பின்பு, அவர்களில் (யோசேப்பின் சகோதரர்கள்) ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் கோணியைத் திறக்கவே, அதன் வாயில் தன் பணம் இருக்கக் கண்டான். அவன் தன் சகோதரரை நோக்கி, 'என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது. இதோ என் கோணியில் இருக்கிறது' என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், 'கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?' என்றனர். (தொடக்கநூல் 42:27-28)
'கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?'
கடவுள் தோன்றிய வரலாறு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. 'கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தாரோ இல்லையோ, ஆனால் மனிதன் கடவுளைத் தன் சாயலாக அன்றாடம் படைத்துக் கொண்டேதான் இருக்கிறான்.'
நீதித்தலைவர்கள் நூலில் அழகான ஒரு பகுதி உண்டு. தான் என்ற இனம் தன் இனத்திற்குத் திருமணத்திற்குப் பெண்கள் இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் (நீத 21). அதற்குக் காரணம் அவர்களே தான். போரில் அனைவரும் இறந்துவிட அவர்களின் குழுமத்தில் பெண்களே இல்லாமல் போய்விடும். அப்போது அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்பார்கள்: 'கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?'
நாமும் இதே கேள்வியைப் பல சூழ்நிலைகளில் கேட்டிருப்போம். 'ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?' 'ஏன் கடவுள் என்னைச் சோதிக்கிறார்?'
இந்த நாட்களில் 'Case For God' (Karen Armstrong) என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு ஆண்டாக கடவுள் நம்பிக்கைக்கு எதிரான புத்தகங்களையே படித்து கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகம் சற்று வித்தியாசமாக இருக்கிறது.
30,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதர்களை 'homo religios' என்று அழைக்கின்ற ஆசிரியர் கடவுள் வளர்ந்த வரலாற்றை மிக அழகாக எழுதுகின்றார். கடவுள் நம்பிக்கை என்பது தானாக வருவது அல்ல. அது ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டியது. நாம் அறிவியலையும், கணிதத்தையும், ஓவியத்தையும் படிப்பது போல கடவுளையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கதவு செய்யும் தச்சர் எவ்வளவுதான் தன் திறமையைப் பயன்படுத்தி, நல்ல கருவிகளைப் பயன்படுத்தி ஒரு கதவைச் செய்ய முயன்றாலும், அவரின் திறமையையும் தாண்டி ஏதோ ஒன்றுதான் அந்த வேலையைச் செய்கிறது. அந்த ஏதோ ஒன்றுதான் 'கடவுள்'.
கடவுள் நம்மை இயக்குகிறார் என்றால் நாம் என்ன வெறும் பொம்மைகளா? நமக்கு ஏன் சுதந்திரம்? என்றெல்லாம் எதிர் கேள்விகளை எழுப்பலாம்.
ஏன்? என்ற கேள்விகளுக்குப் பல நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைப்பதில்லை.
இந்த நிகழ்வில் அனைத்தையும் செய்தது இந்தச் சகோதரர்கள். அப்போதெல்லாம் கடவுளைப் பற்றிய எண்ணம் அவர்களுக்கு இல்லை. தனக்கு நிலைகுலையும் போதுதான் கடவுள் நினைவிற்கு வருகின்றார்.
இவர்களின் இந்தக் கேள்விக்கு இவர்களுக்குப் பதில் சீக்கிரம் தெரியும்.
கடவுள் இருக்காரா? இல்லையா?
சின்னச் சின்ன நிகழ்வுகளில்,
சின்னச் சின்ன சிரிப்புக்களில்,
சின்னச் சின்ன தூரல்களில்,
கடவுள் இருக்கிறார்...
அவரைத் தேடுவோம்...எப்போதும்....
அவசரத்தின்போது மட்டுமல்ல!
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதே நந்தலாலா'
'கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?'
என்ன கண்ணா,இன்று உங்கள் approachல் ஏதோ மாற்றம் தெரிகிறது!.ஆம் எங்கும் நிறைந்த இறைவனை நாம் தான் தேடிப்போக வேண்டும் என்பதை சொல்லியிருக்கும விதம் அழகு கருமை நிறக்கண்ணாவைத் தேடிப்பிடிததுப் போட்ட உஙகளுக்கு ஓர்ஷொட்டு.
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteநான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி ஐயா!
www.eppoluthu.blogspot.in