Saturday, October 5, 2013

உன்னை வணங்க வேண்டுமா?


அப்பொழுது யோசேப்பின் சகோதரர் அவரை நோக்கி, 'நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப்போகிறாயோ? ... அவர் தந்தை அவரைக் கண்டித்து, 'நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?' என்று கேட்டார். அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார். (தொடக்கநூல் 37:8,10-11)

சிறந்த பணிகளில் அமர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தங்களுக்கு கற்றுக்கொடுத்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரைச் சந்திக்கச் சென்றனர். அது ஒரு அந்தி மாலை வேளை. உரையாடல்கள் நலம் விசாரிப்பதில் தொடங்கி தங்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் உள்ள விரக்தி மற்றும் அழுத்தம் என புகார்களாக மாறின. வந்திருந்த விருந்தினர்களை உபசரிக்க விரும்பிய பேராசிரியர் காபி கொடுப்பதற்காக சமையலறைக்குச் சென்றார். ஒரு பெரிய கோப்பையில் காபியையும், மற்றொரு தட்டு நிறைய தேநீர்க் கோப்பைகளையும் எடுத்துக் கொண்டார். தேநீர்க் கோப்பைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன. ஒருசில மரத்தால் செய்யப்பட்டவை, ஒருசில சீனக்களிமண்ணால் செய்யப்பட்டவை, ஒருசில எஃகால் செய்யப்பட்டவை, ஒருசில வேலைப்பாடுகள் மிகுந்தவை. ஒருசில பிளாஸ்டிக்கால் ஆனவை. தன் மாணவர்கள் முன்னால் காபியையும், தேநீர்க்கோப்பைகளையும் வைத்து விட்டு அவர்களை தங்களுக்குத் தாங்களே பரிமாறிக் கொள்ளச் சொன்னார்.

எல்லோரும் காபியை கையில் எடுத்தபின் பேராசிரியர் சொன்னார்: இப்போது கவனித்தீர்களா. இந்தத் தட்டிலிருந்த தேநீர்க் கோப்பைகளில் விலைமதிப்புள்ளவையும், வேலைப்பாடுள்ளைவையும் எடுத்துக் கொள்ளப்பட்டன. விலைமதிப்பில்லாதவையும், சாதாராணமானவையும் தட்டிலேயே இருக்கின்றன. மிகச் சிறப்பானதுதான் உங்களுக்கு வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதுதான் நமது மனஅழுத்தத்திற்கும், விரக்திக்கும் தொடக்கம். காபியை தாங்கியிருக்கும் கோப்பை காபியின் தரத்திற்கு எதையும் சேர்ப்பதில்லை. சில சமயங்கில் காபியைவிட கோப்பை விலை கூடுதலாக, காபியை மறைப்பதாக இருக்கின்றது. நீங்கள் கேட்டது காபியைத்தான், கோப்பையை அல்ல. ஆனால் நல்ல கோப்பையைத் தேர்ந்தெடுப்பதிலேயே நீங்கள் கருத்தாய் இருந்தீர்கள். அத்தோடு நில்லாமல் ஒருவர் மற்றவரின் கையிலுள்ள கோப்பையைப் பார்த்து பொறாமைப்பட்டீர்கள். பணம், புகழ்,
போன்றவையெல்லாம் தேநீர்க் கோப்பைகள். அவைகளெல்லாம் காபியை தாங்குகின்ற வெறும் கருவிகள்தாம். அவைகள் நமது வாழ்க்கையின் தரத்தைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. சில நேரங்களில் கோப்பையைப் பற்றியே கவலைப்படுவதால் காபியை ரசிக்க மறந்துவிடுகிறோம். காபியை ரசிக்க வேண்டும். கோப்பையை அல்ல.

இன்றைய கேள்வியின் பின்புலத்தில் இருப்பது: 'பொறாமை'. அன்பு இருக்கும் இடத்தில்தான் பொறாமை இருக்கும். அன்பு பகிரப்பட்டால் பகிரப்பட்டவர்மேல் பொறாமை வருகிறது. தன் சகோதரனோடு தங்களை ஒப்பிடுகின்ற சகோதரர்கள் பொறாமை கொள்கின்றனர். இந்தப் பொறாமை பகையாக மாறுகிறது.

வாழ்க்கை என்ற தேநீர் நம் அனைவருக்கும் ஒன்றுதான். அது வரும் கோப்பைதான் நமக்கு பொறாமையைத் தருகின்றது. ஒருவர் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசத் தூண்டுகிறது.

தேநீரை ரசிப்போம். கோப்பையை அல்ல!

'தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?'

2 comments:

  1. Anonymous10/05/2013

    I'm reminded of the play enacted by our students'Joseph's multicoloured coat'கோப்பையை கண்டு கொள்ளாமல் தேநீரை மட்டும் ரசிக்கலாம்தான் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.இருப்பினும் முயற்சிக்கலாம் கண்ணாவின் அறிவுரைக்கு நன்றிகள்.

    ReplyDelete