Sunday, October 27, 2013

எத்துணை நலமாயிருக்கும்!

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறர்கள்' என்றனர். (விடுதலைப்பயணம் 16:2-3)

செங்கடலைக் கடந்து வந்த இஸ்ராயேல் மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முணுமுணுக்கின்றனர். பசி எடுத்தவுடன் இறைவனின் அருட்பெரும் செயல்களை மறந்து விடுகின்றனர். 'பசி வந்தால் பத்தும் பறந்து விடும்' என்பது போல அனைத்தையும் மறந்து நிற்கின்றனர். 

எகிப்து நாட்டில் தாங்கள் உண்டு நிறைவடைந்த இறைச்சிப் பாத்திரத்தை நினைவுகூறுகின்றனர். அடிமைகளாக இருந்தாலும் பரவாயில்லை உணவு கிடைத்தால் போதும் என யோசிக்க ஆரம்பிக்கின்றனர். மேலானது எது? உரிமை வாழ்வா? ஒரு கைச்சோறா? உரிமை வாழ்வை வைத்து என்ன செய்ய முடியும்? ஒரு கைச்சோறு என்றால் கூட கொஞ்ச நேரம் பசியாறலாம்! என எதார்த்தமாக யோசிக்கின்றனர். 

Art Buchwald என்ற இலக்கிய ஆர்வலரின் புகழ்பெற்ற வாக்கியம் இதுதான்: 'the best things in life are not things!'

'எகிப்தின் இறைச்சிப் பாத்திரம்' என்பது இஸ்ராயேல் மக்களின் இறந்த காலம். அந்த இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு அவர்கள் கடந்து கொள்ளத் தடையாக இருந்தது 'இறைச்சிப் பாத்திரம்' என்னும் இறந்தகாலம். நம் வாழ்வில் நாம் முன்னால் செல்லத் தடையாக இருக்கும் இறந்தகாலக் காயம் என்ன? இறந்தகால மாயை என்ன?

'இப்படி இருந்தால் நல்லா இருக்குமே!' என்று ஏங்கிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பதை விட, 'இன்று இப்படி இருக்கிறது. இதை நான் எப்படி சாதகமாக்கிக் கொள்ளப் போகிறேன்' என யோசிக்கலாமே!

எத்துணை நலமாயிருக்கும்!

1 comment:

  1. Anonymous10/27/2013

    கடந்து போன நேறறைய தினத்தையும் இன்னும் உதிக்காத நாளைய தினத்தையும் என்ணி கவலைப்படுவதை விட நம் கையில் இருக்கும் இன்றைய நாளைப்பற்றி யோசித்தால் அளவிடற்கரிய காரியங்களை நம் கைவசப்படுத்தலாம் என்பதை அழகாக கூறியுள்ளீர்கள் கண்ணா.ஞாயிறின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete