Thursday, October 17, 2013

உன் கையில் இருப்பது என்ன?


மோசே மறுமொழியாக, 'இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள். என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில் 'ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை' என்று சொல்வார்கள்' என்று கூறினார். ஆண்டவர் அவரை நோக்கி, 'உன் கையில் இருப்பது என்ன?' என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர். 'அதைத்தரையில் விட்டெறி' என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார். (விடுதலைப்பயணம் 4:1-3)

பழைய ஏற்பாட்டின் அழைத்தல் நிகழ்வுகள் எல்லாம் ஒரு ஃபார்முலாவால் கட்டப்பட்டுள்ளன. 

1. சந்திப்பு. கடவுள் யாரைத் தன் பணிக்காக அழைக்கின்றாரோ அவர்களைச் சந்திக்கின்றார். மோசேயைக் கடவுள் சந்திக்கும் இடம் எரியும் முட்புதர்.

2. வாழ்த்து. 'மோசே, மோசே' என அழைக்கின்ற கடவுள் அவருக்குத் 'தான் யார்' என்பதை வெளிப்படுத்துகின்றார். 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே' என்றுரைத்தார். 

3. பணி ஒப்படைப்பு. 'இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே இப்போதே போ! ... நான் உன்னை அனுப்புகிறேன்'.

4. அழைக்கப்பட்டவரின் தயக்கம். 'பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?'

5. கடவுளின் வாக்குறுதி. 'நான் உன்னோடு இருப்பேன்'.

6. வாக்குறுதியின் அடையாளம். 'இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே'.

இந்த 6 படிகளுமே மோசேயின் அழைப்பில், கிதியோனின் அழைப்பில், எரேமியாவின் அழைப்பில் வெளிப்படையாகத் தெரிந்தாலும், மற்றவர்களின் அழைப்பு நிகழ்வுகளில் அவைகள் மறைமுகமாக மிளிர்கின்றன.

மோசேக்குக் கடவுள் காட்டும் முதல் அறிகுறி: 'கைத்தடி பாம்பாக மாறுவது'. 

'உன் கையில் இருப்பது என்ன?'

கடவுளின் அறிகுறி எகிப்து நாட்டில் இன்னும் மேன்மையாக வெளிப்பட்டாலும் முதலில் மோசேயின் கையில் இருந்தே தொடங்குகிறது. 'கையில் இருப்பவற்றைக் கொண்டே' நமக்கு அறிகுறிகளை நிகழ்த்த வல்லவர் நம் கடவுள். அறிகுறிகள், அற்புதங்கள் என நாம் எங்கெங்கோ ஓடுகிறோம். ஆனால் அற்புதங்கள் நம் கண்களுக்கு முன்னாலேதான் எப்போதும் நடக்கின்றன. நம் மனத்தோடு ஒத்துழைக்கும் நம் உடல் ஒரு அற்புதம். நாம் கண்விழிப்பது, சுவாசிப்பது, உண்பது, உறங்குவது, நடப்பது, வெளியே சென்றால் பத்திரமாய் வீடு திரும்புவது, தங்குவதற்கு வீடிருப்பது, நம்மைத் தேட உறவுகள் இருப்பது என நாம் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளோம். 'ஆழிசூழ் உலகு!' என நாம் நம் உலகை அழைத்தாலும் இது 'அற்புதம்சூழ் உலகுதான்!'.

இரண்டாவதாக, கையிலிருப்பவற்றைப் பார்ப்பது. 'வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் ஐந்தும் மூலதனம்' என்பார்கள். நம் வாழ்வின் பிரச்சனைகக்கு விடை பல நேரங்களில் நம்மிடம் தான் இருக்கின்றது. நம்மிடம் தேடுவதை விட்டுவிட்டு நாம் மற்றவைகளில், மற்றவர்களில் தேடுகிறோம். ஒரு நிமிடம் உட்கார்ந்து நம்மையே உற்றுப் பார்த்தால், நம் எண்ணங்களை உற்றுக் கவனித்தால் விடை கிடைத்துவிடும்.

'உன் கையில் இருப்பது என்ன?'

1 comment:

  1. Anonymous10/17/2013

    இஸரேல் மககளின் அழுகுரல் கேட்டு அவர்களோடு இருப்பதாக வாக்களித்த இறைவன் நாம்கூவி அழைக்கும் நேரங்களில் நம்முடனும் வந்து தங்குகிறார்.அவரை எதற்காக 'அபிரகாமின் கடவுள்', 'ஈசாக்கின் கடவுள்' என்று பெயரிட வேண்டும்? கண்ணாவின் கடவுள்,கண்ண்ம்மாவின் கடவுள் என அழைக்கலாமே!


    ReplyDelete