Wednesday, October 16, 2013

ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்?


எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று. அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க ... ... அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், 'என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?' என்றார். அவர்கள், 'எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான். ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்' என்றார்கள். அவர் தம் புதல்வியரிடம், 'எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்' என்று கூறினார். (விடுதலைப்பயணம் 2:15,18-20)

மோசே பாரவோனிடமிருந்து தப்பியோடி மிதியான் நாட்டிற்குச் செல்கின்றார். ஈசாக்கு, யாக்கோபின் வாழ்வில் நடந்தது போலவே கிணற்றடியில் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது. இரகுவேல் என்ற அர்ச்சகரின் புதல்வியரின் உதவி செய்கின்றார். மகளிரின் நல்லெண்ணெத்தையும் அவர்களின் தந்தையின் நல்லெண்ணத்தையும் பெறுகின்றார். 

தங்கள் தந்தையரிடம் அவர்கள் சென்று மோசேயைப் பற்றிச் சொல்லும்போது அவரை 'எகிப்தியன்' எனக் குறிப்பிடுகின்றனர். 

மோசேயின் நல்லுள்ளம் இங்கே தென்படுகிறது. கிணறு, தண்ணீர் என்ற சொல்லாடல் பின்னால் நடக்கவிருக்கும் நிகழ்வை முன்னுரைப்பதாக அமைகின்றது. இடையர்களை விரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்தது போல, எகிப்தியரிடமிருந்து இஸ்ராயேல் மக்களை மீட்டு, செங்கடல் என்னும் தண்ணீரைக் கடந்து, பாலைவனத்தில் அவர்கள் வாழ்வு பெறத் தண்ணீர் அளிப்பார் என்ற நிழல் இக்கிணற்றடியில் விழுகிறது. 

மற்றொரு பக்கம், இரகுவேலின் நன்றியுள்ளம். ஏதோ ஒரு அந்நியன் உதவி செய்தான் என்று நின்றுவிடாமல் உடனடியாக நன்றிக்கடன் செலுத்துகின்றார். 'இதோ! ஒருவன் கிணற்றடியில் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டுவான். அவரே உன் மருமகன்!' என்று யாரும் அவருக்கு இறைவாக்குச் சொன்னார்களா? 'தண்ணீர் காட்டியதற்கு' நன்றியாக தன் மகளையே அவரால் எப்படிக் கொடுக்க முடிந்தது? 

இன்று இரகுவேல் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்: 'பிரபஞ்சத்தின் வலை'. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு வலைப்பின்னல்தான். ஒன்று மற்றொன்றோடு இணைந்திருக்கின்றது. ஒரு இடத்தில் சங்கிலி அறுந்துவிட்டாலே அது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே பாதிக்கின்றது. நமக்கு ஒருவர் நல்லது செய்தால், அதற்குப் பதிலாக அவருக்கோ, அல்லது வேறு ஒருவருக்கோ நல்லது செய்து விட வேண்டும். இப்படியே நன்மை தொடர்ந்தால் அது நம்மிடமும் வந்துகொண்டேதான் இருக்கும். 

'எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்?'

1 comment:

  1. Anonymous10/16/2013

    "நன்றி"...இவ்வார்த்தை நான் சிறு வயதில் படித்த செய்யுளை நினைவு படுத்துகிறது நாம் ஊற்றும் வெறும் நீரைத் தன காலால் அருந்தி அதை சுவைமிகு இளநீராக தன் தலை வழியே நமக்குத் தருகிறதே 'தென்னை'....'நன்றி'யை சொல்லித்தர இதைவிட யார் வேண்டும்?

    ReplyDelete