூரியன் மிக கொஞ்ச நேரம் மட்டும் காட்சி தரும் டிசம்பர் மாதத்தில் சூரியக் கடவுளுக்கு விழா எடுப்பதும் நாம் ஆராய வேண்டிய ஒன்று.

இன்று நாம் கொண்டாடும் அனைத்துக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், வரலாற்றில் வௌ;வேறு நாடுகளில், வௌ;வேறு நேரங்களில் தோன்றி ஒருங்கிணைக்கப்பட்டவையே.

இதை ஆங்கிலத்தில் 'லிமினாலிட்டி' என்பார்கள். அதாவது எது எங்கிருந்து வந்தது தெரியாமலேயே, எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாகி விடுவது. பிட்சா, பிட்சா என்கிறோம். இத்தாலி நாட்டின் நாப்போலி நகரில் பிட்சா பிறந்தாலும் இன்று உலகமெங்கும் அந்தந்த இடத்திற்கு சொந்தமாகிப் போனது 'லிமினாலிட்டி'யின் ஒரு உதாரணம்.

Wednesday, October 8, 2014

முன்னறிவிப்பு என்னும் 'டைப்-ஸீன்'

இயேசுவை மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும் பலவற்றில் ஒன்று அவரது பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது என்பதே. இயேசுவின் பிறப்பை போலவே திருமுழுக்கு யோவானின் பிறப்பும் முன்னறிவிக்கப்பட்டதாக லூக்கா எழுதுகின்றார். மேலும், யாக்கோபின் நற்செய்தி எனப்படும் 'ஏற்றுக்கொள்ளப்படாத' நற்செய்தியில் மரியாவின் பிறப்பும் முன்னறிவிக்கப்படுவதாக எழுதப்பட்டுள்ளது.

'முன்னறிவித்தல்' என்பது ஒரு 'டைப்-ஸீன்'. டைப்-ஸீன் என்றால் என்ன? டைப்-ஸீன் என்பது ஒரு இலக்கிய நடை. ஒரு மாபெரும் மனிதரின் பிறப்பைச் சித்தரிக்க வேண்டுமானால் இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இருந்தது. அதாவது, ஒரு நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். விடுவிப்பவர் எப்படி ஸீனுக்குள் வருவார்? ஒரு தம்பதியினருக்கு நெடுநாள் குழந்தையில்லாமல் இருக்கும். அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல்நிலை இல்லாமல் இருக்கும். ஒரு தூதர் குழந்தை பிறக்கும் என்ற செய்தியைக் கொண்டு வருவார். 'இது எப்படி?' என்று அந்த நபர் கேட்பார். பின் தூதர் ஒரு அறிகுறி காட்டுவார். தொடர்ந்து குழந்தை பிறக்கும் நிகழ்வு நடைபெறும்.

இது நம்ம பாலசந்தர் சார் படம் போலத்தான். இரண்டு - மூன்று படங்கள் பார்த்தால் போதும், அதிலிருந்து அவரின் எண்ண ஓட்டத்தைக் கண்டுபிடித்து மற்ற படங்களின் முடிவை நாமே சொல்லிவிடலாம்.

விவிலியத்தில் உள்ள டைப்-ஸீன்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆல்டர் என்ற இலக்கிய ஆய்வாளரே.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பும் (லூக்கா 1:5-25), இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பும் (1:26-38) லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகிறது. நற்செய்தியாளர்கள் தங்களின் விவிலியத்தில், அதாவது நமது பழைய ஏற்பாட்டில், புலமை பெற்றவர்களாக இருந்தனர். பழைய ஏற்பாட்டின் கதைமாந்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்து, புதிய ஏற்பாட்டு இயேசுவோடு இணைக்கின்றனர். இவ்வாறாக, முதல் ஏற்பாட்டிற்கும், இரண்டாம் ஏற்பாட்டிற்கும் ஒரு பாலத்தை அமைத்துவிடுகின்றனர்.

லூக்கா எழுதும் முன்னறிவிப்பு 'கதைகள்' முதல் ஏற்பாட்டு சிம்சோனின் பிறப்பு (நீதித்தலைவர்கள் 13) முன்னறிவிப்பைத் தழுவி எழுதப்பட்டவை.

இந்த மூன்று முன்னறிவிப்புக்களிலும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை?

அ. மனோவா-மனைவி, சக்கரியா-எலிசபெத்து தம்பதியினர் வயது முதிர்ந்தவர்கள். மனைவியர் கருவுற இயலாதவர்கள். மரியா ஒரு கன்னி. கணவனை அறியாதவர். ஆகையால் அவரும் கருவுற இயலாதவர்.

ஆ. மனோவாவின் மனைவியைச் சந்திக்க ஒரு தூதர் வருகிறார். மரியாவைச் சந்திக்க கபிரியேல் தூதர் வருகிறார். ஆனால் எலிசபெத்திடம் வருவதற்குப் பதில் தூதர் சக்கரியாவிடம் வருகிறார்.

இ. தூதர் வரும் இடம் முதலில் வயல்வெளி, இரண்டாவது நாசரேத்தூரில் உள்ள வீடு, மூன்றாவது எருசலேம் ஆலயம்.

ஈ. மூன்று பேருக்குமே குழந்தை பிறக்கும் என்ற வாக்குறுதி தரப்படுகின்றது.

உ. மூன்று பேருக்குமே குழந்தை 'நாசீர்'-ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது, கத்தி தலையில் படக்கூடாது. ஒயின் குடிக்கக் கூடாது. ஆனால் இயேசுவுக்கு சொல்லப்படவில்லையென்றாலும் அவரை 'நசரேன்' - அதாவது, நாசரேத்து ஊhரார் என்று சொல்லப்படுகிறது. இயேசுவை எல்லா ஓவியங்களிலும் நீண்ட முடியோடு சித்தரிக்கக் காரணமும் இதுவே.

ஊ. மூன்று பேருமே 'இது எப்படி?' என்று கேட்கின்றனர். பெண்கள் இருவருக்கும் அப்படிக் கேட்டதற்கு தண்டனை எதுவும் இல்லை. ஆனால் பாவம் சக்கரியா தான் தண்டிக்கப்படுகிறார். ஊமையாக மாற்றப்படுகிறார். (பாருங்களேன்! இந்த தூதர்கள் பெண்கள் கேள்வி கேட்டால் மட்டால் ஒன்றும் செய்வதில்லை. இந்த விஷயத்தில் எனக்கு என்றும் சக்கரியா மேல் அனுதாபம் உண்டு. அவரின் கேள்வியும், மரியாவின் கேள்வியும் ஒன்றுதான். ஆனால் தண்டனை மட்டும் மரியாவுக்கு. ஏன் மரியாவை ஊமையாக்க நற்செய்தியாளர் மறுக்கிறார் என்றால், தொடர்ந்து எலிசபெத்தம்மாளின் வீட்டில் மரியா 'என் ஆன்மா ஆண்டவரை' என்ற பாடல் பாட வேண்டுமே. அதற்காகத்தான். லூக்கா மிக நுணுக்கமாக நிகழ்வுகளைக் கோர்க்கின்றார்).

எ. தூதர்கள் சொன்னது போலவே குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஆக, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் முதல் ஏற்பாட்டு சிம்சோனின் கதையைத் தழுவி எழுதப்பட்டவை.

சிம்சோன் என்றால் சூரியன். இயேசுவை சக்கரியா தனது பாடலில் இளஞாயிறு என்று வர்ணிப்பதும், இயேசுவை புதிய ஏற்பாட்டு சிம்சோனாக முன்மொழிய காரணமாகிறது.

லூக்கா முன்னறிவிப்பு நிகழ்வுகளை இலக்கிய நடையான முதல் ஏற்பாட்டு 'டைப்-ஸீனை' வைத்து எழுதுகிறார்.

அப்படின்னா விவிலியத்தில் சொல்லப்பட்டது போல இயேசு பிறக்கவில்லையா?

பின் எப்படி நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம்?

மத்தேயு ஏன் வேறு மாதிரி எழுதுகின்றார்?

நாளை பார்க்கலாம்.