எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது: 'எபிரேயப் பெண்களின் பிள்ளைப்பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள். ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள். பெண்மகவு என்றால் வாழட்டும்' ... எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, 'ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?' என்று கேட்டான். (விடுதலைப்பயணம் 1:15-16,18)
யோசேப்பை முன்பின் அறியாத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றுகிறான். எல்லாம் தலைகீழாய் மாறுகின்றது. புதிய மன்னனுக்குப் பயம். யாரைப் பார்த்து? இஸ்ராயேல் மக்களைப் பார்த்து. எதற்காக? தங்களை விட மிஞ்சிவிடுவார்கள் என்றும், தங்கள் பகைவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்றும். ஆகையால் இஸ்ராயேல் இனம் வளர்வதைத் தடுக்க நினைக்கிறான்.
முதலில் இருப்பவர்களை வதைப்போம் என எண்ணுகிற மன்னன் கொடிய வேலைப்பளுவினால் அவர்களை வேதனைக்குட்படுத்துகிறான். 'அவர்கள் வாழ்க்கை கசந்து போகும்படி செய்கிறான்!' – எவ்வளவு பெரிய கொடுமை. அடுத்தவர்களின் வாழ்க்கை அவர்களுக்குக் கசந்து போகும்படி செய்வது மிகப்பெரிய பாவம். அடுத்துவர்களின் வலியில் இன்பம் காணத் துடிக்கிறான் பாரவோன் மன்னன்.
அடுத்ததாக, புதிய பிறப்பைக் கட்டுப்படுத்த எண்ணுகிறான். 'பெண்மகவு என்றால் வாழட்டும். ஆண்மகவு என்றால் அழித்துவிடுங்கள்' என மருத்துவப் பெண்களுக்குக் கட்டளை இடுகிறான். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. காலந்தோறும் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் ஆண்களே அழிக்கப்படுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு இணைய தளத்தில் வித்தியாசமான செய்தியைப் பார்த்தேன். செய்தியின் தலைப்பு: 'யார் பெரியவர்? ஆணா? பெண்ணா?' அந்தக் கட்டுரையை நிறைவு செய்கின்ற ஆசிரியர் இப்படி முடிக்கின்றார்: 'இந்த உலகில் நாம் எல்லோரும் ஒரு நாள் அழிந்து விடுகிறோம் என வைத்துக்கொள்வோம். மனித இனத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரே ஒரு பெண் மிஞ்சினால் போதும். நாம் நமது ஆய்வுக்கூடங்களில் சேர்த்து வைத்துள்ள விந்தணுக்களை வைத்து அவள் பெரிய இனத்தையே உற்பத்தி செய்து விடுவாள். ஒரே ஒரு ஆண் மட்டும் மிஞ்சினால் அவனால் தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய இயலாது. ஆண்கள் இனித் தேவையில்லை. பெண்கள் மட்டும் போதும்!'
எதற்காக ஆண் குழந்தைகளைக் கொலை செய்யத் தூண்ட வேண்டும்? ஆண் குழந்தைகள் வளர்ந்தால் போர்ப்பயிற்சி பெற்று பகைவர்களோடு சேர்ந்து விடுவார்கள் என்ற பயம். பெண் குழந்தைகள் வளர்ந்தால் தங்கள் அரண்மனையில் வேலைக்கு அமர்த்துக்கொள்ளாலாம் என்று நினைத்திருக்கலாம். பெண்களை எளிதாக மடக்கிவிடலாம் என்ற சித்தாந்தம் விடுதலைப்பயண நூல் காலத்திலேயே இருந்திருக்கிறது. பெண்ணைச் சக்தியாகவும் பார்க்கும் சமுதாயம், அதை பலவீனமாகவும் பார்ப்பது விந்தையாக இருக்கிறது.
பாரவோனின் 'birth control' முறை பலன்தரவில்லை. அதற்குக் காரணம் மருத்துவப் பெண்களின் நற்குணம். அவர்கள் குழந்தைகளின் வாழ்வை அழிக்க விரும்பவில்லை. இன்றைக்கு contraception, abortion, family planning என பல நிலைகளில் 'birth control' பேசப்படுகிறது. இது தேவையா? வேண்டாமா? என்று. ஆனால் திருச்சபை காலங்காலமாக தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கிறது. 'குழந்தையின் வாழ்வை அழிக்க நமக்கு உரிமை கிடையாது'. உயிர் கடவுளிடமிருந்து வருகிறது. அந்த உயிரோடு விளையாட நாம் நினைத்தால் அது கடவுளோடு விளையாடுவதற்கு இணையானது. தன்னையே கடவுளாக்கிக் கொள்ளும் எந்த இனமும் விரைவில் அழிந்துவிடும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம். அறிவியலால் ஒரு உயிரை உருவாக்க முடிந்தால் அதற்கு அழிப்பதற்கு உரிமை உண்டு எனலாம். ஆனால் நம் அறிவியல் விஞ்ஞானத்தால் புதிய உயிரை உருவாக்க முடியவில்லை. இந்த இடத்தில் நம் அறிவியல் தோற்றுத்தான் போகிறது.
இந்த விவிலியப் பகுதியை வாசிக்கும் போது பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. 'பெண்ணாய்ப் பிறத்தல்' என்பது சாபமாக இன்னும் ஒருசிலர் மனதில் ஓடத்தான் செய்கிறது. மற்றொரு பக்கம், கருவறையில் தப்பிக்கும் பெண் கல்லறை வரை காயங்கள் பட்டுக்கொண்டேதான் இருக்கிறாள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 'இல்லறம் என்னும் கிரிக்கெட்டில் சமையலறைக்கும், படுக்கையறைக்கும் ரன் எடுத்தே அவுட் ஆகி விடுகிறாள் பெண்' என்பார் வைரமுத்து.
விடுதலைப்பயணத்தின் முதல் கேள்வியே நமக்குச் சொல்வது இதுதான்: உயிர் மதிப்புள்ளது. ஆணோ, பெண்ணோ அனைவருமே உயிர் என்ற அடிப்படையில் சமமே. வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. 'நீ வாழக்கூடாது!' என்று பிறரைச் சொல்ல எந்த தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ, அரசிற்கோ அதிகாரம் இல்லை!
வாழ்வை மதிப்போம். வாழ்வை இனிதாய் வாழ்வோம். வாழ்வோம். பிறர் வாழ வழி விடுவோம்!
'ஏன், இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?'
No comments:
Post a Comment