Thursday, October 10, 2013

நான் கடவுளுக்கு இணையானவனா?


அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்;தபோது யோசேப்பு அழுதார். அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, 'நாங்கள் உம் அடிமைகள்' என்றனர். யோசேப்பு அவர்களிடம், 'அஞ்சாதீர்கள். நான் கடவுளுக்கு இணையானவனா? நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்' என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். அவர்களுடன் இதமாகப் பேசி வந்தார். (தொடக்கநூல் 50:17-21)

தன் சகோதரர்கள்தாம் தம்மிடம் தானியம் கேட்டு வந்துள்ளனர் என்று கண்டு கொண்ட யோசேப்பு அவர்களோடு 'திருவிளையாடல்' செய்கின்றார். இறுதியில் தன்னை வெளிப்படுத்துகின்றார். யோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்ற பாரவோனும், அவர்களுக்கும் அவர்களின் தந்தை யாக்கோபுக்கும் எகிப்தில் தங்குவதற்கு இடமும், உணவும் தருகின்றார். தன் மகன் கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றார் யாக்கோபு. தன் மகன் உயிரோடுதான் இருக்கிறான் என்பதைக் காணும் யாக்கோபு மற்ற மகன்கள் மேல் கொஞ்சமாவது கோபப்பட்டிருக்கலாமே. 'ஏன்டா...உயிரோடு இருக்கிற ஒரு மகனை, ஏதோ விலங்கு கொன்று விட்டது என ஏன் சொன்னீர்கள்?' 'ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?' எனக் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை. ஒருவேளை தான் பிறரை ஏமாற்றியதால் தானும் ஏமாற்றப்படுவோம் என்பதை அறிந்திருந்திருந்த ஞானி யாக்கோபோ என்னவோ?

யாக்கோபு தன் பிள்ளைகளுக்கு நிறைவான ஆசீர் வழங்கி இறந்து போகின்றார். யாக்கோபு இறந்தவுடன் சகோதரர்களுக்குப் பயம். ஒருவேளை யோசேப்பு தங்களைப் பழிதீர்ப்பாரோ என்று! இந்தப் பயத்தில்தான், 'நாங்கள் உம் அடிமைகள்' எனப் பணிகின்றனர். 'இதோ வருகிறான் கனவு காண்பவன்!' என்று சொன்னவர்கள் இன்று 'நாங்கள் உம் அடிமைகள்' என்கின்றனர். நம்மை உலகம் கேலி பேசுகிறது என்றால் ஒரு நாள் அது மீண்டும் நம் பாதம் தொடும் என்பதைக் காட்டுகிறது இந்த நிகழ்வு. இன்று நம்மை இகழ்பவர்கள் நாளை நம்மை அண்டி வருவார்கள். ஆகையால் நம்மை யாராவது புரிந்துகொள்ளவில்லையென்றாலோ, தவறாகப் புரிந்து கொண்டாலோ, கேலி செய்தாலோ கவலை வேண்டாம். விரைவில் அவர்கள் நம்மிடம் திரும்பி வருவார்கள்.

இரண்டாவதாக, யோசேப்பின் பெருந்தன்மை. 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தாம்' என்பதைக் காட்டிவிட்டார் யோசேப்பு. தான் வாழ்வில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், புரியாத மொழி பேசுகின்ற நாட்டில் விற்கப்பட்டாலும், 'என்னைக் கையைப் பிடிச்சு இழுத்தான்' என்று தவறாகப் பழி சுமத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டாலும், தன் சகோதரர்களைப் பழி தீர்க்க மறுக்கின்றார் யோசேப்பு – சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! 'என்ன இருந்தாலும் நீங்கள் என் உடன்பிறப்பு!' என அவர்களைத் தழுவிக்கொள்கின்றார்.

மூன்றாவதாக, யோசேப்பிற்கு இருந்த கடவுள் பக்தியும் நம்பிக்கையும். பிறர் நமக்கு எவ்வளவு தீங்கிழைத்தாலும், கடவுள் நமக்கு அருகில் இருந்தால் அனைத்தையும் அவர் நலமானதாக மாற்றுவார் என நம்பினார் யோசேப்பு. 'நீங்கள் தீங்கு நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை நன்மையாக மாற்றினார்'. மகாபாரதத்தின் பாரதப்போரிலும் அர்ச்சுனனை நோக்கி வருகின்ற தீமை விளைவிக்கும் அஸ்திரங்களையெல்லாம் நன்மை பொழியும் வரங்களாக மாற்றுகின்றார் தேரோட்டியாய் வந்த கடவுள் கிருஷ்ணா. கடவுளை நம் அருகில் வைத்துக்கொண்டால் நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

நான்காவதாக, யோசேப்பு பழிதீர்க்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், இன்னும் அதிக நன்மைகளை அவர்களுக்குச் செய்யத் தயாராகின்றார். 'நீ எனக்குச் செய்த தீமைக்குப் பதிலாக நானும் தீமை செய்வேன்!' என்பது மிருகத்தன்மை. 'நீ எனக்கு தீமை செய்து விட்டாய். நான் தீமை செய்ய மாட்டேன். ஆனால் என் கண்முன்னே நிற்காதே!' என்று சொல்வது மனிதத்தன்மை. 'நீ எனக்கு தீமை செய்தாய். ஆனால் நான் உனக்கு நன்மை செய்வேன்!' என்று நினைப்பது கடவுள் தன்மை. யோசேப்பு கடவுள் தன்மை பெற்று உயர்ந்து நிற்கின்றார். இதையே மேலாண்மையியலில் 'being proactive' என்று சொல்வார்கள். சாதாரண மனிதர்கள் வாழும் நிலை 'reactive' ஆனால் மேன்மக்களின் வாழ்க்கை நிலை 'proactive'

'அஞ்சாதீர்கள். நான் கடவுளுக்கு இணையானவனா?'

1 comment:

  1. Anonymous10/11/2013

    தீமை செய்பவனுக்கும் நன்மை செய்வதுதான் 'கடவுள் தன்மை' என்றால் நாமும் கடவுளர்களாக மாறுவோமே! விரித்த கரங்களில் உள்ள அந்த மலர்ந்த'பூ'...ஆஹா கண்களில் ஒறறிக்கொள்ளலாம் போல இருக்கு.மனம் நிறைந்த பாராட்டுக்கள் கண்ணாவிற்கு.

    ReplyDelete