Thursday, October 17, 2013

ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?


மோசே ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்த போது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?' இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்' என்று மோசே கூறிக்கொண்டார். (விடுதலைப்பயணம் 3:1-3)

மோசே இரகுவேலின் மகள் சிப்போராவைத் திருமணம் முடிக்கின்றார். தன் மகனுக்கு 'கேர்சோம்' (அன்னியன்) எனப் பெயரிடுகின்றார். இதற்கிடையில் எகிப்தில் இஸ்ராயேல் மக்கள் படும் துன்பம் அதிகமாகின்றது. அவர்கள் கடவுளை நோக்கிக் கூக்குரல் எழுப்ப அவர் அவர்களுக்குச் செவிகொடுக்கின்றார். 

தன் சார்பாக இஸ்ராயேல் மக்களை விடுதலை செய்ய மோசேயை அனுப்பத் திருவுளம் கொள்ளும் இறைவன் அவருக்கு ஓரேபு மலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார். 'எரிகின்ற முட்புதர்' என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நடந்த இடம் இன்றும் சீனாய் மலையில் உள்ளது (?!). 

முட்புதர் எரிகின்றது. ஆனால் தீய்ந்துபோகவில்லை. இதை நோக்கிக் கண்களைத் திருப்புகின்றார் மோசே. முதலில் கடவுள் எகிப்தை நோக்கிக் கண்களைத் திருப்புகின்றார். பின் மோசே புதரை நோக்கிக் கண்களைத் திருப்புகின்றார். மோசேயின் ஆர்வத்தை இங்கே நாம் காணலாம். அது என்ன? அது ஏன்? என்று கேள்விகளை எழுப்புகின்றார் மோசே.

கடவுள் தான் விரும்பும் இடத்தில் தன்னை வெளிப்படுத்துகின்றார். ஆனால் அந்த வெளிப்பாட்டைக் கண்டுகொள்ள நம் முயற்சியும் அவசியம். நாமும் நம் கண்களைத் திருப்ப வேண்டும். 'ஏன் இப்படி?' என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். கண்களைத் திருப்புதலுமே, ஏன் என்று கேட்பதுவுமே சரணாகதி.

நமக்கு அருகில் இருப்பவரின் கண்ணீரைப் பார்க்கும்போதும், அவர்கள் தேவையில் இருக்கும்போதும் அவர்கள் எரியும் முட்புதர்களே. நாம் பார்க்காவிட்டால் ஒருவேளை அவர்கள் அணைந்து போகலாம். கண்களைத் திருப்புவோம். ஏன் கண்ணீர்? என்ன தேவை?

'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?'

1 comment:

  1. Anonymous10/17/2013

    நம்மைச் சுற்றி இருக்கும் முட்புதர்களை கண் திறந்து பார்ப்போம்.அவர்கள் கண்ணீரைத் துடைக்க முயல்வோம இது இயலவில்லையெனில் அவர்கள் கண்ணீருக்கு நாம் காரணமில்லாதவாறு பார்த்துக்கொள்வோம்.இறைவன் நம் முயற்சியை ஆசீர்வதிக்கடடும்.

    ReplyDelete