Monday, October 21, 2013

ஏன் குழப்புகிறீர்கள்?


எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, 'மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்' என்று கூறினான். மேலும். பார்வோன், 'பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் சொல்கிறீர்கள்' என்றான். (விடுதலைப்பயணம் 5:5-6)

ஏன் குழப்புகிறீர்கள்?

ஒவ்வொரு புதிய முயற்சியையும் நாம் தொடங்குவதற்கு முன் நம்மிடம் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளும் இவைதான். 'நல்லாதான போய்க்கிட்டிருக்கு!' 'ஏன் ரிஸ்க் எடுக்கிற?' 

ஆளும் வர்க்கம் தாங்கள் அடிமைப்படுத்தியவர்கள் தங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என மட்டுமே நினைக்கின்றனர். அதுதான் 'சரி' என்றும், அதுதான் 'நடைமுறை' என்றும், அதுதான் '...' எனவும் நினைக்கின்றனர். அப்படித்தான் நினைக்கின்றான் பார்வோன். 'உங்கள் வேலைகளைப் போய்ப் பாருங்கள்!' என மோசேயையும், ஆரோனையும் அனுப்பி விடுகிறான்.

'குழப்பம்'. எந்தவொரு தெளிவிற்கு முன் நாம் கடந்து செல்லும் ஒரு பாதை குழப்பம். ஒரு சில குழப்பங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை. ஒரு சில குழப்பங்கள் தாங்களாக வருபவை. இந்த இரண்டிலும் நாம் இழப்பது மன அமைதிதான். 'எல்லாம் நல்லாய்ப் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது ஒன்று நடந்து விட்டால்,' 'வாழ்வின் முக்கியமான கட்டங்களில் முடிவுகள்' எடுக்கும் முன்னால் குழப்பம் வருகிறது.

குழப்பத்திற்குக் காரணம் என்ன? ஒன்றுக்கு மேற்பட்ட சாய்ஸ். நேராக போய்க்கொண்டிருக்கிறோம். நமக்கு முன் இரண்டு பாதைகள் இருக்கின்றன. இவைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது? ஒரு பாதை மட்டும் இருந்தால் குழப்பமே வராது. பயணம் போய்க்கொண்டே இருக்கலாம்.

அடிமைகள் இவ்வளவு நாளாக 'வேலை' என்ற ஒரே பாதையில் போய்க்கொண்டிருக்கின்றனர். இப்போது 'கடவுள்' என்ற அடுத்த பாதை வருகிறது. பார்வோனுக்குக் குழப்பம் வருகிறது: 'கடவுளிடம் அனுப்பவா?' 'வேலையை அதிகமாக்கவா?' அவன் வேலையை அதிகமாக்கி 'கடவுள்' என்னும் பாதையை அவர்கள் மனத்தில் இருந்து அழித்துவிடப் பார்க்கின்றான்.

குழப்பத்தை மேற்கொள்ள முதல் வழி: 'இலக்குத் தெளிவு'. இலக்கு இல்லாதவர்களுக்கு எல்லாப் பாதைகளும் ஒரே பாதைதான். நம் இலக்குதான் நம் பாதையைத் தெளிவாக்குகின்றது. குழப்பத்தை மேற்கொள்ள இரண்டாவது வழி: 'குழப்பத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்!' குழப்பமாக இருக்கிறது என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் மட்டும் வழி பிறந்து விடாது. 'அப்புறம் பார்க்கலாம்!' என எவ்வளவு நாட்கள் நாம் தள்ளிப்போட முடியும்? ஒரு முடிவை நாம் தான் எடுக்க வேண்டும் என்றால், அதை நாம்தான் எடுக்க வேண்டும். நல்லதோ, கெட்டதோ அதன் பலனையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் நமக்காக முடிவு எடுக்க வேண்டும் என நினைப்பதோ, நம் நலத்திற்கும், தீமைக்கும் மற்றவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்குவதும் முறைமை அல்ல.

'ஏன் குழப்புகிறீர்கள்?'

1 comment:

  1. Anonymous10/21/2013

    முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நேரங்களில் மனம் குழம்புவது இயற்கைதான் அம்மாதிரியான நேரஙகளில் நம்மூளையை மட்டுமே நம்பாமல் இறைவனிடம் முழுமையாக சரணாகதியாக வேண்டும்.அவரை சாட்சியாக வைத்து எடுக்கும் எந்த முடிவும் தோற்றுப் போகாது.இது என்வாழ்க்கை அனுபவம.கண்ணா அந்த குழந்தையின் படம் கண்ணுக்குள்ளேயே நிக்குது.பாராட்டுக்கள்.

    ReplyDelete