அவர் (யூதா) திரும்பிப் பாதையோரம் அவரிடம் (தாமார்) சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், 'என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?' என்று கேட்டார். அவர், 'என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாய் அனுப்புகிறேன்' என்றார். அதற்கு அவர், 'நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?' என்று கேட்டார். 'அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?' என்று அவர் கேட்க, அவர் 'உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்' என்றார். (தொடக்கநூல் 38:16-18)
சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சர்ஃப் எக்சல் டிடெர்ஜன்ட் பவுடரின் விளம்பரச் சொல் இதுதான்: 'கறை நல்லது'. இன்றைய நம் கேள்வி நமக்குச் சொல்வதும் இதுதான்: கறை நல்லது!
கொஞ்சம் சங்கோஜமான பகுதிதான் இது. விவிலியத்தில் சொல்லப்படும் இரண்டாவது இன்சஸ்ட் (தகாத உறவு). தொடக்கநூல் 37ல் யோசேப்பு இஸ்மயேலரிடம் விற்கப்பட்டு எகிப்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றார். மீண்டும் தொடக்கநூல் 39ல் யோசேப்பு போத்திபாரால் விலைகொடுத்து வாங்கப்படுகின்றார். பின் போத்திபாரின் இல்லத்தில் மேற்பார்வையாளராய் நியமிக்கப்படுகிறார். யோசேப்பின் கதை நடந்து கொண்டிருக்க, யோசேப்பு மையமான கதாப்பாத்திரமாக இங்கே இருக்க, இடைச்செருகலாக வருகிறது 38ஆம் அதிகாரம். பல வருடங்களாக இந்த அதிகாரத்தை இடைச்செருகலாக பார்த்த விவிலிய ஆய்வாளர்கள் இன்று இதை யோசேப்பின் கதையின் மையமாகப் பார்க்கின்றனர். ஏனெனில் யோசேப்பின் கதைக்கும் இந்நிகழ்வுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. இந்நிகழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளும், யோசேப்பின் நிகழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளும் ஒன்றுபோலவே இருப்பது மிகவும் ஆச்சரியமாகவும், ஆசிரியரின் எழுத்துத் திறனையும், இலக்கியப் புலமையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
ஆட்லர் என்ற விவிலிய அறிஞர் மிக அழகாக இந்த ஒற்றுமைகளை விளக்குகின்றார்.
யோசேப்பு எகிப்திற்குக் கீழே இறங்கிச் செல்கின்றார். யூதாவும் தன் அறநெறியில் இருந்து கீழே இறங்கிச் செல்கின்றார்.
யோசேப்பு தம் சகோதரர்களை விட்டுப் பிரிகின்றார். யூதாவும் தன் சகோதரர்களை விட்டுப் பிரிகின்றார்.
யோசேப்பு இஸ்மயேலர் என்ற அந்நியரோடு தொடர்பு கொள்கிறார். யூதா கானானியர் என்ற அந்நியரோடு தொடர்ப கொள்கிறார்.
யோசேப்பின் ஆடையை யூதா வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்தில் தோய்த்து, 'இதோ...பாரும்...இது...அவனுடையதா...!' என்று தன் தந்தையிடம் கேட்கின்றார். தாமார் யூதாவின் ஆடையையும், வெள்ளாட்டுக்குட்டியையும் எடுத்து, 'இதோ...பாரும்...இது...அவருடையதா!' என்று கேட்கின்றார்.
யூதாவின் மகன் ஓனானும் பாலியல் குற்றம் புரிகிறான். யூதாவும் தன் மருமகள் என்று தெரியாமலே (?) மருமகளோடு உறவு கொள்கிறார். ஆனால் யோசேப்பு போத்திபாரின் மனைவி தன்னை உறவிற்கு வற்புறுத்தியபோது தப்பித்து ஓடுகின்றார். ஒருபுறம் அறநெறி இறங்குகிறது. மறுபுறம் அறநெறி மேலோங்கி நிற்கிறது.
இவ்வளவு ஒற்றுமைகள் இருப்பதை வைத்து இதை யோசேப்பின் நிகழ்வின் ஒருபகுதியாகவே பார்க்க வேண்டும்.
யூதா தன் தந்தையின் வாக்குறுதியை விடுத்து பிற இனத்தாரிடம் பெண் கொள்கின்றார். அதுவே அவரின் காலில் கண்ணியாகச் சிக்குகிறது. தன் சகோதரனை விற்ற குற்றத்திற்காக முதல் மகனான யூதா தண்டிக்கப்படுகிறார்.
யூதாவின் செயலை சரியென்றோ, தவறென்றோ ஆசிரியர் சித்தரிக்கவில்லை. அவரின் கதையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
என்ன ஆச்சர்யம்? இயேசுவின் மூதாதையர் பட்டியலை எழுதுகின்ற மத்தேயு நற்செய்தியாளர் தாமாரின் பெயரையும், லூக்கா நற்செய்தியாளர் தாமாருக்கு யூதா வழியாகப் பிறந்த பெரெட்சின் பெயரையும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிகழ்வு நமக்கு முன்வைப்பது இதுதான்: நல்லது எது, தீயது எது என்பதைத் தீர்மானம் செய்து நாம் அல்ல, கடவுள். நம் பார்வைக்கு ஒருவர் அறநெறி தவறியவர் போலத் தெரிந்தாலும், இறைவனின் பார்வையில் அவர் மீட்புத்திட்டத்தின் கருவியாக இருக்கின்றார். ஆகையால் நம் சக சகோதர, சகோதரிகளைப் பார்த்து, 'அவன் அப்படி! அவள் இப்படி!' என்று நாம் சொல்ல முடியாது. இரண்டாவதாக, இறைவனின் பரமாரிப்பு. இறைவனின் மீட்பு வலுவற்றவைகளைத் தழுவிக் கொள்கிறது. 'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை!'
நாம் வலுவற்றவர்களாக, நோயுற்றவர்களாக, அறநெறியற்றவர்களாக, மற்றவர்களின் பார்வைக்கு அழுக்காகத் தெரிந்தால் கவலைப்பட வேண்டாம்.
கறை நல்லது!
'எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?'
கண்ணாவின் இறுதி வரிகள் அவரின. வாய் சாதுரியத்தையும், கறைபடிந்த நம் மனஙகளுக்ககு புது ஆறுதலையும் தருகின்றன. நம் முதுகின் மேல் உள்ள விட்டத்தைப் பாராது பிறர் மீது உள்ள துரும்பை சுட்டிக்காட்டும் பழக்கத்தை கைவிடுவோம். நம் கறையைத் துடைக்க முற்படுவோம்.நன்றி கண்ணா.
ReplyDelete