Sunday, October 13, 2013

நான் சென்று அழைத்து வரட்டுமா?


அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவளர் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள். அதைத் திறந்த போது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள். அது அழுதுகொண்டிருந்தது. அதன்மேல் அவள் இரக்கம் கொண்டாள். 'இது எபிரேயக் குழந்தைககளுள் ஒன்று' என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, 'உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?' என்று கேட்டாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, 'சரி, சென்று வா' என்றாள். (விடுதலைப்பயணம் 2:5-7)

'நான் சென்று அழைத்து வரட்டுமா?'

எபிரேயக் குழந்தைகளின் பிறப்பைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கின்ற எகிப்தின் பாரவோன் 'பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழ விடுங்கள்' என்று அறிவிக்கின்றான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நான் சில அருட்பணியாளர்களோடு இணைந்து புனித நாட்டிற்குச் சென்றேன். முதல் நாள் நாங்கள் தங்கியது நைல் நதியின் கரையோரத்தில். இரவு உணவு நைல் நதியில் மிதந்து கொண்டே செல்லும் ஒரு படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைய மதுபானங்கள், பெல்லி டான்ஸ், மியூசிக் என படகில் ஓடிக்கொண்டிருக்க நானும் மற்ற இரண்டு தந்தையர்களும் படகின் மேல்தளத்திற்குச் சென்றோம். படகிலிருந்து ஒரு தூரத்து இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே 'மோசேயின் பேழை' என்று மூங்கில் பேழை நாணல்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்தது. 'இப்படித்தான் மோசே காப்பாற்றப்பட்டார்!' என்றார் அவர். அருகிலிருந்தவர் சொன்னார், 'மோசே காப்பாற்றப்பட்டார். ஆனால் நிறையக் குழந்தைகள் நைல் நதியில் எறியப்பட்டனவே. அவர்களைக் கடவுள் காப்பாற்றவில்லையா?'

தண்ணீர் உயிர் வாங்கும் இடமாகவே பண்டைக்காலம் தொட்டு இருக்கின்றது. உலகின் மிகப்பெரிய நாகரீகங்கள் நதியின் படுகைகளில்தான் தோன்றின என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உலகின் மிகப்பெரிய அழிவுகள் நதிகளில்தான் நடந்திருக்கின்றன என்பதும் உண்மை. வாழ்வில் தாங்கள் சந்திப்பதெல்லாம் தோல்வி என நினைத்து எத்தனைபேர் தங்கள் உயிரைத் தண்ணீரில் மாய்த்துக்கொள்கின்றனர். சில நேரங்களில் விளையாட்டெனப் போய் விபரீதமாய் விளைவுகளை ஏற்படுத்தும் இடமாகவும் தண்ணீர் மாறிவிடுகின்றது.

மோசே காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்திருந்தன? இவ்வளவு பெரிய தீங்கைச் சந்திக்க வேண்டுமா அவர்கள்? 'பிறந்தது அவர்கள் குற்றமா?' வரலாற்றில் இனக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் இதே கேள்விதான் எழுகிறது: 'ஹிட்லரின் காலத்தில் யூதராய்ப் பிறந்தது யார் குற்றம்?' கடவுளர்களின் மௌனம் இந்த இடத்தில் புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. 'எத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் ஒரு கடவுளுக்குக் கூட காப்பாற்ற மனம் வரவில்லை?'

பல குழந்தைகள் இறக்கின்றனர். மோசே மட்டும் காப்பாற்றப்படுகின்றார். இந்த இரண்டு வாக்கியங்களையும் வாசித்தவுடன் நம் மனம் நம்மையறியாமல் பெத்லகேமில் நடந்த இயேசுவின் பிறப்பை நினைத்துப் பார்க்கின்றது. இயேசுவின் காலத்திலும் ஏறக்குறைய இதே நிகழ்வுதான். அங்கே பாரவோன். இங்கே ஏரோது. அங்கே நைல் நதி. இங்கே வாள்முனை. அங்கே மோசே. இங்கு இயேசு. இயேசு பிறந்தபோது அவரின் சமகாலத்துக் குழந்தைகள் ஏரோது அரசனால் கொலை செய்யப்பட்டனரா? இல்லையா? வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை. இந்த நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே எழுதுகின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் குறிப்பாக இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை விரிவாக எழுதுகின்ற லூக்கா நற்செய்தியாளர்கூட இந்நிகழ்வு குறித்து மௌனம் சாதிக்கின்றார். இது வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை விட இறையியல் நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். இயேசுவைப் புதிய மோசேயாக முன்வைக்க விழைகின்ற மத்தேயு நற்செய்தியாளர் பிறப்பிலும் இயேசு மோசேயைப்போல இருந்தார் என்பதைப் பதிவு செய்ய முனைகின்றார்.

மோசேயின் பிறப்பு ஒரு புரட்டிப்போடுதலைக் காட்டுகிறது. எந்தப் பாரவோன் எபிரேயர்களை ஒடுக்க நினைத்தானோ, அந்தப் பாரவோனின் மகளே அவர்களின் தலைவனைத் தன் வீட்டிற்குள் எடுத்து வளர்க்கின்றாள். 'அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்' என்ற வாக்கியம் அவளின் இளகிய மனத்தைக் காட்டுகிறது. தன் தந்தை கொடுங்கோலனாய் இருந்தாலும் மகள் என்னவோ பாசக்காரியாய் நிற்கின்றாள். எந்தவொரு குழந்தையைப் பார்த்தாலும் பெண்கள் தாய்மார்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்றும் நாம் காணும் உண்மை. பெண்மை என்றால் தாய்மை என்பதுதான் பெண்மைக்கான முழுமையான அர்த்தமாகும். 

மோசேயின் இரண்டாவது தாய் அவரின் சகோதரி. ஒரு வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதற்குப் பின் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் அவ்வீட்டில் இரண்டு தாய்மார்கள் என்பார்கள். ஆம். அம்மா ஒரு தாய். அக்கா இரண்டாவது தாய். ஆனால் முதலில் ஆண் குழந்தை பிறந்தால் அவனால் அண்ணனாய் மட்டும்தான் இருக்க முடியும். ஒவ்வொரு அக்காவும் இரண்டாம் தாய் என்பதை மோசேயின் அக்காவின் செயல் காட்டுகிறது. அந்தப் பெண்ணிற்கு எத்;தனை வயது இருந்திருக்கும்? நைல் நதியின் ஓரத்தில் நாணல் அரிக்க, கால் கடுக்க, சகதியில் கால் பதித்து, பேழையில் கண் பதித்து எவ்வளவு நேரம், எவ்வளவு நாள் அவள் நின்றிருந்திருப்பாள்? அக்காவின் தியாகம், அரசியின் இரக்கம் மோசேக்கு வாழ்வாக மாறுகிறது. 

தன் சொந்தத் தாயிடமே வாடகைக்கு வளர்க்கப்படுகின்றார் மோசே. 'நீ என் மகன்தான். ஆனால் என் மகனல்ல!' என்ற நினைவு அந்தத் தாயை மிகவே வாட்டியிருக்கும். நமக்கும் பல நேரங்களில் இதே அலைக்கழிப்புதான் நம் உறவுகளிலும் இருக்கும். 'இவன் எனக்கா? அல்லது எனக்கில்லையா?' 'இவள் என்னவள்தானா? அல்லது இல்லையா?' என்ற அங்கலாய்ப்பிலே பல உறவுகளை நாம் சுமக்கின்றோம். 'இவனால் நமக்கு மகிழ்ச்சியா? இவனால் நமக்குத் துயரமா?' இரண்டும் உண்டு. இரண்டும் இல்லை. இந்த உணர்வை நாம் எப்படிக் கையாள்வது?

'எடுத்ததால்' மோசே 'எடுக்கப்பட்டவன்!' என்ற பெயர் பெறுகின்றார்!

இனி மோசேக்கு அழிவில்லை!

அவர் நல்ல கைகளில் அடைக்கலமாகிவிட்டார்.

'நான் சென்று அழைத்து வரட்டுமா?'

1 comment:

  1. Anonymous10/14/2013

    Blogன் இறுதியில் காணும் வரிகள் அத்தனையும் சத்தியமான உண்மை.நாம் சுமக்கும் உறவுகளில் உள்ள அங்கலாய்ப்புகள்தான் நம்உறவைப் பலப்படுத்துகின்றன.குழநதையை மட்டுமலல, வளர்ந்த குழந்தையைப் பார்த்தாலும் உடனே தாயாக மாறிவிடும் பெண்களும் உண்டு கண்ணா.
    உண்டு கண்ணா.

    ReplyDelete