Wednesday, October 2, 2013

உன் பெயர் என்ன?


அப்போது ஆடவர் 'என்னைப் போகவிடு. பொழுது புலரப்போகிறது' என, யாக்கோபு, 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்' என்று மறுமொழி சொன்னார். ஆடவர், 'உன் பெயர் என்ன?' என, அவர்: 'நான் யாக்கோபு' என்றார். அப்பொழுது அவர், 'உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, 'இஸ்ராயேல்' எனப்படும். ஏனெனில் நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்' என்றார். யாக்கோபு அவரை நோக்கி, 'உம் பெயரைச் சொல்லும்' என்றார். அவர் 'என் பெயரை நீ கேட்பதேன்?' என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். (தொடக்கநூல் 32:27-29)

'அட்டாலும் பால் சுவை குன்றாது
நாவலை நட்டாலும் நண்பல்லார் நண்பல்லார்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!'

என்ற ஓளவையின் வாக்கு மெய்யாக தான் எவ்வளவு சுட்டாலும் தன் மனது எப்போதும் வெள்ளைதான் என்றுக் காட்டிவிட்டார் ஏசா. 

தனியே இருக்கின்றார் யாக்கோபு. தனியே இருக்கும் யாக்கோபிடம் ஒரு ஆடவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை!) பொழுது விடியுமட்டும் மற்போரிடுகிறார். 

இந்த நிகழ்வில் தான் யாக்கோபு, 'இஸ்ராயேல்' (இறைவனோடு போராடுகிறான்!) என்ற புதிய பெயரைப் பெறுகின்றார். புதிய பெயர் பெறுமிடத்தில்தான் ஒருவர் புதியதாகப் பிறக்கின்றார். 'கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும்' என்று சொல்லி புதிய வாழ்க்கையைத் தொடங்க இறைவன் அழைப்பு விடுக்கின்றார்.

போரிட வந்த ஆடவர் முடிவில் யாக்கோபின் பெயரைக் கேட்கின்றார். புதிய பெயரைக் கொடுக்கின்றார். யாக்கோபு திரும்ப அதே கேள்வியை ஆடவரிடம் கேட்டபோது அவர் பதில் சொல்ல மறுக்கின்றார்.

'உன் பெயர் என்ன?'

'என் பெயரை நீ கேட்பதேன்?'

நாம் எல்லாருக்குமே பெயர் இருக்கின்றது. பெயர்தான் ஒருவரின் அடையாளம். ஆகையால் தமிழில் 'பேர்' என்று ஆட்களைக் குறிக்கும் சொல் (எ.கா. நாலு பேர்) 'பெயர்' என்பதன் மருஉ ஆகவே இருக்கின்றது. 'பெயர் கெட்டு விடக்கூடாது!', 'நல்ல பெயரை எடுக்க வேண்டும்' என்றும் நாம் கவனமாய் இருக்கின்றோம்.

'உன் பேருக்கும் ஆளுக்கும் சம்பந்தமேயில்லையே!' என்று கூட நாம் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். 

இன்று தொடங்குகிற இஸ்ராயேலின் போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. 

யாக்கோபின் இந்தப் போராட்டம் நமக்கு இரண்டு செய்திகளைத் தருகின்றது:

வாழ்க்கை என்பது போராட்டம். போராட்டம் நம் வாழ்வின் எதார்த்தம். நம் பிறப்பே ஒரு போராட்டம்தான். ஆணின் விந்தணுக்களில் ஏதோ ஒன்று போட்டிபோட்டு முன்னால் ஓடி பெண்ணின் கருவோடு இணைந்துதான் நம் பிறப்பு அமைகின்றது. நாம் பிறக்கும் போதே 'சிரஞ்சீவிகள்' தாம். பலரின் சிரங்களை (தலைகளை) சீவிவிட்டுத்தான் நாம் போராடி வெற்றி பெறுகின்றோம். இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் எல்லாப் போராட்டங்களும் நமக்கு வெற்றிதாம். 'சுடும் வரை நெருப்பு. சுற்றும் வரை பூமி. போராடும் வரை மனிதர்கள்' என்பார் வைரமுத்து. போராட்டம் இல்லையென்றால் அங்கே மனிதத்தன்மையே முடிந்து விடுகிறது. 'உயிரியல் பரிணாம வளர்ச்சியில் அறிவு ஜீவிகள் அல்ல, உயரமானவை அல்ல, ஆற்றல் மிக்கவை அல்ல, மாறாக, போராடக்கூடியவை மட்டுமே வெல்லும்' என்பது டார்வினின் உயிரியல் கோட்பாடு. எல்லா நாளுமே நமக்குப் போராட்டமாகத்தான் இருக்கின்றது. நம் உணர்வுகளோடு, நம் ஆற்றல்களோடு, நம் வேலையோடு, நம் படிப்போடு, நம் பந்தத்தோடு, நம் பாசத்தோடு எனப் போராட்டங்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு போராட்டத்திலும் நாம் வெற்றி பெறும்போது நம் மனம் நம்மையறியாமலேயே நமக்கும் புதுப்பெயர் கொடுக்கின்றது. 'நீயெல்லாம் நல்லா வருவடா!' என்று சொல்கிறது. 'நீ தைரியசாலிடா!', 'நீ பயப்படாதடா', 'நீ ஜெயிப்படா!' என்று நம் ஆழ்மனம் நமக்குத் துணிவைத் தருகின்றது. துணிவே துணை.

இதே கேள்வியின் இரண்டாம் பகுதியை நாளை பார்ப்போம்.

இன்னைக்கு ஃபுல்லா ஒரே போராட்டம். அதான் சுருக்குமா முடிச்சுக்குவோம்.

'உன் பெயர் என்ன?'

2 comments:

  1. Anonymous10/03/2013

    என்ன கண்ணா, சமயங்களைப்பற்றிய(scripture)அறிவில் தான் நீங்க கில்லாடின்னு நெனச்சா எங்க. ஏரியா(Biology,Genetics etc)விலும் புகுந்து வெளயாடுறீங்க.'சிரஞ்சீவிகள்'...பெயர் காரணம் கொன்னுட்டிங்க போங்க.தொடரந்து கலக்குங்க.

    ReplyDelete
  2. Anonymous10/03/2013

    என்ன கண்ணா,சமயங்களைப் பற்றிய(scripture) அறிவில் தான் நீங்க கில்லாடின்னு நெனச்சா எஙக ஏரியா(Biology,Genetics)விலும் புகுந்து வெளயாடுறீங்க.'சிரஞ்சீவிகள' பெயர்க்காரணம்..கொன்னுட்டிங்க...போங்க.தொடர்ந்து கலக்குங்க.

    ReplyDelete