Thursday, October 3, 2013

என் பெயரை நீ கேட்பதேன்?


பவுலோ கொயலோ அவர்கள் இறைவாக்கினர் எலியாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதுகின்ற ஒரு நாவலின் பெயர் 'ஐந்தாம் மலை'. மிகவும் ஆழமான ஆன்மீகத்தை எளிய வார்த்தைகளில் சொல்லிவிடும் நூல். பசி, வெறுமை, தனிமை, தனிமைப்படுத்தப்படுதல், போராட்டம், சோர்வு, ஏமாற்றம், விரக்தி என நகரும் ஒரு கடவுளின் இறைவாக்கினரின் வாழ்க்கையை மிக நளினமாகச் சொல்கின்ற ஒரு நூல். எலியா அக்பர் (விவிலியத்தில் இதன் பெயர் 'செராபாத்' என்ற ஊரின் ஒரு விதவை வீட்டில் இருப்பார். அந்த விதவையின் மேல் அதீத பிரியம் உண்டாகும். அந்த விதவைக்கு ஒரு மகன் உண்டு. சின்னஞ்சிறு பையன். மிகவும் துடிப்பானவன். அவனுக்கும் ஒரு நல்ல தந்தை போல இருந்து பார்த்துக்கொள்வார். 

ஒரு நாள் எதிரிகள் அந்த ஊரைச் சூறையாடி தீக்கிரையாக்குவார்கள். அவர்கள் சேர்த்து வைத்த தானியங்கள். அவர்களின் ஒலிவத் தோட்டங்கள். அவர்களின் திராட்சைக் கொடிகள். எல்லாம் சாம்பலாகிவிடும். 

தங்களால் முடிந்த வரை பயன்படுத்தக் கூடிய பொருட்களையெல்லாம் சாம்பலிலிருந்து பிரித்தெடுப்பர். இறந்தவர்களின் உடலைச் சாம்பலாக்கி தங்கள் வயல்களில் உரமாகத் தூவி விடுவார்கள். அக்பர் நகரின் (கிராமம் தான். ஆனால் அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் நகரங்கள் என்றே அழைத்தனர்!) நம்பிக்கை என்னவென்றால் இறந்தவர்கள் தாங்கள் இறந்தபின் எல்லாமாய் மாறிவிடுகின்றனர். நாம் குடிக்கும் தண்ணீர், நாம் விதைக்கும் நிலம், நாம் அறுவடை செய்யும் தானியம், நாம் வளர்க்கும் கிளி, நம்மைச் சுற்றி வரும் வண்டு என எல்லாவற்றிலும் இறந்தவர்களின் ஆன்மா இருக்கின்றது. இந்த நம்பிக்கையில் எனக்கும் உடன்பாடு உண்டு. 'இறப்பிற்குப் பின் வாழ்வு, மோட்சம், நரகம், இறுதித்தீர்ப்பு' என்ற புரியாத வார்த்தைகளையும், சித்தாந்தங்களையும், விசுவாசங்களையும் விட அக்பர் நகர் மக்களின் எளிய நம்பிக்கை மனித எண்ணத்திற்கு உகந்ததாகவே இருக்கின்றது. நாம் ஆசை ஆசையாய் பழகிய நபர் நம்மோடே ஒரு ஈ போலவோ, பூனைக்குட்டி போலவோ, நம் மேசையில் இருக்கும் ஒரு படம் போலவோ, நம் கழுத்தில் அணியும் ஒரு நகை போலவோ மாறினால் நாம் இறப்பை வென்று விடலாம். ஆசைப்பட்டவர்களின் உடனிருப்பை எப்போதுமே நம்முடன் வைத்துக்கொள்ளலாம். பழைய ஏற்பாட்டு காலத்தின் நம்பிக்கை இதுதான். புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இந்த சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, மேற்கத்திய இறையியல் என்ற போர்வைக்குள் புகுத்தப்பட்டு இன்று நாம் 'பாவம், அதிலும் சாவான பாவம், அற்பப் பாவம், ஜென்மப் பாவம், நரகம், நெருப்பு, மோட்சம், ஒளி' என்று நாம் பயத்தாலும், குற்றவுணர்வாலும் மூச்சடைத்துப் போகின்றோம். போத்தியிருக்கும் இந்தப் போர்வை அகன்று நாம் விடுதலைக் காற்றைச் சுவாசிப்பது எந்நாளோ? 

பழைய ஏற்பாட்டு எபிரேய பாமர மக்களின் நம்பிக்கை புதிய ஏற்பாட்டு கிரேக்க படித்த மக்களின் இறையியிலை விட மேலானதாகவே இருக்கின்றது. நாம் வாழ்வது ஒரு வாழ்க்கை! அதுல போய் 'நீ செய்றது பாவம், குற்றம்' னு ஒருவர் மற்றவரைத் தீர்ப்பிட நாம யாரு? ஒரு சின்ன உதாரணத்திற்கு, 'ஜென்மப் பாவம்' என்கிற சித்தாந்தம் கிபி 4ஆம் நூற்றாண்டில் அகுஸ்தினாரால் இறையியல் கோட்பாடாக முன்வைக்கப்படுகின்றது. அப்படியென்றால் கிபி 4ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்கள் எல்லாம் 'ஜென்மப்பாவம்' இல்லாதவர்களா? அதை அகுஸ்தினார் எப்படி நிருபிப்பார்? 'தன் கட்டுக்கடங்காத பாலுணர்வுகளுக்குக் காரணம் தன் ஜென்மப்பாவம்' என எழுதும் அகுஸ்தினாரின் வார்த்தை, 'நான் ஸ்கூலுக்கு லேட்டா வர எங்க வீட்டுல இருக்குற வாட்ச் தான் காரணம்' என்று சப்பை கட்டு கட்டும் மாணவனின் வார்த்தைகள் போல இருக்கிறது.

நம் நாவலுக்குத் திரும்புவோம்!

நகர் தீக்கிரையாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின் எலியா எல்லா மக்களையும் நகரின் வாசலுக்கு முன் ஒன்று கூட்டுவார். அந்த நிகழ்வை பவுலோ கோயலோவின் வார்த்தைகளாகவே பதிவு செய்வோம்:

இரண்டு நாட்களுக்குப் பின் எலியா எல்லாரையும் ஒன்று கூட்டினார். எல்லாச் சாம்பலும் பெருக்கியாயிற்று. மாலை வேலை. சிறிய சிறிய தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் எலியா பேசத் தொடங்கினார்.

'நமக்கு வேறு வழியில்லை. இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள். வாழ்பவர்கள் நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும். வேறு ஒருவரைப் பார்த்து, 'என் வாழ்க்கையை நீ வாழ்!' என்று சொல்ல முடியாது.

இறந்தவர்களின் சாம்பல் இன்னும் சில நாட்களில் கோதுமையாய், திராட்சையாய் நம் வயல்களில் காய்த்துத் தொங்கும். நேற்று இறந்த நம் மகன்கள் இன்னும் சில நாட்களில் மீண்டும் குழந்தைகளாய்ப் பிறந்து நம் தெருக்களில் ஓடி விளையாடுவர். இன்று நம் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சிறு பிள்ளைகள் மட்டுமே ஓடித் திரிகின்றனர். சிறு பிள்ளைகளுக்கு நிகழ்காலம் மட்டுமே தெரியும். நாம் தான் நடந்ததையே நினைத்து அழுது கொண்டு இருக்கின்றோம். இந்தக் குழந்தைகளைப் போல இன்று முதல் வாழ்வோம்.

'இழப்பின் துயரத்தை இதயத்திலிருந்து துடைத்து விட முடியுமா?', கூட்டத்திலிருந்து ஒரு பெண் கேட்டாள்.

'முடியாது. ஆனால் இருப்பதில் மகிழ்ச்சி காண நம்மால் முடியும்!'

அவர்களின் நகருக்கு வடக்கே இருந்த அந்த 'ஐந்தாம் மலை'யைப் பார்த்துத் திரும்பி எலியா சொன்னார்: 'எனக்கு ஒரே கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நீங்கள் இந்த 'ஐந்தாம் மலையில்' நிறைய கடவுளர்கள் இருக்கிறார்கள் என நம்புகிறீர்கள். என் கடவுள்தான் உங்கள் கடவுள்களை விட வலிமையானவர் என்று நான் வாதாட விரும்பவில்லை. நம்மிடம் உள்ள வேற்றுமைகளைப் பற்றியல்ல. நம் ஒற்றுமைகளைப் பற்றியே பேசுகிறேன். நம் நகரின் இந்த சோக நிகழ்வு இன்று நமக்குத் தந்திருப்பது: 'despair' (விரக்தி) - தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக அமையவில்லை! ஏன் இந்த விரக்தி? ஏனென்றால் நம் மனத்தில் நாம் நினைத்துவிட்டோம் நமக்குக் கெட்டதே நடக்கக்கூடாது என்று. எல்லா நேரமும் நம் செபங்கள் கேட்கப்படுமா? எல்லா நேரங்களிலும் நல்லதே நடக்குமா? ஆபத்தில்லாத கடல் நல்ல படகோட்டியை உருவாக்குவதில்லைதானே!

நாம் எல்லாருமே போராளிகள். நாம் போராடித்தான் ஆக வேண்டும். 'எதற்காகப் போரட வேண்டும்' என அறிந்தவன் போராளி. தேவையற்றவைகளில் அவன் தன் மனத்தை அலைய விட மாட்டான். தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்வான். 'தோற்கவே கூடாது' என நினைப்பவன் போராளி அல்ல. 'தோற்றாலும் துவண்டுவிடக் கூடாது' என நினைப்பவனே போராளி. தோல்வியின் வலி அவனுக்கு கசப்பாய் இருக்கும். அந்தப் புண்களைப் பார்த்து ஊரால் கேலி செய்வர். அவன் அந்நியப்படுத்தப்பட்டவனாய் உணர்வான். ஆனால், ஒரு கட்டத்தில் தன் புண்களையெல்லாம் தானே நக்கி விட்டு புதிதாய்ப் புறப்படுவான். போராளிக்குத் தெரியும் போர் என்பது பல போர்களின் தொகுப்புதான் என்று. அவன் தொடர்ந்து போராடுவான்.

துன்பங்கள் எப்போதும் இருக்கின்றன. சிலவற்றிற்குக் காரணம் தெரியும். சிலவற்றிற்கு மற்றவர்கள் காரணம் என்போம். 'இப்படி நடக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே!' என்று கனவு காண்போம் சில நேரம். ஆனால் இவைகளில் எதுவுமே முக்கியமல்ல. துன்பங்கள் வரத்தான் செய்யும். வரட்டும். ஆனால் துன்பங்கள் கொண்டு வரும் பயத்தைத் துடைத்தெறிந்துவிட்டு புதிதாய் நம் வாழ்வைக் கட்டுவோம்.

'இன்று உங்களுக்கென ஒரு புதிய பெயரை தேர்ந்தெடுங்கள். இப்போதே! இதுதான் உங்களின் புனிதப் பெயர். இதுதான் உங்கள் கனவை நனவாக்கும். இதுதான் உங்களை ஒன்று சேர்க்கும். இதுதான் உங்கள் உள்ளங்களை ஒன்று சேர்க்கும். இனி என் பெயர் 'விடுதலை'.

அந்த இடமே அமைதி காத்தது சில நேரம். ஒரு பெண் கூட்டத்திலிருந்து எழுந்தாள். 'இனி என் பெயர் சந்திப்பு' என்றாள். 

என் பெயர் 'ஞானம்' என்றால் ஒரு முதியவர்.

எலியா மிகவும் அன்பு செய்த விதவைத்தாயின் மகன், நம் சிறுவன், கத்தினான்: 'என் பெயர் alphabet'.

கூட்டத்திலிருந்து எல்லோரும் 'ஹி ஹி' என சிரித்தார்கள். சிறுவனுக்கு அவமானமாய்ப் போய்விட்டது. முகம் வாடி அமைதியாய் அமர்ந்தான்.

'யாராவது ஆல்ஃபபெட் எனப் பெயர் வைப்பார்களா?' கேள்வி கேட்டான் மற்றொரு சிறுவன்.

எலியா குறுக்கிட்டு சிறுவனுக்காக வாதாடியிருக்கலாம். ஆனால் சிறுவனே தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்கிறான் என்று பார்ப்போம் என்று அமைதி காக்கின்றார்.

'என் அம்மா செய்தது அதுதான். எனக்கு எழுதக் கற்றுக்கொடுத்தாள். இனி எந்த எழுத்துக்களைப் பார்த்தாலும் என் அம்மாவை நான் நினைத்துக் கொள்வேன். என் அம்மா என்னோடிருக்கிறாள் என்ற சிந்தனையே எனக்கு உத்வேகத்தைத் தரும்!' அழகாகப் பதில் சொல்கிறான் சிறுவன்.

இப்போது யாருமே சிரிக்கவில்லை. ஒருவர் பின் ஒருவராக, முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெயரைத் தேர்ந்தெடுக்கின்றனர். 'எல்லாரும் சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். நாளை முதல் நாம் புதிய மனிதர்கள். விடிந்தவுடன் நமக்கு நிறைய வேலை காத்திருக்கின்றது'

எல்லோரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.

எலியா சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டு தன் குடிசைக்குச் செல்கின்றார். அவனை ஆரத்தழுவி முத்தமிடடுகின்றார். 'உன் பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சருக்கு ஆல்ஃபபெட்'

... ... ...

... ... ...

பின் நாட்களில் அந்தச் சிறுவன் அனைவருக்கும் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறான். பைப்பைரஸ் கண்டுபிடிக்கப்படுகிறது. தன்னைப் பற்றி, தன் ஊரைப் பற்றி, தன் அம்மாவைப் பற்றி அவன் நிறைய எழுதுகிறான். தன் பெயராகவே மாறிவிடுகிறான்.

'பெயரில் என்ன இருக்கிறது?' என்ற கேட்டுவிட முடியாது. பெயரில் நிறையவே இருக்கிறது. இன்றைக்கு நாம் ஒரு பெயர் எடுப்போம். அந்தப் பெயரைச் சொல்லும்போதெல்லாம் நாம் புதிதாய்ப் பிறப்போம்.

'என் பெயரை நீ கேட்பதேன்?'

1 comment:

  1. Anonymous10/03/2013

    கண்ணா,என்மகனே, அந்சத்சிறுவன் ஆல்ஃபபெட்டின் வடிவில் நான்உன்னைப் பார்க்கிறேன் உன்சொந்த மண்ணின் ஆல்ஃபபெட்டை நீ சென்றுள்ள மண்ணில் பரப்பிஅங்குள்ள ஆல்ஃபபெட்டை நீ கிரகித்து இரண்டின் மொத்த கலவையாக அந்த 'ஐந்தாம் மலை உச்சியில் உன்னைக் காண விழைகிறேன் செய்வாயா?

    ReplyDelete